Published : 11 May 2015 12:09 PM
Last Updated : 11 May 2015 12:09 PM

குடும்ப தகராறில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி!

இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் 5-வது பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றுதான் யெஸ் வங்கி. 2004-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழி லதிபர்களான ராணா கபூர் மற்றும் அசோக் கபூர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. வங்கியின் நிகர வருமானம் 1,100 கோடியைத் தொட்டுள்ளது. வங்கியின் ஒரு பங்கு ரூ. 826 என்ற அளவில் விற்பனையாகிறது.

எல்லாம் சரி வங்கி நன்றாகவே செயல்படுகிறது. ஆனால் வங்கியை உருவாக்கிய நிறுவனர்களின் குடும்பத் தகராறு கடந்த சில ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே இருக்கிறது.

நிறுவனர்களான ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், அசோக் கபூரின் மனைவி மது கபூர் இருவரும் சகோதரிகளாவர்.

2008-ம் ஆண்டு மும்பை ஒபராய் ஹோட்டலில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் அசோக் கபூர் மரண மடைந்ததிலிருந்து குடும்பத் தகராறு சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

வங்கி இயக்குநர் குழுவில் தனது மகள் ஷாகுன் கோகியாவை நியமிக்க வேண்டும் அசோக் கபூரின் மனைவி மது கபூர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை நிராகரித்துவிட்டார் ராணா கபூர்.

இந்நிலையில் வங்கியில் திவான் அருண் நந்தா, ரவிஷ் சோப்ரா, எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களது நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று 2009-ம் ஆண்டு நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டார் மது கபூர். ஆனால் இயக்குநர்கள் நியமனத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

2013-ம் ஆண்டு மீண்டும் தனது மகளை தனது வாரிசாக இயக்குநர் குழுவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் மது கபூர். ஆனால் ரிசர்வ் வங்கி வகுத்தளித்த வழிகாட்டுதலின்படி இதற்கு வழியில்லை என மீண்டும் கூறிவிட்டார் ராணா கபூர்.

வங்கி உருவாக்கப்பட்டபோது ராணா கபூர் வசம் 13.72 சதவீத பங்கும், அசோக் கபூர் வசம் 12 சதவீத பங்கும் இருந்தது.

ராணா கபூர் தனது வாரிசாக யாரையும் இயக்குநர் குழுவில் சேர்க்கவில்லை. இந்நிலையில் அசோக் கபூரின் மகளை சேர்க்கவும் அவர் மறுத்து வருகிறார்.

தற்போது ராணா கபூருக்கு 11.77 சதவீத பங்குகளும், மது கபூர் வசம் 10.29 சதவீத பங்குகளும் உள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் கடந்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கியில் அதிகபட்ச பங்குகளை வைத்துள்ள இரண்டு நிறுவனர்களும் தங்கள் வசம் உள்ள பங்குகளை 10 சதவீதத்துக்கும் குறைவான அளவுக்குக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது.

அவ்விதம் குறைப்பதன் மூலம் இருவரும் இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரத்தை இழப்பர். இதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நீதிமன்றம் கூறிவிட்டது.

2009-ம் ஆண்டிலிருந்து நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்ப்பு எதையும் நீதிமன்றம் வழங்கவில்லை. இருந்தாலும் இறுதித் தீர்ப்பை மே 12-ம் தேதி அளிப்பதாக நீதிமன்றம் கூறிவிட்டது. இருதரப்பினரும் தங்கள் வசம் உள்ள பங்குகளைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனியார் வங்கிகள் சிறப்பாக செயல் படுகின்றன என்றாலும், இதுபோன்ற குடும்பத் தகராறு அவற்றின் செயல் பாடுகளை பின்னுக்கு இழுப்பதோடு முதலீட்டாளர்களையும் பாதிக்கிறது.

குடும்ப உறுப்பினர்கள் இதுபோன்ற பொதுமக்கள் சேவை தொடர்பான நிறுவன ங்களை உருவாக்கும்போது அவற்றை முற்றிலுமாக தொழில்முறையில் நடத்து வதால் மட்டுமே பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இல்லையெனில்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x