Published : 13 Apr 2015 10:50 AM
Last Updated : 13 Apr 2015 10:50 AM

முதல் செலவு: பரஸ்பர நிதிகளோடு பழகலாம் வாருங்கள்

பரஸ்பர நிதி என்றால் என்ன என்ற கேள்விக்குப் பொதுவாகத் தரப்படும் பதில் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். நாம் முதலில் அந்த குழப்பமான பதிலைப் பார்த்து விடுவோம். பின்னர், அதிலிருக்கும் குழப்பத்தை தீர்ப்பதன் மூலமாகவே இந்த முதலீட்டுச் சாதனத்தின் உண்மைத் தன்மை என்ன என்பதைக் கண்டறிய முடியும்.

பொதுவாக தரப்படும் விளக்கம் என்ன? ‘பரஸ்பர நிதி என்றால் பல முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து தங்களிடம் உள்ள பணத்தை திரட்டி அதை ஒரு நிதி மேலாளரிடம் நிர்வகிக்க கொடுக்கிறார்கள். அந்த நிதி மேலாளர் தனது மேலாண்மையால் உருவாக்கும் லாபத்தினை (அல்லது நஷ்டத்தினை) அவரவர் முதலீட்டுப் பங்கிற்கு ஏற்ப பகிர்ந்து கொள்கிறார்கள்’ என்பது.

இதைப் படிக்கும் எவரும் ‘இதென் னடா சோதனை…நான் என் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமென்றால் இன்னொரு பத்து பேரைப் பிடித்து அவர்களிடமிருந்து பணம் திரட்டி மொத்தமாகக் கொண்டு போய் ஒருவரிடம் கொடுக்க வேண்டுமா, நடக்கிற காரியமா’ என்றுதான் யோசிப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் நடப்பதில்லை. யார் வேண்டுமானாலும், தனியாக, எப்பொழுது வேண்டுமானாலும் பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

அப்புறம் இதில் ‘பரஸ்பரம்’ என்று என்ன இருக்கிறது? இதைப் புரிந்து கொள்ள முதலில் ‘பரஸ்பரம்’ என்றால் என்ன என்று யோசிப்போம். இந்த வார்த்தை ஒரு குழுமத்தின் ஒட்டுமொத்தக் கூட்டுறவையும் குறிப் பிடக்கூடியது. ஒரு நிகழ்வால் ஒரே வகையான நன்மையோ தீமையோ பலருக்கு ஒரே விகிதத்தில் நிகழ்ந்தால் அதைப் ‘பரஸ்பர விளைவு’ என்று கருதுகிறோம். சில திட்டங்களைத் தீட்டும் போது ‘பரஸ்பர நன்மைக்காக’ என்று சொல்கிறோம் என்றால் - இருவர் அல்லது ஒரு குழுவின் மொத்த நன்மைக்காக என்று இதற்கு அர்த்தம்.

உதாரணத்திற்கு, ஒரு கூட்டுக் குடியிருப்பில் விதிமுறைகள் போன்று சிலவற்றை வகுத்துக் கொள்கிறோமே... எதற்காக? அந்தக் குடியிருப்பில் இருப்பவர்களின் - அந்தக் கூட்டமைப்பின் மக்களுடைய ‘பரஸ்பர’ நன்மைக்காக என்றுதானே புரிந்து கொள்கிறோம்.

இந்த அர்த்தத்தில்தான் இந்த நிதித் திட்டங்களின் பரஸ்பரத் தன்மை வருகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நிதித் திட்டமும் ஒரு குறிப்பிட்ட திட்ட வரைவுடன் செயல்பட பணிக்கப்பட்டிருக்கிறது (இதை ஆங்கிலத்தில் mandate என்று சொல்வார்கள்). அந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அனைவரும் அந்தத் திட்ட வரைவுப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தேசித்துச் செய்கிறார்கள். ஆதலால் அந்த நிதித் திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால் வரும் லாபமோ, நஷ்டமோ அனைவரையும் சென்றடையும், பரஸ்பரமாக.

நாம் நேரடியாக பங்கு வர்த்தகத்தில் செயல்பட்டு சொந்தமாக பங்குகளை இஷ்டம் போல வாங்கி விற்றால், நமக்கு வரும் லாப நஷ்டங்கள் நம்மை மட்டுமே சாரும். ஆனால், ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் போது, அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் அனைவருமே ஒரே வகையாகவே பாதிக்கப்படுவார்கள். ஒரு விதத்தில், இது வீட்டில் உண்பதற்கும், உணவ கத்தில் உண்பதற்குமான வேறுபாடு. நம் வீட்டில் நமக்கேற்றவாறு சமைத்துக் கொண்டு, அதன் பலனை நாமே அனுபவிக்கலாம். ஒரு உணவகத்திற்குச் சென்றால், அங்கே எல்ேலாருக்குமாக செய்யப்படும் உணவு தான் நம்மையும் வந்து சேரும்.

இந்த வகையில் வடிவமைக்கப் பட்டிருப்பதால், பரஸ்பர நிதிகளை ஒரு கூட்டு முதலீட்டு முறை என்று சொல்லலாம். இதில் எவரும் எப்பொழுது வேண்டுமானாலும் நுழையலாம், எப்பொழுது வேண்டுமானாலும் விலக லாம் என்ற வகையில் ஒரு திறந்த அமைப்பாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட திட்டங்கள் பல பரஸ்பர நிதி நிறுவனங்களால் முன்னெடுக் கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் ’செபி’ (SEBI) எனப்படும் மத்திய அமைச்சரவையின் கீழ் வரும் மேலாண்மை அமைப்பினால் கண் காணிக்கப்படுகின்றன; இந்த அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரஸ்பர நிதி திட்டங்கள் செயல்படுகின்றன.

(முக்கியமான விஷயம்: இந்த நிறுவனங்களில் மிகப் பெரும்பான்மை யானவை தனியார் நிறுவனங்கள். மத்திய அரசு மற்றும் அதன் அமைப்பு களின் கடுமையான, நெருக்கமான கண்காணிப்பில் செயல்படுகின்றன என்றாலும், இவற்றை அரசு நிறுவனங் களாகக் கருதக் கூடாது).

இந்தியாவில் இன்று சுமார் நாற்பது பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இவை மொத்தமாக சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நிதித்திட் டங்களை நிர்வாகம் செய்கின்றன; சுமார் 12 லட்சம் கோடி ரூபாய்களை நிர்வகிக்கின்றன. இவற்றுள் மிகப் பழையது யூடிஐ நிறுவனம். தனியார் நிறுவனங்களில் பல வருடங்களாக செயல்படுவது ஃப்ராங்க்ளின் டெம்பிள் டன் நிறுவனம். மிக அதிகமான நிதியை நிர்வகிப்பது ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் ஆகியவை. இவை தவிர, ஒரே ஒரு திட்டம் மட்டும் வைத்திருக்கும் பிபிஎஃப்ஏஎஸ், மிகக் குறைந்த நிதி நிர்வாகக் கட்டணம் வசூலிக்கும் க்வாண்டம் போன்ற சிறப்பான சிறிய நிறுவனங்களும் உள்ளன.

இவர்கள் அனைவரும் ஒரு புதிய நிதித் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டுமென்றால், ஒவ்வொரு முறையும் செபியின் ஒப்புதல் பெற வேண்டும். அந்தத் திட்டத்தை பற்றிய வரையறைகள் என்ன, எந்த மாதிரியான திட்டம் இது, யார் நிர்வகிப்பர் என்று தொடங்கி ஏராளமான தகவல்களை பொதுவில் வெளியிட்ட பின்னரே ஒரு திட்டம் சந்தைக்கு (முதலீட்டாளர்களுக்கு) வந்து சேரும்.

எதற்காக இதையெல்லாம் சொல் கிறேன் என்றால், பரஸ்பர நிதித் திட்டங்கள் இயங்கும் பொது வெளி என்பது ஒரு கட்டுக்கோப்பான, நெறிமுறைகளுக்குட்பட்ட, நெருங்கிய கண்காணிப்புக்குள் செயல்படுவது என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

ஒரு முதலீட்டுச் சமூகம் என்ற அளவில் நமக்குப் பல அலர்ஜிகள் உள்ளன - தனியார் நிறுவனங்கள் என்றால் சிலருக்கு ஒவ்வாது; பங்குச் சந்தை என்றால் சிலருக்கு ஒவ்வாது; உத்திரவாதமான வட்டி (அல்லது லாபம்) இல்லையென்றால் சிலருக்கு ஒவ்வாது. பரஸ்பர நிதிகள் என்ற விஷயம், இத்தகைய எல்லா ஒவ்வாமைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ள ஒரு முதலீட்டு முறை மற்றும் அமைப்பு. நம்மில் பலர் இந்த ஒவ்வாமைகளால் வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள்தான் சுருங்கி இருக்கிறோம். இந்த வரையறைகளுக்கு வெளியில்தான் வளம் இருக்கிறது.

- ஸ்ரீகாந்த் மீனாட்சி
srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x