

நவீன உலகில் பூ கடைக்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு (ஆர் அண்ட் டி) செலவிடும் தொகை, பொருள் தயாரிப்பு செலவு இவற்றுடன் பொருளை விளம்பரப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிறுவனங்கள் ஒதுக்குகின்றன. ஏற்கெனவே சந்தையில் விற்பனையாகும் பொருள்களுக்கும் விளம்பரம் அவசியமாகிறது. பொருள்களின் ஸ்திரமான விற்பனைக்கு விளம்பரத்தின் பங்களிப்பு அவசியமாகிறது.
நுகர்வோர் பொருளுக்குத்தான் விளம்பரம் என்றிருந்த நிலை மாறி, இப்போது வங்கிகளுக்கும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. தங்கள் வங்கியோ அல்லது தாங்கள் அளிக்கும் காப்பீடோ மக்கள் மனதில் நினைவுக்கு வர விளம்பரங்கள் அவசியமாகிறது.
தெருக்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகள், மிகப் பெரிய கட்-அவுட் விளம்பரங்கள் என்றிருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது பல்வேறு ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
வானொலி இருந்த காலத்தில் விளம்பரங்கள் குவிந்தன. இன்றும் கோபால் பல்பொடி விளம்பரம் மக்கள் மனதில் நினைவுக்கு வர அடிக்கடி அந்த விளம்பர வாசகம்தான் காரணம். அடுத்து சினிமா திரையரங்குகளில் விளம்பரங்கள் அதிகம் இடம்பெற்றன.
செய்தி பத்திரிகைகள், வார, மாத சஞ்சிகைகள் ஆகியனவும் மக்கள் மத்தியில் விளம்பரம் வாயிலாக பொருள்களை கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக விளங்கின.
டிவி வந்த பிறகு அதிலும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகரித்தபிறகு ஒரு நிகழ்ச்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவையே அதற்கு வரும் விளம்பரங்கள்தான் என்ற அளவுக்கு விளம்பரங்களின் ஆதிக்கம் மேலோங்கியது.
இணைய உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியபிறகு அதிலும் விளம்பரங்களுக்கு பஞ்சமில்லை. மற்ற ஊடகங்களுக்கு அளிக்கும் விளம்பரங்களை ஆன்லைன் ஊடகங்களுக்கும் அளிக்க தொடங்கினர் பெரிய நிறுவனத்தினர்.
ஸ்மார்ட்போன் புழக்கம் பெருவாரியாக பிரபலமாகிவரும் நிலையில் இவற்றின் மூலம் விளம்பரம் செய்வதும் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விளம்பர ஒதுக்கீட்டை பாரம்பரிய விளம்பர உத்தியிலிருந்து மாற்றி வேறு ஊடகங்களில் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.