Published : 22 Jun 2015 11:38 AM
Last Updated : 22 Jun 2015 11:38 AM

முதலீடுகள்: பொலிவிழக்கிறதா குஜராத்?

குஜராத் தொழில்துறையினர் விரும்பும் மாநிலம். முதலீடுகள் குவியும் மாநிலம். மின்வெட்டு இல்லாத மாநிலம் என பல பெருமைகளை தன்னகத்தே கொண்டது. ஆனால் இந்த பெருமைகளெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது.

நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து இம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் புதிய முதலீடுகளின் அளவு குறைந்துள்ளது. இதற்கும் மேலாக கடந்த நான்கு ஆண்டுகளாகவே குஜராத்தில் முதலீடு குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வைப்ரன்ட் குஜராத் எனப்படும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 25 லட்சம் கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

ஆனால் ஆண்டுக்காண்டு குஜராத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடு 50 %அளவுக்கு சரிந்துள்ளதாக தொழில்துறையினரின் கூட்டமைப்பான அசோசேம் தெரிவிக்கிறது. 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மொத்தம் 280 முதலீட்டு ஒப்பந்தங்கள் ரூ. 31,788 கோடிக்கு கையெழுத்தாயின. இதற்கு முந்தைய ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ. 69,847 கோடியாகும்.

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் மூன்றாமிடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலத்தில் செய்யப்பட்ட முதலீடு 8.8 சதவீதமாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 15% குறைவாகும். அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் சத்தீஸ்கர் முதலீடத்தில் உள்ளது. மொத்த முதலீடுகளில் 45 சதவீதம் இம்மாநிலத்துக்கு சென்றுவிட்டது. மகாராஷ்டிரத்தில் 8.9 சதவீத முதலீடு சென்றுள்ளது. மூன்றாமிடத்துக்கு குஜராத் தள்ளப்பட்டுள்ளது.

மொரீஷியஸிலிருந்து அதிகபட்சமாக 47 சதவீதமும், அமெரிக்காவிலிருந்து 13 சதவீதமும், சிங்கப்பூரிலிருந்து 11 சதவீதமும், சைப்ரஸிலிருந்து 5 சதவீதமும், இங்கிலாந்திலிருந்து 4% முதலீடுகளும் குஜராத் மாநிலத்துக்கு வந்துள்ளன. மொத்த முதலீடுகளில் மின்சாரம் 14%, உலோகம் 9%, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு 8%, சேவைத்துறை 8% முதலீடுகள் 2013-ம் ஆண்டில் குஜராத்துக்கு வந்துள்ளன.

தொழில்துறையினர் மேற்கொள்ளும் முதலீடு ஆண்டுக்காண்டு 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டு குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு களின் எண்ணிக்கை 544 ஆகும். இது 2013-ல் 354 ஆகக் குறைந்து விட்டது.

2011-ல் ரூ. 1.42 லட்சம் கோடியாக இருந்த முதலீட்டு அளவு 2013-ல் ரூ. 94,259 கோடியாகக் குறைந்துவிட்டது. 2014-ம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 205. இதன் மதிப்பு ரூ. 61,842 கோடியாகும். இப்போது குஜராத்தில் முதலீடுகளுக்கான அளவு உச்சபட்சத்தை எட்டி விட்டதாக நிறுவனங்கள் கருதுகின்றன. இதற்கு மேல் முதலீட்டுக்கான வாய்ப்பில்லை என நிறுவனங்கள் கருதுவதும் முதலீடுகள் குறைந்ததற்கான காரணம் என குஜராத் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குஜராத் மாநில அரசு நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு நரேந்திர மோடி இல்லாததுதான் என்று கூறப்படுகிறது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 குஜராத் மாநிலத்தின் அரசு நிறுவ னங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 45 சதவீதம் வரை சரிந்துள்ளன.

குஜராத் ஸ்டேட் பைனான்ஸ் கார்ப்ப ரேஷன், குஜராத் அல்கலீஸ், குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உர நிறுவனம், குஜராத் கனிம மேம்பாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் குறைந் துள்ளன. குஜராத் மாநில முதல்வர் ஆனந்தி பென் படேல் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாததையே இந்த சரிவு காட்டுகிறது. பல விஷயங்களில் முன்னோடியாக இருந்த குஜராத், சரிவுக் கான காரணத்திலும் முன்னோடியாக இருந்துவிடக் கூடாது. இதை ஆனந்திபென் உணர்ந்தாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x