

கையில வாங்கல, பையில போடல, காசு போன எடம் தெரியல. இந்த பழைய பாடலை மேற்க்கோளிட்டு இணையதளத்தில் சமீபத்தில் புலம்பியிருந்தார் மாதச் சம்பளக்காரர் ஒருவர். பெரும்பாலான சம்பளதாரர்களின் நிலைமை இதுதான்.
சம்பளம் போட்ட தகவல் வந்தவுடன், செல்போன் ரீசார்ஜ் தொடங்கி, டிவி ரீசார்ஜ், வீட்டு தொலைபேசி கட்டணம், வீட்டு இஎம்ஐ, கிரெடிட் கார்டு நிலுவை என அனைத்தையும் செலுத்திய பிறகு வெறுங்கையுடன்தான் வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும்.
மாதாந்திர சம்பளதாரர்கள் தங்களுக்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் எவ்வளவு தூரம் திட்டமிடுகிறார்கள், எந்த அளவுக்கு சேமிக்கிறார்கள் என ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் பல நுட்பமான தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.
50 சதவீதத்துக்கும் அதிகமான மாதாந்திர சம்பளதாரர்கள் தங்களது ஊதியத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவான தொகையைத்தான் சேமிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 10 சதவீதத்துக்கும் குறைவான தொகையை சேமிக்கும் தந்தைகள் 58 சதவீதம்.
மாத சம்பளத்தில் 22 சதவீதத்தை சேமிக்கும் பெற்றோரின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவு.
5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சேமிப்போர் 36 சதவீதம். 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சேமிப்போர் 20 சதவீதம். 15 சதவீதத் துக்கு மேல் 22 சதவீத பெற்றோர் சேமிக் கின்றனர். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வங்கிக் கணக்கை செயல்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
ஆனால் இதை ஆமோதிக்கும் பெற்றோர்களின் அளவு 10 சதவீதமே. ஆனால் 50 சதவீத பெற்றோர்கள் 15 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமே வங்கிக் கணக்குகளை செயல்படுத்துவதற்கு ஏற்ற வயது என்கின்றனர். ஆன்லைன் மூலமான ஷாப்பிங்கில் நடுங்கிப் போயிருக்கும் பெற்றோர்களின் அளவு 50 சதவீதத்துக்கும் மேல். தேவையற்ற பொருள்களை ஆன்லைனில் வாங்கி விடுவார்களோ என்ற அச்சத்திலேயே பல தந்தைகள் உள்ளனர்.
10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பாக்கெட் மணி அளிப்பதை மூன்றில் இருமடங்கு பெற்றோர் ஏற்கின்றனர்.
குழந்தைகளுக்கான முதலீடுகளில் பெற்றோர்களின் தேர்வு முதலில் வங்கி சேமிப்பாக உள்ளது. அடுத்தது நிரந்தர சேமிப்புக் கணக்கில் போடுவதை விரும்புகின்றனர். பங்குச் சந்தை, பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யும் பெற்றோர்களும் உள்ளனர். காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் தந்தைகளும் உள்ளனர். பெண் குழந்தையாக இருப்பின் தங்க நகைகளில் முதலீடு செய்வோரும் உண்டு.
பெற்றோரின் வருமானம் உயரும்போது அதை சேமிப்பதற்குப் பதிலாக குழந்தை களுக்காக செலவிடும் பெற்றோரே அதிகம் உள்ளனர். 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் பெருமளவு நிதி நெருக்கடி ஏற்பட்டு. அந்நாட்டு பொருளாதாரமே முடங்கிப் போனது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இவை அனைத்துக்கும் காரணம் அங்குள்ள மக்களின் செலவழிக்கும் திறன் அதிகமாக இருந்ததுதான்.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையின் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டபோதிலும் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவாக இருந்ததற்கு இங்குள்ள மக்களின் சேமிக்கும் திறன் அதிகமாக இருந்ததுதான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர்.
ஆனால் இப்போது இங்கும் செல வழிக்கும் கலாச்சாரம் வெகு வேகமாக பரவி வருகிறது. இது எதற்கு வழிவகுக்குமோ?