

சந்தையில் இப்போதைய ஹாட் டாபிக் ரீடெய்ல் துறைதான். ரீடெய்ல், இ-காமர்ஸ் அடுத்து எம்-காமர்ஸ் வரை தினமும் ஒரு மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களும் இது போன்ற நிறுவனங்களில்தான் கவனம் செலுத்துகின்றன.
உப்பு தயாரிப்பு முதல் சாப்ட்வேர் சேவை அளிப்பது வரை அனைத்து துறைகளிலும் இருக்கும் டாடா குழுமமும் இ-காமர்ஸில் களம் இறங்கி இருக்கிறது. மிந்திரா நிறுவனம் தனது இணைய தளத்தை மூடிவிட்டு, இனி செயலியில் (ஆப்ஸ்) மட்டும்தான் விற்பனை என்று அறிவித்திருக்கிறது.
தவிர, ஆதித்யா பிர்லா குழுமம் தன்னுடைய அனைத்து ரீடெய்ல் தொழில்களையும் ஒரே குழுமத்தில் இணைத்திருக்கிறது. இ-டெயில் துறை மட்டுமல்லாமல் ரீடெய்ல் துறையும் பரபரப்பாகவே இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த துறையில் நடந்த மாற்றங்கள் மற்றும் இந்த துறை பற்றிய சில தகவல்கள்.
அந்நிய முதலீடு
தற்போதைய நிலையில் பிஸினஸ் டு பிஸினஸ் பிரிவில் (இ-காமர்ஸ்) 100 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சில்லரை வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) அந்நிய முதலீடு அனுமதிக்கப்படவில்லை.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சில்லரை வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) அந்நிய முதலீட்டை வரவேற்கிறது. ஆனால் இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்கள் இதனை எதிர்க்கின்றன.
மல்டி பிராண்ட் ரீடெய்ல் பிரிவில் 51% அந்நிய முதலீடு இருக்கிறது.
வளர்ந்து வரும் ரீடெய்ல்
ஆன்லைன் விற்பனை ஒரு பக்கம் அதிகரித்தாலும் ஆர்கனைஸ்டு ரீடெய்லும் வளர்ந்து வருகிறது. ஆண்டுக்கு 18.1 சதவீதம் ரீடெய்ல் துறை வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது 43,500 கோடி டாலர் உள்ள சந்தை அடுத்த நான்கு முதல் ஐந்தாண்டுகளில் 848 கோடி டாலர் சந்தையாக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
2022-ம் ஆண்டு 5.6 கோடி நபர்களுக்கு ரீடெய்ல் துறையில் வேலை வாய்ப்பு உருவாகும். இந்திய ஜிடிபியில் ரீடெய்ல் துறையின் பங்கு 23 சதவீதம்.
ஆதித்ய பிர்லா குழுமத்தில் உள்ள அனைத்து ரீடெய்ல் நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஆதித்ய பிர்லா பேஷன் அண்ட் ரீடெய்ல் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா பல இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.
ரத்தன் டாடாவின் முதலீடுகள்
1.ஸ்நாப்டீல்
2.அர்பன் லேடர்
3.புளுஸ்டோன்
4.கார்டெகோ டாட் காம்
5.பேடிஎம்