

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாடு களுக்கு வேலை தேடிச் சென்றனரே தவிர, இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்ய தீவிரம் காட்டவில்லை.
1951-ம் ஆண்டிலிருந்து 1960-ம் ஆண்டு வரை இந்தியாவின் ஏற்றுமதி ஜிடிபியில் 0.7 சதவீத அளவே இருந்தது. அதேசமயம் இறக்குமதி இந்த காலகட்டத்தில் ஜிடிபியில் 8.6 சதவீதமாக இருந்தது.
அடுத்த பத்து ஆண்டுகளில் அதாவது 1961 முதல் 1970 வரையான கால கட்டத்தில் ஏற்றுமதி 4.6 சதவீதமாக (ஜிடிபியில்) உயர்ந்தது. இறக்குமதி 0.3 சதவீதமாகக் (ஜிடிபியில்) குறைந்தது. 1971 முதல் 1990 வரையான 20 ஆண்டு கால கட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சராசரியாக 6.8 சதவீத (ஜிடிபியில்) அளவில் இருந்தது. 1991 முதல் 1997-ம் வரையான காலத்தில் ஏற்றுமதி 11.4 சதவீத (ஜிடிபியில்) அளவுக்கு உயர்ந்தது.
1990-களுக்குப் பிறகு மேற்கொள்ளப் பட்ட தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்றுமதியின் பங்களிப்பு கணிசமாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது. 1997-ம் ஆண்டு கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சரிவு இந்திய ஏற்றுமதியை பாதித்தது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு ஏற்றுமதியில் இந்தியா சந்தித்த மிகப் பெரிய சரிவு இதுவாகும்.
இதற்கு அடுத்தபடியாக 2001-02-ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்குதலால் உலக வர்த்தக கட்டடம் தரைமட்டமானதில் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையாலும் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளானது.
இந்தியாவின் ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள், ஜவுளி சார் பொருள்கள், ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி, பருத்தி ஆடைகள், எலெக்ட்ரானிக் பொருள்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீத அளவுக்கு தொடர்ந்து நீடிப்பதற்கு ஏற்றுமதியும் மிக முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தியா வின் ஏற்றுமதி தொடர்ந்து ஐந்து மாதங் களாக சரிவைச் சந்தித்து வந்துள்ளது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை அதி கரித்துள்ளது. இது உண்மையிலேயே ஆட்சியாளர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் விஷயம். அதேபோல எதிர்பார்த்த வளர்ச்சியையும் எட்ட முடியாமல் போகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் ஏற்றுமதி 13.96 சதவீதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியான பொருளின் மதிப்பு 2,205 கோடி டாலராகும். ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் பொருளாதார தேக்க நிலையும் ஏற்றுமதி சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. ஆயத்த ஆடைகள், ஜவுளி சார் பொருள்களின் ஏற்றுமதி பெருமளவு குறைந்ததும் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். 2014-ம் ஆண்டு ஏப்ரலில் ஏற்றுமதி அளவு 2,563 கோடி டாலராக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில் 8 சதவீத வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற அரசின் இலக்கு சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் இறக்குமதி செய்யும் பொருள்களின் அளவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.48 சதவீதம் சரிந்து 3,304 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இருப்பினும் வர்த்தகப் பற்றாக்குறை 1,099 கோடி டாலராக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பற்றாக்குறை ஒரு சதவீத அளவுக்கு குறையும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்றுமதி சரிந்து வருவது கவலையளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் (2014-15) இந்தியாவின் ஏற்றுமதி வருமானம் 31,000 கோடி டாலர் (ரூ. 19,70,000 கோடி. கடந்த ஆண்டிலும் முந்தைய ஆண்டைவிட ஏற்றமதி சரிவையே சந்தித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 1,100 கோடி டாலராக உள்ளது. இப்போது ஏற்றுமதியில் காணப்படும் சரிவு வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வழியேற்படுத்திவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா தனது அந்நிய வர்த்தகக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 90,000 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு சில நாடுகளை மட்டுமே இலக்காகக் கொண்டு ஏற்றுமதி செய்யாமல் பிற நாடுகளுக்கும் ஏற்று மதி வாய்ப்புகளை ஆராயுமாறு நிதி அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும் வலியுறுத்துகிறது. புதிய நாடுகள், புதிய வாய்ப்புகள் நமது ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.