முதல் செலவு: நிதி நிர்வாகம் - கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும்

முதல் செலவு: நிதி நிர்வாகம் - கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும்
Updated on
3 min read

அன்றாட வாழ்க்கையில் நாம் பல விஷயங்களுக்கு துறை வல்லு நர்களை, ஆலோசகர்களை நாடுகிறோம். உடல் நலம் பேண மருத்துவர்களிடம் செல்கிறோம். ஏதேனும் தகராறு, பிரச்சினை என்று வந்தால் வழக்கறிஞரிடம் செல்கிறோம். நிதி சார்ந்த விஷயங்களில் கூட வரு மான வரி காரணங்களுக்காக ஒரு தணிக்கையாளரின் (auditor) உதவி யைக் கோருகிறோம்.

ஆனால், நிதி வள நிர்வாகம் என்று வரும் போது மட்டும் 'நமக்கு நாமே' திட்டம் போட்டு செயலாற்றுகிறோம். இதை நான் எனது அனுபவத்திலிருந்து மட்டும் சொல்லவில்லை. நாடு தழுவிய அளவில் நிதி வள நிர்வாகம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 60 சதவீதத்துக்கு மேற்பட்டோர் முதலீடுகளுக்கு தங்கள் பெற்றோர்களையோ, நண்பர்களையோதான் ஆலோசனைக்கு நாடுகிறார்கள். அவர்கள் சொல்வதை வைத்துக் கொண்டு தாமே சில முடிவுகளை எடுத்துச் செயல் படுத்துகிறார்கள்.

பிரச்சினை தெரியாது

இப்படிச் செய்வதில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் கண்டு கொள்ள முடியும் - நமக்கு ஆலோ சனை வழங்குபவர்கள் பெரும்பாலும் துறை வல்லுநர்களாக இருப்பதில்லை. மேலும் நமது பெற்றோர்கள் இருந்த காலகட்டமும் அவர்களுக்கு இருந்த நிதித் திட்ட தேர்வுகளும் வேறானவை. அவற்றின் அடிப்படையில் கொடுக் கப்படும் அறிவுரைகள் இந்த காலகட்டத்துக்கு பெருமளவும் பொருந்துவதில்லை.

இதெல்லாம் நமக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும் நிதித்துறை வல்லுநர்களை நாடுவதில் நமக்கு சில தயக்கங்கள் இருக்கின்றன என்பது நிஜம். இது ஏன் என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. எனினும், இத்த கைய ஆலோசகர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், உங்கள் நிதிவள நிர்வாகத்தில் அவர்களுக்குரிய இடம் (role) என்ன என்பதை தெளிவு படுத்துவதன் மூலம் இத்தகைய தயக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமா என்று பார்க்கிறேன்.

சென்ற வாரம் ஒரு சுவாரஸ்யமான பெண்மணியைச் சந்தித்தேன். அவருடன் இணையத்தில் பல ஆண்டு களாகத் தொடர்பில் இருந்தாலும், இப்போதுதான் நேரடியாக அவரைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் உமா சஷிகாந்த். சென்னையில் வளர்ந்த அவர் இருபது வருடங்களாக மும்பையில் நிதி வளத்துறை ஆசிரியராகப் பணி யாற்றி வருகிறார். அவருடனான உரையாடலில் ஒரு நிதி வள ஆலோ சகரின் பணி என்ன என்பதைப் பற்றி அவரது பார்வையை வித்தியாசமான முறையில் கூறினார். அவர் (பெரும்பாலும்) ஆங்கிலத்தில் கூறியதை நான் சாராம்சமாகச் சொல்கிறேன்.

2 முயற்சிகள் தேவை

ஒரு தனி நபரின் முதலீட்டுத் தேவைகளும், நிதிவளத் திட்டமும் சரியாக அமைவதற்கு இரண்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இவற்றில் முதலாவதை ‘கீழிருந்து மேல்' எனவும், மற்றதை 'மேலிருந்து கீழ்' எனவும் சித்தரிக்கலாம். இரண்டு முயற்சிகளும் சந்திக்கும் இடத்தில்தான் நல்ல, பயனுள்ள நிதி நிர்வாகம் அமையப் பெறுகிறது.

அதென்ன கீழும் மேலும்? எளிமையாகச் சொல்வதென்றால், சந்தையில் சிதறிக் கிடக்கும் பல நிதி மேம்பாட்டு முறைகளை, சாதனங்களைச் சேகரித்து, தேர்ந்தெடுத்து, தொகுத்து தனி நபர்கள் உபயோகிக்கக் கூடிய முதலீட்டுத் திட்டங்களாக மாற்றுவது என்பது கீழிருந்து மேல் செல்லும் அணுகுமுறை. வங்கி வைப்பு நிதித் திட்டம் முதல் பரஸ்பர நிதித் திட்டங்கள் வரை செய்வது இதைத்தான். இவர்கள் செய்வது

‘சிறிய' விஷயங்களைத் தொகுத்து நுகர்வதற்கு (முதலீடு செய்வதற்கு) ஏற்ற பொருட்களாக மாற்றுவது. உதாரணத்திற்கு ஒரு பரஸ்பர நிதி மேலாளர், சந்தையில் நல்ல பங்குகள் எவை என்று தேர்வு செய்து ஒரு பரஸ்பர நிதி மூலம் தொகுத்து வழங்குகிறார்.

ஆனால், இவற்றில் எல்லாவற்றிலும் முதலீடு செய்ய முடியுமா? அல்லது அப்படிச் செய்வது சரியா? சரியானது இல்லைதானே...? நமக்கு என்ன வேண்டுமோ அதை தெரிந்தெடுத்து பயன்படுத்துவதான் சரியானது இல்லையா? இதுதான் மேலிருந்து கீழ் செல்லும் அணுகுமுறை. ஒரு குறிப்பிட்ட நபரின் வாழ்க்கைச் சூழ்நிலை, நிதி நிலை, தேவைகள், ஆசைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ற நிதி நிர்வாகப் பொருட்களைத் தெரிவு செய்வது என்பது தான் இந்த முயற்சியின் குறிக்கோள்.

இப்பொழுது, யார் எதைச் செய்கிறார்கள்? வங்கிகள், பரஸ்பர நிதிகள், அந்த நிதிகளை மேலாண்மை செய்பவர்கள் ஆகியோர், கீழிருந்து மேல் செல்லும் திசையில் பயணித்து நிதி நிர்வாகப் ‘பொருட்களை' உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு உங்களைப் பற்றிய குறிப்பான அக்கறை இல்லை, பொதுவாக சந்தையின் தேவைக்கேற்ப இத்திட்டங்களை உருவாக்குகிறார்கள்.

அப்படியென்றால் உங்களைப் பற்றிய அக்கறையோடு, உங்களுக் கேற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, பரிந்துரைப்பது யார்? அந்த மேலி ருந்து கீழ் அணுகுமுறையை உங்க ளுக்குச் சாதகமான முறையில் செயல்படுத்துபவர் யார்? அவர் தான் இக்கட்டுரையின் கதாநாயகனான நிதிவள ஆலோசகர்.

ஆலோசகர் அவசியம்

எனது அடுத்த பத்தியில் நிதி வள ஆலோசகர் எப்படி உங்களுக்குத் திட்டங்களைத் தேர்வு செய்கிறார் என்று விவரிக்கிறேன். ஆனால், இப்பொழுது ஆலோசகரின் தேவை மற்றும் அவர் எப்படி அங்கம் வகிக்கிறார் என்பதை மட்டும் உணர்த்த விரும்புகிறேன்.

அவரது முக்கிய நோக்கம் உங்க ளைப் புரிந்து கொண்டு, உங்களுக்கு எது தேவை, என்ன திட்டங்கள் பயன்படும் என்பதை கண்டறிந்து உங்களுக்குப் பரிந்துரைப்பது.

சமயோசிதமான வழி

முதலாவது, உங்கள் முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பது. இதன் முக்கியத்துவம் மிக அதிகம். ஒரு ஆலோசகரின் உந்துதல் இல்லாததால் முடங்கிக் கிடக்கும் நிதித் திட்டங்கள் ஏராளம். இரண்டாவது, அப்படி ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தில் உங்களை நிலையாக பயணிக்கச் செய்தல். நடுவில் சோர்ந்தோ, ஏமாற்றமடைந்தோ திட்டத்தைக் கைவிடாமல் இருக்கச் செய்தல். மூன்றாவது, மிக முக்கியமாக, உபயோகமற்ற பல நிதித் திட்டங்களில் உங்களை முதலீடு செய்ய விடாமல் தடுத்தல். இந்த மூன்றாவது மிக முக்கியம். இந்த ஒரு விஷயத்தாலேயே பலரும் பெரும் பயன் அடைவார்கள்.

ஆகையால், உங்கள் தேவைகளை அறிந்து, உங்களுக்கு நிதி வள ஆலோசனை வழங்க ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்வதே சமயோசிதமான வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

srikanth@fundsindia.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in