

1990களில் தமிழகத்தில் தேக்குமரத் திட்டங்கள் என்று இருந்தன. ரூ.975 முதல் ரூ.1,275 வரை கட்டினால் 20 வருடங்களில் ரூ. 62,000 கிடைக்குமென்ற விளம்பரங்களைப் பார்த்து அதை நம்பி பணம் கட்டி மோசம் போனோர் பல்லாயிரக்கணக்கானவர்கள்.
பஞ்சாபில் ஒரு நிறுவனம் பல லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் வீதம் பெற்று 25 வருடங்களில் 2.2 கோடி ரூபாய் தருவதாகக் கூறியதுடன் பின் தேதியிட்ட காசோலைகளும் கொடுத் திருந்தனர்! ஆனால் போட்டதெல்லாம் மண்ணாய் போச்சு!
சமீபத்திய வேடிக்கை ஈமு கோழித் திட்டம். லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.6,000 வரை கூடச் சம்பாதிக்கலாம் என்று பிரபலமான நடிகர் நடிகையரை வைத்து கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வந்தன. இதில் ஏமாந்தவர்கள் ஏழைகள், படிக்காதவர்கள் என்று நினைத்து நீங்கள் ஏமாறாதீர்கள்.
பதிவு பெறாத சிட்பண்டுகள் பதிவு பெற்றவற்றைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் உள்ளதாகச் சொல்கிறார்கள். இதில் பணம் இழப்பது என்பது என்றும் முடியாத கன்னிதீவு தொடர்கதை! பொன்ஸி திட்டங்களில், மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் ஏமாறுபவர்கள் நடுத்தர மக்களும், படித்த அதிகாரிகளும், அவர்களது துணைவியருமல்லவா?
அதை விடுங்கள், Derivatives-ல், அந்நியச் செலவாணியில் கோடிகோடியாய்க் கோட்டை விட்டவர்கள் பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும், வாணிபம், பொருளாதாரம் படித்த வல்லுநர்களும் ஆயிற்றே!
பங்குச் சந்தையில் காலையில் வாங்கி, மாலையில் விற்று லாபம் பார்த்து விடுவேன் என்று சொல்பவர்களை என்ன சொல்வது? ஒரு பங்கை வாங்குபவர் அதை வாங்குவது கெட்டிக்காரத்தனம், லாபகரமானது என்று வாங்கும் அதே நேரத்தில்தானே அந்தப் பங்கை விற்பவர் அதை விற்பதுதான் சாமர்த்தியம் அனுகூலமானது என்று நினைக்கிறார்? இதில் யார் சரி என்று நாளை தெரியுமா? காலம் சொல்லுமா? சந்தை ஏறலாம்; இறங்கலாம். ஏன், எப்படி என்று தெரியாமல், புரியாமல் விளையாடலாமா? விண்டவர் கண்டதில்லை, கண்டவர் விண்டதில்லை என்பதுதானே உண்மை?
இது சாதாரணமாகச் சாத்தியமில்லை. நியாயமாக நடக்க முடியாது எனத் தெரிந்தும் பலரும் விட்டில் பூச்சி போல இவைகளில் விழுவதேன். அதிகம் சம்பாதிக்க வேண்டும், சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை, பேராசை வந்தால் அதுவும் காமக்கடும்புனல் போன்றது தானோ!
‘முதலீட்டின் முதல் விதி போட்ட முதலீட்டை இழக்கக்கூடாது; இரண்டாவது விதி இந்த முதல் விதியை மறந்துவிடக்கூடாது’ என்பார் உலகின் மிகப்பெரிய, மிக வெற்றிகரமான முதலீட்டாளரான வாரன் பபெட். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அவர் தனக்குத் தெரியாத தொழில்களின் பங்குகளை வாங்குவதே இல்லையாம்!
பின்னால் வரப் போவதாகக் கருதப்படும் லாபத்தை எதிர்பார்த்து தாம் செய்துள்ள முதலீட்டையே இழக்கும் செயல்களை அறிவுள்ளவர்கள் செய்யமாட்டார்கள் என்று அன்றே சொன்னார் வள்ளுவர்.
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
somaiah.veerappan@gmail.com