

புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க இப்போதெல்லாம் முதலீடு செய்வதற்கு ஏராளமான நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளனர் என்பதை கடந்த வாரம் பார்த்தோம். இந்தியாவில் சொந்த மாகத் தொழில் தொடங்குவது மிகவும் எளிதானது என்றே பலரும் கூறுகின்றனர்.
இது எனது விஷயத்திலும் நிதர்சனமாக நடந்தது. மற்றவர்களைக் கூறுவதைவிட எனது நிறுவனத்துக்கு முதலீடு கிடைத்த விவரம் நிச்சயம் பயனுள்ளதாகவும், ஆதாரபூர்வமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
2008-ம் ஆண்டு அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு களை முன்னணி ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை எடுத்தவுடன் பலரும் என் முயற்சியை வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்கள்.
அமெரிக்காவில் லேமன் சகோதரர்களின் பிரச்சினையால் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற ஆன்லைன் மூலமான பயிற்சி விபரீதமானது என்று கூறினர். இதற்கு வரவேற்பு இருக்காது, வேறு தொழிலை முயற்சிக்கலாம் என்று இலவசமாக ஆலோசனைகள் அளித்தவர்கள் அதிகம்.
அமெரிக்காவில் லேமன் சகோதரர்களின் பிரச்சினையால் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இதுபோன்ற ஆன்லைன் மூலமான பயிற்சி விபரீதமானது என்று கூறினர். இதற்கு வரவேற்பு இருக்காது, வேறு தொழிலை முயற்சிக்கலாம் என்று இலவசமாக ஆலோசனைகள் அளித்தவர்கள் அதிகம்.
ஆனால் இதற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்று உறுதியாக நம்பினேன். அகில இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவம், பொறியியல் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு இந்தியாவின் முன்னணி பேராசிரியர்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தேன்.
என்னதான் பொருளாதார தேக்க நிலை நிலவினாலும், இந்தியர்கள் தங் களின் குழந்தைகளுக்கான கல்வி விஷயத்தில் செலவு செய்ய ஒரு போதும் தயங்கமாட்டார்கள் என்ற எனது எதிர்பார்ப்பு உரிய பலனை அளித்தது.
நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் பல ஆயிரங்களை கட்டண மாக வசூலித்த சமயத்தில் மிகக் குறைந்த கட்டணம் மற்றும் திறன் மிகு பேராசிரியர்களின் பயிற்சி ஆகியன மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதில் முதலீடு செய்ய பலரும் முன்வந்தனர். இதற்கு அவர் கள் கூறிய காரணம், பொருளாதார தேக்க நிலையால் இந்தியர்களின் வருமானம் குறைந்தபோதிலும் கல்விக்காக அவர்கள் செலவு செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதே.
மேலும் வழக்கமான பயிற்சி மையங் களில் அதிக தொகை செலுத்தி ஒரு சில பேராசிரியர்களின் விரிவுரையைக் கேட்பதைவிட, இந்தியா முழுவதும் உள்ள பேராசிரியர்களின் விரிவுரைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். 13 மாதங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அபரிமித லாபம் கிடைத்தது. இதையடுத்து மேலும் பலர் முதலீடு செய்ய முன்வந்தனர்.
இதைக் கூறுவதற்குக் காரணமே நீங்கள் தொடங்கும் தொழில் அல்லது அளிக்கும் சேவைக்கு எப்போதும் தேவை இருக்க வேண்டும்.
சென்னை ஏஞ்செல்ஸ், மும்பை ஏஞ்சல்ஸ், இந்தியா ஏஞ்செல் நெட்வொர்க், அவிஷ்கார் ஆகிய துணிகர முதலீட்டு நிறுவனங்கள் தொழில் முனைவோரின் பயணத்தை எளிதாக்க உதவுகின்றன.
உங்களது தொழில் சிந்தனை சிறப்பாக இருந்தால் போதும், உங்களைத் தேடி முதலீடுகள் நிச்சயம் வரும். முதலீடுகள் குறித்து தொழில்முனைவோரான எம்.வி.எஸ். மணி என்பவரை சமீபத்தில் சந்தித்தேன். இவர் துணிகர முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஏஞ்செல் நெட்வொர்க் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளார். ‘‘தொழில் தொடங்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதில் தீவிரமாக இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழிலில் முதலீடு செய்கிறோம். கல்வித் தகுதி, கடந்த கால அனுபவங்கள், தொழில் தொடங்குவது குறித்து அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
சிறந்த தொழில் முனைவு யோசனை மட்டும் இருந்தால் போதாது. அதை செயல்படுத்துவதில் அவருக்குள்ள ஈடுபாடு, நம்பிக்கை, அதை விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் என்றார்.
அவரிடம் பேசியதிலிருந்து வெறும் தொழில் மூலம் லாபம் கிடைக்குமா, அதை விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதா, மூலதனம் செய்த தொழிலிலிருந்து 6 ஆண்டுகளில் லாபகரமாக வெளியேற முடியுமா என்பதையும் முதலீடு செய்யும் நிறுவனங்கள் பார்க்கின்றன என்பது புரிந்தது.
தொழிலுக்கான சாத்தியம், பொருள் விற்பனை வாய்ப்பு, எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும் உள்ளிட்ட விஷயங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஏஞ்செல் முதலீட்டு நிறுவனங்கள் குறைந்த அளவு முதலீடு செய்யும். அதேசமயம் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளைச் செய்யும்.
உங்கள் தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இத்தகைய முதலீடுகள் மிகவும் உதவியாக இருக்கும்.
aspireswaminathan@gmail.com