Published : 06 Apr 2015 11:08 AM
Last Updated : 06 Apr 2015 11:08 AM

உன்னால் முடியும்: சொந்தத் தொழிலே திருப்தி தருகிறது

எல்இடி விளக்குகள், எலெக்ட்ரானிக் அழைப்பு மணி உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து வருகிறார் வாசுதேவன் தச்சோத். பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், கோயம்புத்தூரில் சொந்த தொழில் செய்து வருகிறார். டெல்லி, கொல்கத்தா என 25 ஆண்டுகள் இந்த துறையில் அனுபவம் கண்டிருக்கிறார்.

2010-ல் கோவையில் தொழில் தொடங்கி இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக வளர்ந்துள்ளார். இவரது இரண்டு தொழிலகங்களில் இன்று 30 நபர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் இந்த எல்இடி விளக்குகள் தயாரிப்பதால் மனசுக்கும் நிம்மதியாகவும் இருக்கிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகளுக்கும் முயற்சி செய்து வருவதால் நம்மால் முடிந்த நன்மையை செய்கிறோம் என்று பெருமையாகவும் உணர்வேன் என்கிறார்.

1990-ல் எலெக்ட்ரிக்கல் சோக் செய்வதற்கு முயற்சி செய்து பார்த்தேன். அதுதான் இந்த துறையில் ஈடுபடுவதற்கான முதல் படியாக அமைந்தது. பெரிய நிறுவனங்கள் தயாரித்து விற்கும் அதே தரத்தில் குறைந்த விலைக்குத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமாக இருந்தது.

அது நல்ல பலனைக் கொடுத்தது. அதிலிருந்து எலெக்ட்ரானிக் துறையில் புதிய புதிய முயற்சிகள் செய்து பொருட்கள் கண்டுபிடித்து விற்பனை செய்து வருகிறேன். உழைப்பதன் மீது ஆர்வம்தான் இன்று ஓரளவுக்கு என்னை நல்ல நிலைமையில் வைத்துள்ளது.

எனக்கு சின்ன வயதிலிருந்தே இந்த துறை சார்ந்த ஆர்வம் இருந்தது. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் கல்லூரி படிப்பை வலியுறுத்தினார்கள். அவர்களுக்காக பொருளாதார பட்ட படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கினேன். அண்ணன் கொல்கத்தாவில் வேலை செய்ததால் அவருடன் தங்கிக் கொண்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

ஆனால் வேலை நேரம் போக எலெக்ட்ரிக்கல் வேலைகளை ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். அங்கேயே மாலை நேர வகுப்பில் எலெக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ படித்தேன். பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு எலெக்ட்ரிக்கல் நிறுவனங்களில் வேலை செய்ய ஆரம்பித்தேன்.

அந்த தொடர்பின் மூலம் ஒரு கட்டத்தில் கொல்கத்தாவிலிருந்து டெல்லி வந்து தொழில் தொடங்கினேன். காலிங் பெல், எலெக்ட்ரிக்கல் சோக் என பல வகைகளில் பொருட்களை உற்பத்தி செய்தேன். ஆனால் நமது சொந்த மண்ணில் தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. 2010-ல் டெல்லியிலிருந்து கோவை வந்து இங்கு சொந்த தொழில் யூனிட்டை ஆரம்பித்தேன். இன்று நல்ல வகையில் ஆர்டர்கள் தேடி வருகிறது.

தற்போது எல்இடி விளக்குகள், தெரு விளக்குகள், குழல் விளக்குகள் என பல வகை விளக்குகளையும் உற்பத்தி செய்து வருகிறேன். மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது. மத்திய அரசின் `மேக் இன் இந்தியா’ எங்களைப் போன்றவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தற்போது எனது தயாரிப்புகள் உள்நாட்டு சந்தையை மையமாக வைத்து நடந்து வருகிறது. மேலும் புதிய புதிய புராஜெக்டுகளில் முயற்சி செய்து செய்கிறேன். இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசுகளும் வாங்கி உள்ளேன். தொழிலுக்கான கடன் மற்றும் மானியங்கள் மத்திய அரசுடமிருந்து கிடைக்கிறது.

நான் ஆரம்ப முதலீடு எதையும் பெரிதாகப் போடவில்லை. கையிலிருந்த சொற்ப பணத்தில்தான் தொடங்கினேன். ஆனால் இன்று தொழிலுக்குத் தேவையான புதிய முதலீடுகள், இயந்திரங்கள், வாகனங்கள் எல்லாமே இந்த உழைப்பிலிருந்தே வாங்கியது என்கிறார்.

கேரளத்தில் தொழில் தொடங்குவதை விட கோவையில் தொடங்கினால் சந்தைப்படுத்துவது எளிது. மேலும் இரண்டு மாவட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பதால் இங்கு தொடங்கினேன்.

தொழில்துறை நகரமாக இருப்பதால் மின் தட்டுப்பாடும் குறைவுதான் என்று கூறும் வாசுதேவன் எங்கிருந்தாலும் நமது தொழிலில் சரியாக அணுகுமுறையில் சரியாகவும், ஒழுக்கத்தோடும் இருந்தால் எந்த தொழிலிலும் வெற்றி பெறலாம் என்கிறார். தொழில்முனைவோருக்கு இந்த பார்வையும் முக்கியம்தான்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x