ரத்தன் டாடாவின் புதிய முகம்

ரத்தன் டாடாவின் புதிய முகம்
Updated on
1 min read

டாடா குழும தலைவர் பதவியில் 21 ஆண்டு இருந்து, கடந்த 2012-ம் ஆண்டு ரத்தன் டாடா ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் இன்னுமும் பிஸினஸ் செய்திதாள்களில் அடிக்கடி முதல் பக்க செய்தியாக வருகிறார்.

தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சில காலம் அமைதியாக இருந்த டாடா இப்போது பல இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். இவர் முதலீடு செய்த பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சந்தையில் கூடுதல் கவனம் கிடைத்து வருகிறது. முதலீடு பெற்ற நிறுவனர்கள் டாடாவின் முதலீட்டையே பெரிய வெற்றியாக கருதுகிறார்கள்.

ஓய்வுக்கு பிறகு அமெரிக்காவை சேர்ந்த மின் துறை நிறுவனமான Altaeros Energies நிறுவனத்தில் தன்னுடைய முதல் முதலீட்டை செய்தார்.

அதன் பிறகு வளர்ந்து வரும் துறையான இ-காமர்ஸ் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய ஆர்என்டி அசோசியேட்ஸ் நிறுவனம் மூலம் இத்தகைய முதலீட்டை மேற்கொள்கிறார்.

இ-காமர்ஸ் துறையில் முதலில் ஸ்நாப் டீல் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதை தொடர்ந்து புளுஸ்டோன், அர்பன்லேடர், கார்டெகோ, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், ஜியோமி, கார்யா, ஜங்கிள் வென்ச்சர்ஸ், ஓலா, கிரமீன் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்தார். மிக சமீபத்தில் கோவையை சேர்ந்த ஆம்பிரே நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.

இத்தனை நிறுவனங்களில் இவர் முதலீடு செய்திருந்தாலும் எவ்வளவு தொகையை முதலீடு செய்திருக்கிறார், எத்தனை சதவீத பங்குகளை வைத்திருக்கிறார் என்பது பற்றிய தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிறுவனங்களில் ஏன் முதலீடு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது அவசியம். இந்தியாவில் திறமையான நபர்கள் இருக்கிறார்கள், அதற்கு ஏற்ப வாய்ப்புகளும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் 1970களில் இருந்த நிலைமை இப்போது இந்தியாவில் உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்து வருவது ஒரு பிரச்சினைதான் என்றாலும், எனக்கு இந்த துறையை பற்றி எதுவும் தெரியாது, இதைப்பற்றி கருத்து ஏதும் கூற முடியாது, நான் கற்று வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

பெரும்பாலான பிஸினஸ் தலைவர்கள், ஓய்வுக்கு பிறகு பிஸினஸ் பற்றிய கவலை வேண்டாம் என்று நினைப்பார்கள். ஓய்வுக்கு பிறகு பிஸினஸுக்கான இடம் கடைசியில்தான் இருக்கும். மிகச்சிலர் தனது அனுபவங்களை புத்தகமாக எழுவதுவார்கள். தன் வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுவார்கள். மிகமிகச்சிலர் தொழில்முனைவினை ஊக்குவிப்பார்கள். அந்த மிகமிகச் சிலரில் ரத்தன் டாடாவும் ஒருவர்.

டாடா முதலீடு செய்த நிறுவனங்கள்

ஸ்நாப்டீல், புளுஸ்டோன், அர்பன்லேடர், கார்டெகோ,

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்,(பேடிஎம்) ஜியோமி, கார்யா,

ஜங்கிள் வென்ச்சர்ஸ், ஓலா, கிரமீன் கேபிடல்,

அல்டெரோஸ் எனர்ஜீஸ், ஆம்பிரே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in