

இன்றைய மேலாண்மை உலகின் குருவாகக் கருதப்படுபவர் ஆஸ்திரி யாவில் பிறந்து அமெரிக்காவில் பேராசிரியராகவும், எழுத்தாளராகவும், ஆலோசகராகவும் கொடிகட்டிப் பறந்த பீட்டர் டிரக்கர்தான். (1909-2005), அவர் தமது உரைகளில், கட்டுரைகளில் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தும் ஓர் சொல் அதாவது கருத்து “பணி“ (Task) என்பதாகும்.
இதில் என்ன வியப்பு? மேலாண்மை என்பதே கொடுத்த பணியை, எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிப்பதுதானே? இதனைத்தான் திருவள்ளுவர்” ‘வலி’ அல்லது ‘செயல்’ என்று குறிப்பிடுகின்றார். ஒரு செயலை அதாவது பணியைத் தொடங்கும் முன்பு அதனை எவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தீர ஆலோசித்துத் திட்டமிட்டுத் தொடங்க வேண்டுமென்கிறது குறள்.
எந்த ஒரு பணியையும் முடிக்க நாம் மேற்கொள்ளும் உத்தி (Strategy) மிக முக்கியமானது. இதனை வடமொழியில் சாம, தான, பேத, தண்டம் என்பர். நாம் அவற்றை கொடுத்தல், கனிவாகப் பேசதல், மிரட்டுதல், தண்டித்தல் எனக் கொள்ளலாம்.
இவற்றில் எதைக் கையாள்வது என்பது எதிரியின் நிலையை, பலத்தைப் பொறுத்தது. ஆனால் வள்ளுவர் ஒரு படி மேலே சென்று, ஒருவன் தன் நிலை மறந்து தனக்கு ஒவ்வாத வழியைப் பின்பற்றினால் உலகம் அதை ஏற்காததுடன், ஏளனமும் செய்யுமென்கிறார்.
ராமசாமி என்று ஒரு நல்ல நண்பர்; தனியார் வங்கியில் அதிகாரி. எதார்த்தவாதி, நியாயமாகவே நடப்பதுடன் அநியாயம் எங்கு நடந்தாலும் நம்ம ஷங்கரின் அந்நியன் மாதிரி பொறுக்கமாட்டார். அவருக்கு வாராக்கடனை வசூலிக்கும் பிரிவில் வேலை.
ஒரு நாள் கரைபோட்ட துண்டு போட்டவரிடம் உடனே ரூ.50,000 கட்டாவிட்டால் உங்களது வீட்டை ஏலம் போட்டுவிடுவேன் என்றார். ஆனால் வாடிக்கையாளர் அதைக் கேட்டுக் கொதிப்படைந்து ஒருமையில் பேச ஆரம்பித்து அஃறினைக்கும் சென்றுவிட்டார்! எல்லோரும் கூடி வேடிக்கை பார்த்தனரே தவிர ஆதரவு கொடுத்துப் பேசத் தயங்கினர். சத்தம் கேட்டு வெளியே வந்த மேலாளர் அவரைச் சமாதானப்படுத்தி தமது அறைக்குக் கூட்டிச் சென்றார்.
“முதலில் அமருங்கள் இந்த தண்ணீரைக் குடியுங்கள்”, என்றவர் “உங்களை மாதிரி ஆட்களிடம் இல்லாத பணமா? நீங்கள் கட்டிவிடுங்கள். நான் உங்களுக்கு உதவவே நினைக்கிறேன். ஆனால் என்ன செய்வது? எனது மேலதிகாரிகளுக்குத்தானே எல்லா அதிகாரமும்“ என்கிற ரீதியில் பேசி அவரைச் சமாதானம் செய்து பின்னர் பணத்தையும் வசூலித்துவிட்டார்.
ராமசாமியின் அணுகுமுறை தவறுதானே? நீ தப்புசெய்தவன், நான் தண்டித்துவிடுவேன் என்கிற ரீதியில் பேசுவதற்கு அவர் ஒரு பெரிய அதிகாரியல்லவே. நாம் விடும் சவால்களை நிறைவேற்ற முடியா தென்றால் சவால் எதற்கு? செய்ய முடியாதவற்றைச் செய்து காட்டுவேன் என்று சொல்லிப் பின்னர் பின்வாங்குவது நகைப்புக் குரியதாகி விடுமே!
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு
somaiah.veerappan@gmail.com