

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற, உங்களுக்கு நிறையப் பேரைத்தெரிந்திருக்க வேண்டும். அப்படிதெரிந்து கொள்ள, முதலில் எல்லோருடனும் சகஜமாகப் பேச முன்வர வேண்டும். வேலை, தொழில், உறவு, நட்பு என எல்லாவற்றுக்கும் அடிப்படை, ‘பேச்சு’ தான்.
அது சிறப்பாக அமையும்போது, உறவு சிறப்பாக அமைவதுடன் நம்முடைய காரியங்களையும் சாதித்துக் கொள்ள முடியும். எனவே, சுலபமாக பேச்சைத் தொடங்குவதற்கான 5 உத்திகள் இதோ..
1. பேச்சைத் தொடங்க கூச்சப்படாதீர்கள்!
பேச்சைத் தொடங்குவதற்கு முன் தோன்றும் கூச்சம் அல்லது தயக்கம்தான் நமது முதல் எதிரி. 'அடுத்தவர் என்ன நினைப்பாரோ?' என்கிற சிந்தனையே நம்மைப் பேச விடாமல் செய்துவிடும்.
உங்களிடம் யாராவது தாமாக முன்வந்து பேசினால், நீங்கள் அவரை தவறாக நினைப்பீர்களா.. என்ன? அதுபோலத் தான்.. நீங்கள் பேசினாலும் அடுத்தவர் உங்களைத் தவறாக நினைக்கப் போவதில்லை.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது, அருகில் இருக்கிற தெரியாதவரோடு பேச்சைத் தொடங்க, முன்பெல்லாம், "உங்க ஊர்ல மழை எப்படி?" என்று கேட்பார்கள். ஆனால், இப்போது வாட்ஸ் அப், டி.வி., வெதர்மேன்கள் வந்துவிட்டபடியால் அந்தக் கேள்விக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
ஆனாலும் பேச்சைத் தொடங்க விரும்புபவர்கள், "சார், உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே" என்று தொடங்கலாம். இல்லையெனில், FORD என்ற நான்கு கோணங்களில் கேள்விகளைக் கேட்கலாம்.