உன்னால் முடியும்: தேவையுணர்ந்து செயல்பட்டால் வெற்றிதான்!

உன்னால் முடியும்: தேவையுணர்ந்து செயல்பட்டால் வெற்றிதான்!
Updated on
2 min read

படித்த இளைஞர்கள் வெளிநாட்டுக்கு வேலை தேடிச் செல்வதைவிட சொந்த நாட்டிலேயே தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் செந்தூரன். அதிலும் வெளிநாட்டிலேயே செட்டில் ஆக வாய்ப்புகள் இருந்தும் விடாப்பிடியாக இங்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்.

பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் பெற்றோர் செட்டிலான நாடு கத்தார். இவர் பிறந்தது, இளவயது காலங்களைக் கழித்தது எல்லாம் கத்தார் நாட்டில்தான். பெற்றோரின் விருப்பத்தின்பேரில் தமிழகத்துக்கு படிக்க வந்து மேல்நிலைக்கல்வி மற்றும் இளநிலை பட்டங்களை படித்துள்ளார்.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர் மீண்டும் தமிழகம் வந்து இங்கேயே தனக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளார். இப்போது இவரது நிறுவனத்தில் 30 பேர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பலருக்கும் வேலைவாய்ப்புகளை அளிப்பதே தனது நோக்கம் என்கிறார் இந்த இளம் தொழில்முனைவர்.

சென்னை தி.நகரில் எக்ஸ்பர்டைல் என்கிற பெயரில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான ஆலோசனை நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் செந்தூரனுடன் அவரது தொழில் அனுபவத்தையும், தொழில் முனைவோராக உருவாக பின்னணி உத்வேகத்தையும் கேட்டோம்.

``சிறு தொழில் முனைவோர்கள் தங்களுக்கு தெரிந்த தொழிலில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு பரிச்சயமில்லாத விளம்பர துறை, சந்தைப்படுத்துவது மற்றும் பிராண்டிங் போன்ற விஷயங்களில் எல்லாம் முழுமையாக ஈடுபடமாட்டார்கள்.

அந்த இடங்களில் அவர்கள் சறுக்குவதால் தொழிலில் வேகமான வளர்ச்சி இருக்காது. இங்குள்ள தொழில் முனைவோர்கள் தேங்கும் இடமும் இதுதான். எனவே எனது தொழிலாக இந்த ஆலோசனை வேலைகளையே தீர்மானித்துக் கொண்டேன்.

தற்போது சிறு தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், வழிகாட்டு தல்கள் மற்றும் அவர்களது தொழிலை மேம்படுத்தும் வேலைகளை செய்து கொடுக்கிறேன் என்று தனது தொழி லுக்கான சிறிய அறிமுகத்தைக் கொடுத் தார்.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்கா சென்று அங்கு எம்பிஏ மற்றும் எம்எஸ் படித்தேன். வெளி நாடுகளில் பல வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும் திரும்ப தமிழகம் வந்து இங்கு ஒரு முன்னணி தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வங்கிப் பணியின்போதுதான் தொழில்முனைவோர்களின் பிரச்சினைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல், தொழில் மேம்பாடு ஆலோசனைகள் இங்கு குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.

கோடிகளில் பிசினஸ் செய்யும் தொழில் முனைவோராக இருப்பார் ஆனால் தொழில்நுட்ப விஷயத்தில் பரிச்சயம் இருக்காது. தொழிலை அடுத்த கட்டத்துக்கு விரிவாக்க சில தொழில்நுட்பம் தேவைப்படும், ஆனால் அதை எங்கிருந்து பெறுவது, அதை கொண்டுவந்தால் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் திட்டமிட மாட்டார். இது போல தொழில் முனைவோர்களின் நடைமுறை சிக்கல்களை அந்த பணியில் இருந்தபோது தெரிந்து கொண்டேன்.

2013 அந்த வேலையிலிருந்து விலகி தொழில் ஆலோசனை கொடுப்பதற்கு என்றே இந்த நிறுவனத்தை தொடங்கினேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருந்தது.

2014-ம் ஆண்டில் எனக்கென்று தனியாக அடையாளம் கிடைத்தது. எனது தொழிலும் வளரத் தொடங்கியது.

தொழிலை பிராண்டிங்காக வளர்ப்பது, தனக்கென்று லோகோ உள்ளிட்ட வடிவமைப்புகளில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் சிறு தொழில் சார்ந்தவர்களை ஊக்குவிக்கும்போது அவர்களது தொழிலும் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது. இதன் மூலம் எனது தொழில் நிறுவனமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அழுத்தமாக நம்புகிறேன். தேவையானதை தேவையான நேரத்தில் செய்கிறபோது எந்த தொழில் என்றாலும் வெற்றிதான்.

அந்த வெற்றியை நோக்கி தொழில் முனைவோர்களுக்கு ஒரு சிறிய பாதை அமைத்துக் கொடுக்கிறேன். அந்த தொழில்முனைேவார் பெறும் வெற்றியில் தான் எனது வெற்றியும் அடங்கி இருக்கிறது.

ஏனென்றால் நானும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தொழில்முனை வோராக வளரவேண்டும் என ஆசைப் படுகிறேன் என்கிறார்.

maheswaran.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in