

நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மசோதா தேவையா? தேவையில்லையா? என்பதை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
பொருளாதார வளர்ச்சிக்கு நிலம் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
இந்தியா ஒரு விவசாய நாடு, நாட்டில் 60 சதவீத வேலை வாய்ப்பை அளிக்கும் துறை, இத்துறை வசம்தான் 60 சதவீத நிலப்பரப்பு உள்ளது என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயத்தின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது.
உற்பத்தித் துறையை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கவும், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தவும் நிலம் தேவைப்படுகிறது.
ரயில்வே, உருக்குத்துறை, சுரங்கத் துறையில் மட்டும் ரூ. 20 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. இவற்றை ஈர்க்கவேண்டுமெனில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஆனால் நாட்டில் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் இன்னமும் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன. கோல் இந்தியா நிறுவனம் வசம் 2 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஹெக்டேர்தான் பயன் படுத்தப்ளாபட்டுள்ளன. எஞ்சிய நிலங்கள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளன.
நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (எஸ்இஇஸட்) ஏற் படுத்துவற்காக 2005-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவரை 576 சிறப்புப் பொருளாதார மண்டலங் களுக்காக 60,374 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதில் 37 சதவீத நிலங்கள்தான் பயன் படுத்தப்பட்டன. எஞ்சிய 63 சதவீத நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குறைந்தது 50 சதவீத இடங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் 16 சதவீத நிலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நிலம் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில் கிடைத்த நிலத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? என்று சிஏஜி கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள நிலங்கள் நமது வளர்ச்சிக்குப் போது மானதாக இருக்காது என்று சிலர் வாதிடக்கூடும். உதாரணத்துக்கு நமது மின்னுற்பத்தி ஆண்டுக்கு 7 சதவீதம் முதல் 8 சதவீத வளர்ச்சியை அடுத்த 20 ஆண்டுகளுக்கு எட்டினால்தான் அதி கரித்துவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இத்தகைய வளர்ச்சிக்குப் போதுமான அளவுக்கு நிலக்கரி சுரங்கங்கள் இல்லை என்பதுதான் வெளிப்படையான உண்மை.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 32,87,260 சதுர கிலோ மீட்டராகும். இதில் நிலப்பகுதி மட்டும் 29,73,190 சதுர கிலோ மீட்டராகும். இதில் விவசாய நிலப்பகுதி வெறும் 1,79,900 சதுர கிலோமீட்டர் மட்டுமே. காடுகள் 6,77,598 சதுர கிலோமீட்டரை ஆக்கிரமித்துள்ளன. விவசாய நிலப்பரப்பில் நிரந்தர பயிர் சாகுபடி நிலம் வெறும் 3.3 சதவீதம் மட்டுமே.
நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினையைக் காட்டிலும் ஏற்கெனவே உள்ள நிலங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் எளிது. அதிலும் குறிப்பாக உபயோகப்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது.
விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு தொழில்துறையை வளர்க்கும் முடி வானது எதிர்காலத்தில் உணவுக்கு பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை அரசும் உணர்ந்துதானிருக்கிறது.
விவசாயப் பரப்பளவு குறைந்து வருகிறது என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள். இதற்குக் காரணம் விவசாயம் லாபகரமானதாக இல் லாததுதான். விவசாயமும் மற்ற தொழில்களைப் போல லாபகரமானதாக இருக்க வேண்டும். அத்துடன் புதிய தொழில்நுட்பத்தை சுவீகரிக்காத எந்தத் தொழிலும் காலாவதியாகிப்போய்விடும்.
ஒருகாலத்தில் உணவுக்கு பிற நாடுகளை எதிர்நோக்கியிருந்த இஸ்ரேல் இன்று உணவு ஏற்றுமதி மூலம் பணம் ஈட்டுகிறது. இதற்குக் காரணம் அங்கு பின்பற்றப்பட்ட நவீன தொழில் நுட்பம்தான். பொருளாதார வளர்ச்சி என்பது விவசாயம், தொழில்துறை வளர்ச்சியோடு சேர்ந்த ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஒருபக்கவீக்கம் சம அளவிலான வளர்ச்சியாக இருக்காது.
பொருளாதார ஓட்டத்தில் இருக்கிறோம். இதில் பிற நாடுகளுடனும் நாம் ஓட வேண்டிய கட்டாயம் உள்ளது. குறைவான நிலப்பரப்பில் உயரிய தொழில்நுட்பம் மூலம் அதிக வளர்ச்சியை அது தொழில்துறையாக இருந்தாலும், விவசாயமாக இருந்தாலும் இருக்க வேண்டியது கட்டாயம்.
பொருளாதார வளர்ச்சி எனும் புலி துரத்துகிறது. இதில் மற்ற நாடுகளுடன் நாமும் ஓட வேண்டிய கட்டாயம் உள்ளது. மற்றவர்களைவிட நாம் விரைவாக ஓடினால்தான் புலியிடமிருந்து தப்பிக்க முடியும். இல்லையேல்….