பரிசு மழையில் மோடி

பரிசு மழையில் மோடி
Updated on
2 min read

பதவியேற்ற ஓராண்டில் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. 14 மாதங்களில் 26 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நேபாளத்துக்கு மட்டும் 2 முறை பயணம் செய்துள்ளார்.

பரஸ்பரம் புரிதலை வெளிப்படுத் தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் அவர் பயணம் மேற்கொண்டிருந்தாலும், தங்கள் நாட்டுக்கு வந்த விருந்தாளியான இந்திய பிரதமரை கவுரவிக்கும் விதமாக அந்தந்த நாட்டு தலைவர்கள் அளித்த பரிசுப் பொருள்களும் ஏராளம். இவருக்குக் குவிந்த பரிசுப் பொருள்களின் எண்ணிக்கை 65. இவற்றின் மதிப்பு ரூ. 3.11 லட்சமாகும். இதில் வைரம் பதித்த கோட் கஃப் லிங் மதிப்பு மட்டும் ரூ. 75 ஆயிரமாகும்.

மோடிக்கு குவிந்த பரிசுகளில் போர்சலீன் டிஷ், அந்த நாட்டு ஆலயங்களின் மாதிரிகள், ஓவியங்கள், தரை விரிப்புகள், புகைப்படங்கள், ஆபரணங்கள் இவை அடங்கும். 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மேற்கொண்ட பயணத்தின் போது கிடைத்த பரிசுப் பொருள்களின் மதிப்பு ரூ. 83.72 லட்சமாகும். 2010-ம் ஆண்டில் இவருக்கு ரூ. 20.91 லட்சம் மதிப்பிலான தங்க வாள் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர அளிக்கப்பட்ட ஆபரணங்களின் மதிப்பு ரூ. 48.93 லட்சமாகும்.

மேஜை கடிகாரம், பேனா, பூஜை விரிப்பு, பசுபதிநாதர் சிலை மற்றும் தங்கத்தாலான பெட்டி ஆகியவையும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பரிசாக கிடைத்துள்ளது. இதேபோல சோனியா காந்தி மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களின் மதிப்பு ரூ. 3.84 லட்சமாகும். இதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிரேஸ்லெட் அடங்கும். தற்போது வெளியுறவு அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜுக்கு கிடைத்த பரிசுப் பொருள்களின் மதிப்பு ரூ. 4.83 லட்சமாகும்.

சேலைகள், ஆபரணங் கள், ஓவியங்கள், டின்னர் செட், கைக் கடிகாரங்கள், பேனா, பட்டு சால்வை, சீன உணவு, ஃபோட்டோ பிரேம், நாக தேவி தாமிர சிலை, வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை, உலோகத்தாலான டிராகன், டேப்லெட் கம்ப்யூட்டர், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் ஆகியனவும் இவரது பயணத்தின்போது பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், அதிகாரிகள் வெளி நாட்டு பயணத்தின்போது அளிக் கப்படும் பரிசுப் பொருள்கள் அனைத்தும் வெளியுறவு அமைச்சக கருவூலத்துக்கு அனுப்பப்படும். அவற்றின் மதிப்பு ரூ. 5 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால், அதை சம்பந்தப்பட்ட நபர் எடுத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை அந்த பரிசுப் பொருள் பிடித்திருந்தால் அதன் மதிப்பு கூடுதலாக இருப்பின், கூடுதல் தொகையை செலுத்தி அதை எடுத்துச் செல்லலாம். அரசு கஜானாவுக்கு கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வந்த விலை உயர்ந்த பரிசுப் பொருளில் ஒன்று நெக்லஸ் மற்றும் தோடு. இதன் மதிப்பு ரூ. 35 லட்சமாகும். இது பிரதமருக்கு வந்த பரிசுப் பொருளாகும்.

அமைச்சர்களில் அதிக அளவில் பரிசுப் பொருளைப் பெற்றவர் பிரத மருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவருக்கு 37 பரிசுப் பொருள்கள் வந்துள்ளன. குடியரசுத் துணைத் தலைவர் ஹமித் அன்சாரிக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது கிடைத்த பரிசுப் பொருளின் மதிப்பு ரூ. 13,800 ஆகும். பரிசுப் பொருள்களை அளிக்கும் நாடுகள் அதுபற்றிய விவரங்களை வெளியிடுவதில்லை.

ஆனால் இந்தியா வுக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களின் விவரம் புகைப்படத்தோடு இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. 5 வெளிநாட்டு பரிசுப் பொருள்களை மட்டும் தனது இல்லத்தில் வைத்துள்ளார் மோடி. கையால் செய்யப்பட்ட வெள்ளிப் பெட்டி (ரூ.20 ஆயிரம்), மரத்தில் செதுக்கப்பட்ட ஒரு வீரனின் சிலை, வெள்ளி அலங்கார வேலைப்பாட்டுடன் செராமிக் பூச்சாடி, செராமிக் பௌல், ஒரு செராமிக் தட்டு ஆகியன அவரது அதிகாரபூர்வ எண் 7 ரேஸ் கோர்ஸ் சாலை வீட்டில் வைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in