வன்முறை கலவரங்களால் இந்தியாவின் பொருளாதார பாதிப்பு ரூ.21 லட்சம் கோடி

வன்முறை கலவரங்களால் இந்தியாவின் பொருளாதார பாதிப்பு ரூ.21 லட்சம் கோடி
Updated on
2 min read

அமைதிப் பூங்கா என்பதற்கான அடையாளம் எப்போதும் இந்தியாதான். ஆனாலும் ஆங்காங்கே எழுந்த கலவரங்கள், கதவடைப்புகள் உள்ளிட்டவற்றால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கத்தான் செய்கிறது. 2014-ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வன்முறை கலவரங்கள், கதவ டைப்புகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பின் மதிப்பு எவ்வளவு தெரியுமா 34,200 கோடி டாலர்.

இந்திய மதிப்பில் சொல்வதென்றால் சற்று தலை சுற்றும். ஆம், இழப்பின் மதிப்பு ரூ. 21.90 லட்சம் கோடி. இத்தகவலை பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு (ஐஇபி) வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் 162 நாடுகளில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சர்வதேச அமைதி அட்டவணையின்படி (ஜிபிஐ) இந்தியா 143-வது இடத்தில் உள்ளது. மொத்தம் 23 அம்சங்கள் இதில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. சமூக பாதுகாப்பு, உள்நாடு மற்றும் பிற நாடுகளுடனான அரசியல் சூழல், ராணுவமயமாக்கல் உள்ளிட்டவை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மிக அதிக அளவு அமைதி நிலவும் 39 நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஐஸ்லாந்தும் கடைசி இடத்தில் இங்கிலாந்தும் உள்ளது. பாதுகாப்பு குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

பிற நாடுகளில் நிலவும் அகதிகள் பிரச்சினை, அதிகரித்துவரும் விலை வாசி ஆகியன சர்வதேச அளவில் வன்முறை அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பானது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீதமாகும். அதாவது ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்ட இழப்பு 273 டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ. 17,647 ஆகும். பிராந்திய அளவிலான மதிப்பீட்டில் தெற்காசிய பிராந்தியம் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேசமயம் பூடான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வன்முறை குறைந்ததில் பொருளாதார பாதிப்பும் குறைந்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் தொடர்ந்து இந்தியா இறங்குமுகத்தையே சந்தித்து வந்துள்ளது. வெளியிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல், அரசியல் பயங்கரவாதம், குற்றங்கள் அதிகரிப்பு காரணமாக இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அமைதி நிலவும் நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்திலும், டென்மார்க், ஆஸ்திரியா ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் நியூஸிலாந்து, ஸ்விட்சர்லாந்து, பின்லாந்து, கனடா, ஜப்பான், ஆஸ்தி ரேலியா, செக் குடியரசு ஆகியன இடம் பெற்றுள்ளன.

சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு 14.3 லட்சம் கோடி டாலராகும். இது சர்வதேச ஜிடிபியில் 13.4 சதவீதமாகும். இந்த அளவானது பிரேஸில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி அளவாகும்.

சர்வதேச அளவில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அமைதி நிலவுகிறது. பெரும்பாலான நாடுகள் ராணுவத்துக்கான பட்ஜெட்டை குறைத்து வருகின்றன. அதேபோல இராக் மற்றும் ஆப்கனிலிருந்து படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையால் அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கு வழியேற் படுத்தியுள்ளது. அதேசமயம் இராக், சிரியா, யேமன், லிபியா, இஸ்ரேல், லெபனான், நைஜீரியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகியவற்றில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

உலகின் மொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம்பேர் நகர்ப்பகுதிகளில் வசிப்பதாகவும், 2050-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 250 கோடி அதிகரிக்கும் என அறிக்கை தெரிவிக்கிறது.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. வட கொரியா, ரஷியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிராந்ஸ், இந்தியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதேசமயம் வன்முறைச் சம்பவங் களால் உயிரிழப்போர் எண்ணிக்கை 8 ஆண்டுகளுக்கு முன்பு 1,982 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் இது 410 ஆகக் குறைந்துள்ளதையும் அறிக்கை வரவேற்றுள்ளது. வன்முறை தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகம் செலவிடும் நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அடுத்தபடியாக சீனாவும், ரஷியாவும் உள்ளன.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 81 நாடுகளில் நிலை மேம்பட்டதாக இருக்கிறது. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் முக்கிய காரணியாக இருப்பது அரசியல் ஸ்திரமான நிலையும், அமைதியான சூழலும்தான். இதை உருவாக்கும்போதுதான் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறும். பொருளாதாரமும் வளரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in