

அரசியல் என்பது குறுகிய காலத்துக்கான விளையாட்டு, பொருளாதாரம் என்பது நீண்ட காலத்துக்கான விளையாட்டு இரண்டுமே எதிரெதிர் திசையில் இழுப்பவை. இந்தப் பொருந்தாத இணை காரணமாகவே பெரும்பாலானவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். மோடியின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் அவரை ஆதரித்தவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறிவிட்டார். சங்கப் பரிவாரங்கள் தங்களுடைய செயல்களால் அவருக்குத் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மோடியோ இப்போது துணிச்சலான சீர்திருத்தக்காரராக உருவெடுக்காமல் மிதவாதியாகவும், சாத்தியமானதை மட்டும் மேற்கொள்கிறவராகவும் மத்தியவாத சித்தாந்தத்தைக் கையாள் பவராகவும் மாறியிருக்கிறார்.
ஓராண்டைவிட பொருளாதாரம் முன்னேறியிருந்தாலும் அதன் திறனுக் கேற்ப வளரவில்லை. அடுத்த ஆண்டு சீனத்தைவிட அதிக வளர்ச்சி வேகம் இருக்கும். பணவீக்க விகிதம் 18 மாதங்களுக்கு முன்னிருந்ததைவிட பாதியாகக் குறைந்திருக்கிறது. ரூபாய் மாற்று மதிப்பு பெரும்பாலும் நிலையாகவே இருக்கிறது. அரசின் வரவு-செலவு பற்றாக்குறையும் வெளி வர்த்தகப் பற்றாக்குறையும் கட்டுக்குள் இருக்கின்றன.
1991-92-க்குப் பிறகு இந்த ஆண்டு தான் மூலதனத் திரட்டு அதிகம். காப்பீடு, பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளன.
டீசல் விலை மீது அரசு கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி உற்பத்தி கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவாக 8.3% அதிகரித்ததால் மூடிக்கிடந்த பல அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதில் இருந்த தேக்கநிலை நீங்கிவிட்டது. பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் முதலீட்டை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டன. ஜன் தன் திட்டம் பெரு வெற்றி. ஏழைகளுக்காகக் கொண்டுவந்த காப்பீடு திட்டங்களும் ஓய்வூதிய திட்டமும் குறைந்த செலவில் நிறைந்த பலன்களை வழங்குபவை.
கடந்த ஓராண்டில் மத்திய அரசு மீது ஊழல் புகார் ஏதுமில்லை. அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் அரசுக்குக் கணிசமான வருவாய் கிடைப்பதுடன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்து முடிந்தன. விண்ணப்பங்கள், ஒப்புதல் அளிப்பது அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெறுவதால் ஊழலுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. உலக அரங்கில் இந்தியா மீதான மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது. நேபாளத்திலும் யேமனிலும் இந்தியா மேற்கொண்ட உதவி, மீட்புப் பணிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வளவு இருந்தும் மக்களிடையே அதிருப்தி ஏன்?
நீண்டகால பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீளும்போது வேலை வாய்ப்புகள் ஏற்படச் சிறிது காலம் ஆகும். நுகர்வோரிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கவில்லை. நிறுவனங்களின் உற்பத்தி, லாப அளவுகள் போதவில்லை. எனவே நிறுவனங்கள் விரிவாகவும் வாய்ப்பு இல்லை. பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. வேளாண் அமைச்சர் அத்துறைக்குப் பொருத்தமானவர் அல்ல. கட்டுமானத் தொழிலில் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது. அடித்தளக் கட்டுமானத் தொழில்துறை வங்கிகளுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன்சுமை அதிகம்.
தூய்மை இந்தியா திட்டத்துக்கு மாநில அரசுகளிடமிருந்தும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் ஒத்துழைப்பு இல்லை. நிதித்துறையின் வரி விதிப்புப் பிரிவும் மெத்தனமாகவே செயல்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் முந்தைய நிதி ஆண்டுகளுக்கான வரியைச் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் காரணமாக முதலீடுகள் திரும்பப் பெறப்படுகின்றன.
குஜராத்தில் துடிப்பாகச் செயல்பட்டதைப்போல மத்திய அரசில் செயல்படவில்லை என்று தொழிலதிபர்கள் அவர் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். சந்தை சீர்திருத்தங்களில் அவர் தீவிரமாக இல்லை என்று வலதுசாரி சிந்தனையாளர்கள் கோபப்படுகிறார்கள்.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லப் பார்க்கிறார் என்பதால் சங்கப் பரிவாரங்களும் கோபத்தில் கொதிக்கின்றன. வங்கிக் கணக்கு மூலமே காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவந்து ஏழைகளுக்கு வேண்டியவராகிவிடுவாரோ என்று இடதுசாரிகளும் சந்தேகப்படுகின்றனர்.
நரேந்திர மோடியின் கண்கள் அடுத்த 2019 மக்களவை பொதுத் தேர்தலை நோக்கி இருக்கிறது. அதற்குள் மக்களுக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட விரும்புகிறார். வலதுசாரியாகவோ இடதுசாரியாகவோ இருந்தால் முடியாது என்பதால் மத்தியவாதியாக இருக்க முடிவு செய்திருக்கிறார். மக்களுடைய அதிருப்தியெல்லாம் காலவெள்ளத்தில் மறைந்துவிடும் என்பது அவருக்குத் தெரியும். மோடியின் ஆதரவாளர்களே அதிருப்தியில் இருந்தாலும் 2019-ல் தன்னுடைய ஆட்சியின் பலன்களை அவர் அறுவடை செய்வார்.
- gurcharandas@gmail.com