

ஒருகாலத்தில் இந்தியாவில் எந்த பொருளை எடுத்தாலும் அவை சீன தயாரிப்பாகத்தானிருக்கும். விலை குறைவு என்பதுதான் அதற்குக் காரணம். உலகின் அனைத்து நாடுகளுக்குமே சீனத் தயாரிப்புகள் பெரும் சவாலாகத்தான் திகழ்ந்தன. கால மாற்றத்தில் சீனாவின் ஆதிக்கமும் தகரத் தொடங்கியுள்ளது. அங்குள்ள பெரிய ஆலைகள் அனைத்தும் இப்போது சுருங்கி வருகின்றன.
எட்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கல் லைட்டிங் என்ற நிறுவனத்தில் 20 ஆயிரம் பேர் இருந்தனர். இப்போது 2 ஆயிரம் பணியாளர்கள்தான் உள்ளனர். தெற்கு சீனாவில் மிகப் பிரம்மாண்டமான தொழிற்சாலையைக் கொண்ட இந்த நிறுவனம் இப்போது தனது ஆலையின் பல பகுதிகளை வெவ்வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளது.
அதிகரித்து வரும் ஊழியர்களுக்கான ஊதியம், ரியல் எஸ்டேட் மதிப்பு கடும் உயர்வு, தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகள் எதையும் அரசு எடுக்காதது மற்றும் முன்பு போல பிற நாடுகளிலிருந்து அதிக ஆர்டர்கள் கிடைக்காதது போன்ற காரணங்கள் சீன நிறுவனங்களை சுருங்கும் நிலைக்குத் தள்ளியுள்ளன.
இதேபோல தெற்கு சீனாவில் செயல்பட்டு வந்த சமையலறை சாதன உற்பத்தி நிறுவனமான கான்குன்-னில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்த ஊழியர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்துக்கும் மேல். ஆனால் இன்றோ இந்நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.
தெற்கு சீனாவில் உள்ள சில ஆலைகளில் 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை ஆள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
13 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ள தாய்வானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் பல முன்னணி நிறுவனங்களுக்கான ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கிறது.
இந்நிறுவனமும் படிப்படியாக ரோபோக்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் இங்கும் ஆள்குறைப்பு நடக்கும்.
கம்யூனிச நாடாக இருந்த போதிலும் அங்கு தாராளமயத்தை அனுமதித்தனர். ஊழியர்களின் செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டமும் அங்கு அதிகரித்து விட்டது. ஊழியர்களில் பெரும்பாலானோர் சேவைத் துறை சார்ந்த பணிகளை தேர்வு செய்யத் தொடங்கிவிட்டதால் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடு முடங்கத் தொடங்கியுள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி வரும் நிறுவனங்கள் நாளடைவில் மூடப்படும் சூழலுக்குத் தள்ளப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
1990-2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவின் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த விலையில் ஆலைகள் அமைக்க இடம் தரப்பட்டன. ஆனால் இன்றோ இங்கு நிலம் கிடைப்பதே அரிதாக உள்ளது.
சீனாவின் புதிய தொழில் கொள்கையும் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
சீனாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி தற்போது சரிவைச் சந்தித்துள்ளது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சீன உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.