

சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவ னங்களை அனுமதிக்கக் கூடாது என்று வர்த்தகர்களும், அனுமதிக்கலாம் என ஒரு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு, எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இந்த விவகாரம் திடீரென கிளம்பும், பிறகு சிறிது காலத்தில் அடங்கிப் போகும். அது பிரச்சினையைக் கையிலெடுப்போரின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது.
இம்முறை இந்திய சில்லரை வர்த்தகர் சங்கம் (ரீடெய்லர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா ஆர்ஏஐ) அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது ஒரு தனி இலச்சினை கொண்ட (சிங்கிள் பிராண்ட்) தயாரிப்புகளுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பன்முக இலச்சினை (மல்டி பிராண்ட்) நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால் இப்போது இ-காமர்ஸ் மற்றும் எம்-காமர்ஸ் முறையிலான வர்த்தகம் இந்தியாவில் பெருகிவிட்டது. இணையதளம் மூலமான வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் அனைத்து தயாரிப்புகளையும் (இலச்சினை) இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது.
சில்லரை வர்த்தகத்தில் மல்டி பிராண்ட் ரீடெய்ல் பிரிவில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி இல்லாதபோது இ-காமர்ஸ் பிரிவில் மட்டும் எப்படி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று ஆர்ஏஐ கேட்டிருக்கிறது. இதனால் மல்டி பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆர்ஐஏ தனது மனுவில், சில்லரை வர்த்தகத்தில் விற்பனைக்கு உரிய சூழலை அரசு உருவாக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இட வசதியோ, தொழிற்சாலையோ, பொருள்களை சேமிக்கும் இடமோ தேவையில்லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறிய அளவில் மேற்கொள்ளுவதை சில்லரை வர்த்தகம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இணையதளம் மூலம் (இ-காம்) மற்றும் மொபைல் போன் மூலம் (எம்-காம்) மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை சில்லரை வர்த்தகமாக இந்திய சட்டங்கள் குறிப்பிடவில்லை.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிப்பதில்லை என்ற சட்டம் கூறுகிறது. அதேபோல வெளிநாடுகளில் நிதி திரட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஒருவிதமாகவும், சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றொரு விதமாகவும் இங்கு பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு தனி பிராண்ட் அல்லது பல பிராண்டுகளை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவு எடுக்கும் முன்பு இந்த வர்த்தகத்தில் ஆன்லைன் ஈடுபடலாமா, கூடாதா என்பதை தீர்மானிக்க வேண்டும் என அரசு முடிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
கடந்த மாதம் 20-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜீவ் ஷக்தார், நான்கு மாதங்களுக்குள் இதற்கு உரிய தீர்வு காணும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கான கொள்கை வகுக்கும்போது இந்த சங்கத்தின் கருத்துகளை கேட்டு அதற்கேற்ப முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும், அரசின் கொள்கையில் சங்கத்துக்கு தீர்வு கிடைக்காவிடில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பினால் இ-காம் மற்றும் எம்-காம் நிறுவனங்களுக்கு நெருக்கடி உண்டாகியிருக்கிறது.