

தொழிலில் நீடித்திருக்கவும், தொழில் தொடர்ந்து நடைபெறவும் பரிசுப் பொருள்களை அளிப்பது இங்கு சகஜமாக நடைபெறுவதாக 52 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொழில் துறையில் பிரிக்க முடியாதது எது என்று திருவிளையாடல் பாணியில் கேட்டால் ஊழலும் தொழிலும் என்று பலரும் பதில் அளிக்கின்றனர். இந்த நிலை இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை. பல நாடுகளிலும் உள்ளதுதான்.
38 வளரும் பொருளாதார நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெரும்பாலானோர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 80 சதவீத மக்கள் ஊழலையும் தொழி லையும் பிரிக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக உறுதிபட கூறியுள்ளனர்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குரேஷியா. இங்கு 92 சதவீத மக்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். கென்யாவில் 90 சதவீத மக்களும், ஸ்லோவேனியாவில் 87 சதவீத மக்களும், போரால் சிதறுண்டுள்ள செர்பியாவில் 84 சதவீதம் பேரும், பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள போர்ச்சுக்கீசில் 82 சதவீதம் பேரும் இக்கருத்தைத் தெரிவித்துள்ளனர். 80 சதவீத இந்தியர்கள் இக்கருத்தைத் தெரிவித்துள்ளதால் இப்பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து உக்ரைன் (80%), ஸ்லோவேகியா (78%), தென்னாப்பிரிக்கா (78%), ஹங்கேரி (73%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. யர்னஸ்ட் யங் நிறுவனத்தின் மோசடி மற்றும் தாவா சேவை தீர்ப்பு பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில் லஞ்சம், கையூட்டு, ஊழல் ஆகிய அனைத்தும் பரவலாக நடைபெறுவதாக 80 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் தொழில்துறையைச் சேர்ந்த 3,800 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தொழிலில் நீடித்திருக்கவும், தொழில் தொடர்ந்து நடைபெறவும் பரிசுப் பொருள்களை அளிப்பது இங்கு சகஜமாக நடைபெறுவதாக 52 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தொழிலைத் தொடர்ந்து நடத்த லஞ்சப் பணம் அளிப்பதை 27 சதவீத மக்கள் நியாயப்படுத்தியுள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது நிதி நிலவரத்தை வெளிப்படுத்தாமல் மிகைப்படுத்திக் காட்டுவதாக 59 சதவீத மக்கள் தெரிவித் துள்ளனர். லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை மற்றும் லஞ்ச ஒழிப்பு கோஷங்கள் தங்களை தொழிலில் நிலைத்திருக்க முடியாமல் செய்து விடுவதாக 35 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தவிர சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை, அரசியல் ஸ்திரமற்ற சூழல், கச்சா எண்ணெய் விலையில் நிலவும் ஏற்ற-இறக்க விலை நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார தடை ஆகியன தங்கள் தொழிலுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புதிய வருவாய் ஈட்டும் வளங்களை ஆராயுமாறு தங்களுக்கு எப்போதும் நிர்பந்தம் இருப்பதாக பெரும்பாலான நிறுவன மேலாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கும்போது தொழிலில் தில்லு முல்லு செய்யவும் மோசடி செய்யவும் தூண்டுகிறது.
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிதிநிலை அறிக்கையில் தில்லுமுல்லு செய்து அதை அதீதமாகக் காட்டுவதாக 59 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் தங்கள் தொழிலில் நிலவும் தேக்க நிலைக்கு பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணம் என்று 67 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதனால் நிறுவனங்கள் நிர்ணயித்த வளர்ச்சியை எட்ட முடியாதபோது அதற்காக மேலாளர்கள் நிர்பந்தம் செய்யப்படுவதாக 81 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோசடி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந் திருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மந்தமான பொருளாதார வளர்ச்சி சூழலில் நிறுவனங்கள் இலக்கை எட்ட முடியாமல் கடும் நெருக்குதலுக்கு ஆளாகின்றன. கண்காணிப்பு அமைப்புகளின் சட்ட திட்டங்கள் கடுமையாக இருப்பதாலும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தங்களது வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உலோகத் துறை, சுரங்கம், உற்பத்தித் துறை, கட்டமைப்புத் துறை உள்ளிட்டவற்றில் மிக மோசமான அளவுக்கு லஞ்ச, லாவண்யம் தாண்டவமாடுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் சமீபத்தில் எடுக்கப்பட்ட நிறுவன திருத்தச் சட்டம், நிறுவனங்களின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும். அத்துடன் லோக்பால் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. மேலும் செபி மேற்கொண்ட கட்டாய நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்ட நிறுவன செயல்பாடுகளில் மேலும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வந்துள்ளன.
நிறுவனங்கள் மீது பல்வேறு கட்டுப் பாடுகள் கொண்டு வந்த போதிலும் அதனால் வளர்ச்சி எட்டப்படவில்லை. இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளில் குறிப் பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக 89 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முறையற்ற நடவடிக் கைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற நேர்மையான வர்த்தகம் தொடர்பாக விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் இது நடைமுறையில் செயல்பட நீண்ட காலம் ஆகும் என்றே அறிக்கை தெரிவித்துள்ளது.
ரயில் தண்டவாளம் போல தொழிலும், ஊழலும் இணையாகப் பயணித்தால் வளர்ச்சி சாத்தியமாவது எப்போது?