

தொழில் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான 7-சி தேவை என்பதையும் அதில் முதலா வதாக தெளிவு (Clarity) அவசியம் என்பதையும் கடந்த வாரம் பார்த்தோம்.
இப்பொழுது Competence எனப்படும் தகுதித் திறன் குறித்துப் பார்க்கலாம். ஒரு தொழிலைத் தொடங்கினீர்கள் என்றால் நீங்களே அனைத்து வேலைகளையும் எடுத்துச் செய்து கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு பணியையும் அதற்குரிய நபரிடம் ஒப்படைத்து அவற்றை தொடர்ந்து மேற்பார்வை செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் தொழிலை எப்படி மேம்படுத்துவது, சந்தைப்படுத்துவது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். அனைத்து வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால், உரிய நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. எனவே ஒரு வேலையை யார் சிறப்பாக முடிப்பார் என்பதை தேர்வு செய்து அந்த வேலையை அவரிடம் விடுவதே சிறப்பு என்று திருவள்ளுவரே சுட்டிக் காட்டியுள்ளார்.
அடுத்தது constrainsts எனப்படும் தடைகள்: ஒரு வேலையைத் தொடங்கும் போதும் அதை செயல்படுத்தும்போதும் அதில் எதிர்ப்படும் தடைகளை முன்கூட்டியே ஆராய்ந்து அதை எப்படி எதிர்கொள்வது என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்.
மிகவும் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து அதல பாதாளத்துக்கு சென்ற நிறுவனம் இதுதான். வருமானம் பெருகியபோது அதை தவறான பாதையில் செலுத்தியதால் வந்த வினைதான் இந்நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளியது. பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதுவல்ல விஷயம்.
இதிலிருந்து இந்நிறுவனத்தை மீட்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததே மஹிந்திரா நிறுவனம், அதுதான் பாராட்டுக்குரியது. நொடிந்த நிலையிலிருந்த நிறுவனத்தை வாங்கி அதை மீண்டும் மிளிரச் செய்தது மஹிந்திரா. மறித்துப் போன சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல இன்று மஹிந்திரா சத்யம் நிறுவனமாக பரிணமிக்கிறது.
தடைகள் எது என்பதையும் அதிலிருந்து மீள்வது எப்படி என்பதையும் திட்டமிட வேண்டும் என்பதற்கு இந்நிறுவனத்தின் கதை மிகச் சிறந்த பாடமாகும்.
நான்காவதாக creativity எனப்படும் சொல்லுக்கு புத்தாக்கம் என்கிற தமிழ்சொல் ஓரளவு பொருத்தமாக இருக்கும். இதற்கு சரியான உதாரணம் ஆப்பிள் நிறுவனம்தான். இந்த நிறுவனம் எதையுமே புதிதாக கண்டுபிடித்தது கிடையாது.
ஆனால் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பொருள்களின் மேம்பட்ட தயாரிப்பை உருவாக்கி பிரபலமாகத் திகழ்கிறது. செல்போன் பயன்பாட்டுக்கு வந்தபோது அதில் தொடு திரை வசதி மற்றும் பல்வேறு வசதிகளையும் கொண்டு வந்தது.
அதாவது உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப பொருள்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது இந்நிறுவனம். பெரிய காசெட் பிளேயரில் அல்லது வாக்மேனில் அதிகபட்சம் 15 பாடல்களை மட்டுமே கேட்டு வந்தவர்களுக்கு மிகச் சிறந்த விடிவெள்ளியாக வந்ததுதான்
இந்நிறுவனத்தின் ஐ-பாட். இசைப் பிரியர்களின் தேவையை உணர்ந்து வெளிவந்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை உருவாக்கி அதில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை, வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்பை உருவாக்கி வருகிறது இந்நிறுவனம்.
இதற்கு அடுத்தபடியாக கூறவேண்டுமென்றால் கூகுள். சர்ச் இன்ஜின் எனப்படும் இணையதள தேடுபொறி அளிப்பதில் ஏஞ்சல் பயர், யாகூ, ஏஓஎல், அல்டாவிஸ்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இருந்தன.
குறைவான நேரத்தில் மக்கள் தேடும் விஷயங்களை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அதற்குத் தேவையான அல்காரிதம்களை எழுதி உருவாக்கினார்கள் இதன் நிறுவனர்கள். ஒரு விஷயத்தை 0.06 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் கூகுளில் தேடி விவரம் பெற முடியும். தேடு பொறி சாம்ராஜ்யத்தில் முதலிடத்தைப் பிடித்ததோடு இவர்கள் நின்றுவிடவில்லை.
அடுத்ததாக கூகுள் கண்ணாடி, கூகுள் டிவி என இவர்களது தேடல் தொடர்கிறது. ஆளில்லா கார்களை வடிவமைத்து அதை வெள்ளோட்டமும் விட்டுள்ளனர். நாசா நிறுவனம் கைவிட்ட ஒரு ராக்கெட் தளத்தையும் இந்நிறுவனம் குத்தகைக்கு எடுத்து அதிலும் பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது.
புதிய தயாரிப்புகள், புத்தாக்கம் அளித்தால் நீங்களும் உச்சத்தைத் தொடலாம். வெற்றியின் ரகசியமான மற்ற 3 சி என்ன என்பதை வரும் வாரத்தில் பார்க்கலாம்.
aspireswaminathan@gmail.com