

திருப்பூரில் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்துவருகிறார் எஸ்.கிரி பிரசாத். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது போட்டியாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். பத்து பேர் பங்கு போட்டுக்கொண்ட சந்தையை இப்போது பதினைந்துபேர் பங்கு போடவேண்டியிருக்கிறது என்கிறார்.
புதிதாக பலரும் இந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சந்தையின் தேவை அவர்களையும் வரவேற்கிறது என்கிறார் இந்த இளைஞர்.
கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ் மெண்ட் படித்தவர் இவர். அங்கிருந்து இந்தத் தொழிலுக்கு வந்த பின்புலம் என்ன? தொழிலில் அனுபவம் எப்படி என்பதை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
புத்தகங்கள் மூலம் சொந்தத் தொழிலில் வெற்றி பெற்றவர்களது அனுபவங்களைப் படிப்பேன். அதுதான் சொந்தமாக இறங்கும் துணிவைக் கொடுத்தது. ஐந்து ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பிறகு சிறிய முதலீடு மற்றும் வங்கிக்கடன் மூலம் நண்பர்களோடு சேர்ந்து பாக்குமட்டை தட்டு செய்யும் தொழிலில் இறங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தொழிலை மேற்கொண்டு கவனிக்க முடியவில்லை.
உடல்நலம் தேறியதும் கடன்களை அடைப்பதற்காக மீண்டும் வேலைக்கு செல்லத் தொடங்கினேன். ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். மீண்டும் சொந்த தொழில் ஆசை வந்துவிட்டது. இப்போது பேப்பர் கப் தொழிலில் இறங்கினேன்.
இந்தத் தொழிலுக்கான இயந்திரங்கள், மூலப்பொருள், சந்தை பிடிப்பது போன்ற ஆரம்ப கட்ட வேலைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் சிவகாசி, கோயம்புத்தூர் என அலைந்திருக்கிறேன். மூலப்பொருட்கள் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கும். இயந்திர உற்பத்தியாளர்கள் யார் என்பது போன்ற விவரங்களை எனது தேடலின் மூலமே தெரிந்து கொண்டேன்.
அது போல சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையில் என்ன விலை விற்கிறது என கடைகளில் சென்று விசாரிப்பேன். இந்த ஆரம்ப வேலைகளுக்குப் பிறகுதான் தொழிலில் துணிந்து இறங்கினேன். எந்த பயிற்சியும் கிடையாது. இயந்திரம் கொடுத்தவர்கள் உதவியோடு நானே உற்பத்தி செய்தேன்.
மற்றவர்களைவிட குறைவான தொகைக்கு விற்பனை செய்து சந்தைக் குள் நுழைந்தேன். நிரந்தர வாடிக்கை யாளர்களை உருவாக்கினேன். இப்போது அனைத்து மாதங்களிலும் ஆர்டர்கள் கிடைக்கிறது. ஒரு இயந்திரம் மூலம் தொழிலைத் தொடங்கினேன். தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். நேரடியாக 6 நபர் களுக்கு வேலை கொடுக்க முடிகிறது.
இப்போது தொழில் போட்டிகள் அதிகரித்துவிட்டது. இந்த தொழிலில் ஒருவர் மட்டுமே இருந்த ஊரில் தற்போது இரண்டுபேர் இருக்கின்றனர். மேலும் மேலும் பலர் வருகின்றனர். அந்த அளவுக்கு தேவை இருக்கிறது. அதே சமயத்தில் போட்டியும் உருவாகிறது.
இந்த போட்டியை சமாளிக்க வேண்டும் என்பதுதான் இந்த தொழிலில் சவாலாக எடுத்துக் கொள்கிறேன்.
தற்போது இந்தத் தொழிலை தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. உற்பத்திக்கான ஒரு இயந்திரம் இரண்டு இயந்திரமாக வளர்ந்திருக்கிறது. ஒரு வருக்கு மட்டுமே வேலை கொடுக்கும் நிலையிலிருந்து தற்போது ஆறு நபர்களுக்கு வேலை கொடுக்கிறேன். இதிலிருந்து மேலும் வளர வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
maheswaran.p@thehindutamil.co.in