

வெற்றிகரமான தொழில் அதிபர்களின் வெற்றி ரகசியம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வெற்றியாளரின் ரகசியமும் தனித்துவமானவை என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் பார்த்தால் அவர்களது வெற்றியின் ரகசியம் ஒன்றுதான். அந்த பிரம்ம ரகசியம் என்னவாக இருக்கும். சற்று விரிவாகவே ஆராயலாம்.
வெற்றிகரமான தொழில்முனைவோராக வேண்டுமெனில் முதலில் உங்களது இலக்கு எது என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற அனைத்து தொழிலதிபர்களும் தங்களது இலக்கை நிர்ணயித்து அதை எட்டுவதையே லட்சியமாகக் கொண்டு முன்னேறியுள்ளனர். இதுதான் அவர்களது கடந்துவந்த பாதைகள் காட்டுகின்றன.
குறிக்கோள் எது என்பதை திட்டவட்டமாக வரையறை செய்தால்தான் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவு பிறக்கும். ரயில் நிலையத்துக்குச் சென்று ஊருக்கு டிக்கெட் கொடுங்கள் என்றால், எந்த ஊருக்கு என்று டிக்கெட் கொடுப்பவர் கேட்பார். ஏதாவது ஒரு ஊருக்கு என்றாலும் அந்த ஊரின் பெயர், அது எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பதையாவது தீர்மானித்தாக வேண்டும். அதைப்போலத்தான் தொழில் முனைவோராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் எந்தத் தொழிலில் இறங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
குறிக்கோள் எது என்பதை திட்டவட்டமாக வரையறை செய்தால்தான் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவு பிறக்கும். ரயில் நிலையத்துக்குச் சென்று ஊருக்கு டிக்கெட் கொடுங்கள் என்றால், எந்த ஊருக்கு என்று டிக்கெட் கொடுப்பவர் கேட்பார். ஏதாவது ஒரு ஊருக்கு என்றாலும் அந்த ஊரின் பெயர், அது எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பதையாவது தீர்மானித்தாக வேண்டும். அதைப்போலத்தான் தொழில் முனைவோராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் எந்தத் தொழிலில் இறங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
அடுத்து இலக்கு நிர்ணயிக்க வேண்டும். எந்த காலகட்டத்தில் எந்த நிலையை எட்ட வேண்டும் என்பதை திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணத்தை கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்தியாவின் பெரும் பணக்காரராக உயர்ந்த திருபாய் அம்பானி, ஆரம்ப காலத்தில் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றியவர். இவர் தொழில் தொடங்கும் ஆரம்ப நிலையில் வங்கி மேலாளரிடம் சென்று கடன் கேட்டார். அப்போது இவரது தொழில் விவரங்களைப் பார்த்த அந்த வங்கி மேலாளர், கடன் வழங்குவதற்கு யாராவது ஜாமீன் அளிப்பார்களா என்று கேட்டார். அத்துடன் உங்களிடம் எவ்வளவு தொகை முன்பணம் உள்ளது, உங்களது திட்ட அறிக்கை எங்கே? என்று கேட்டார்.
உடனே அம்பானி, தனது பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய டைரியை எடுத்து, இந்தியாவில் ஒரு பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பேன். இத்தனை ஆண்டுகளில் அது நெம்பர் 1 ஆலையாக உயரும். அதைத் தொடர்ந்து ரசாயன ஆலைகள் உள்ளிட்டவை அமைப்பேன் என்ற விவரங்களைக் காட்டினார். பணக்காரர்கள் வரிசையில் முதல் பணக்காரராக உயர்வேன் என்றார். இவர் கூறியதைக் கேட்ட அந்த மேலாளர் சிரித்தபடியே, கடன் தர முடியாது என்று கூறிவிட்டாராம். ஆனால் மனம் தளராத அம்பானி தனது இலக்கில் தெளிவாக இருந்ததால் இந்தியாவில் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது.
இதற்குக் காரணம் புரிகிறதா? அம்பா னியின் குறிக்கோள் மற்றும் இலக்கு தெளிவாக இருந்தது. அதை நோக்கி முன்னேறியதுதான் அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந் தது. குறிக்கோள் என்ன? அதை எவ்வ ளவு காலத்தில அடைய வேண்டும் என்பதில் தெளிவும் திட்டமிடலும் அவசியம்.
தொழிலதிபராக மட்டுமல்ல வாழ்க்கையில் மிக உயரிய இடத்தை அடைந்தவர்களது பின்னணியும் இதுதான். இதற்கு மற்றொரு உதாரணம் மிகச் சரியானதாக இருக்கும்.
அமெரிக்காவின் அதிபராக ஜான் எப் கென்னடி இருந்தபோது வெள்ளை மாளிகையைச் சுற்றிப்பார்க்க பள்ளி மாணவர்கள் குழு ஒன்று வந்தது. மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த அதிபர் கென்னடி, ஒரு மாணவரைப் பார்த்து எதிர்கால லட்சியம் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவரோ, வெள்ளை மாளிகையில் குடியேற வேண்டும் என்றாராம்.
அதாவது அமெரிக்க அதிபராவதுதான் அவரது லட்சியம் எனக் கூறினார். அதைக் கேட்டு மற்ற மாணவர்கள் பரிகசித்து சிரித்தனர். ஆனால் அந்த மாணவர் பின்னாளில் அமெரிக்க அதிபரானார் என்பதுதான் உண்மை. அவர் வேறு யாருமல்ல பில் கிளிண்டன்.
இலக்கும், குறிக்கோளும் எப்படி உங்களது பயணத்தைத் தீர்மானிக்கிறது என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.
aspireswaminathan@gmail.com