

கோவையைச் சேர்தவர் ஆனந்த். வயது 27. கோவையில் பிடெக் படித்து முடித்ததும், அமெரிக்கா சென்று எம்எஸ் படித்துள்ளார். இந்த கல்வித்தகுதிக்கு ஆண்டுக்கு பல லட்சம் சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்திருக்க முடியும். ஆனாலும் தனது தம்பிகளோடு சேர்ந்து சொந்த தொழிலில் இறங்கி விட்டார். புதுமையான தொழிலுமல்ல. ஆனாலும் தனது புதிய வியூகங்களின் மூலம் இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக மாறியுள்ளார். இந்த வாரம் இவரைச் சந்தித்தோம்.
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், படிப்புக்கு ஏற்ற வேலை தேட வேண்டும் என்கிற யோசனை எதுவும் இல்லை. ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது என்பதில் தெளிவு இல்லை. ஒரு கட்டத்தில் கால்டாக்சி தொழிலை மேற்கொள்ளலாம் என்கிற யோசனை வந்தது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உணவுக்கும், உழைப்பதற்கும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டே இருக்கிறான். டிராவல் என்பது ஓயாமல் நடக்குது. எனவே இதை கவனத்தில் கொண்டு இந்த தொழிலை எடுத்தேன்.
ஆரம்பத்தில் நல்லா படிச்சிருக்க இந்த தொழிலை ஏன் செய்யற என்று கேட்கத்தான் செய்தனர். ஆனா இப்ப என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து யாரும் திரும்ப அந்தக் கேள்வியை கேட்பதில்லை. இந்தத் தொழிலை முறைப்படுத்தினால் நல்ல வருமானம் வரக்கூடிய தொழிலா கத்தான் பார்த்தேன். இதற்கேற்ப இந்த சொந்த தொழில் யோசனைக்கு என்னுடைய தம்பிகள் தீபக், மனோஜ் உறுதுணையா நின்னாங்க.
இந்த தொழில் செய்ய முடிவான பிறகு ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு டாக்சிக்கு போன் பண்ணி வர வைப்போம். டாக்சி புக் பண்ணி எவ்வளவு நேரத்தில் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இப்படி டெஸ்ட் செய்தோம். எந்த டாக்சியும் உடனே வரவில்லை. குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆனது. எனவே புக் செய்த 10 அல்லது 15 நிமிடத்துக்குள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தால் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்யலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் தொழிலைத் தொடங்கி விட்டோம்.
முதலில் 30 வாகனங்களை வைத்து தொடங்கினோம். 3 வருடத்தில் தற்போது ரெட் டாக்ஸி (red taxi), கோ டாக்ஸி (go taxi) என்ற பெயர்களில் 300 டாக்சிகளாக வளர்ந்துள்ளோம். இப்போது தினசரி சராசரியாக 4 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கிறோம். நாங்கள் மட்டுமே அனைத்து கார்களையும் வைத்துக் கொள்ளாமல், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற டாக்சி உரிமையாளர்களையும், ஓட்டுநர்களையும் எங்கள் நிறுவனத்தோடு இணைத்துக் கொள்கிறோம்.
மார்க்கெட்டில் வாடகைக் கார்களை சொகுசாக கொடுக்கிறோமோ இல்லையோ, சொன்ன நேரத்துக்கு கொடுக்க வேண்டும். சொகுசு என்பது இரண்டாம்பட்சம்தான்.முதல் தேவை பயணம். அதனால அதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இரண்டாவது கட்டமாகத்தான் காருக்குள் சொகுசு வசதிகளை அமைத்தோம். அதாவது ஒரு வாடிக்கையாளர் டாக்ஸி புக் பண்ணி அதிகபட்சம் 10 ஆவது நிமிடத்துக்குள் உரிய இடத்தில் இருப்பது. அதற்கான ஏற்பாடுகள். அதுக்கென எங்கள் எங்கள் சாப்ட்வேரில் ஸ்பெஷல் அப்ளிகேஷன் மூலமாக வழித்தடங்களை அமைத்து இயங்க ஆரம்பித்தோம்.
போன் பண்ணின உடனே பக்கத்துல எந்த வண்டி இருக்கோ அந்த வண்டியை அனுப்பறது. அது பார்ட்டியை பிக்அப் பண்ற வரைக்கும் கண்காணிக்கிறது. பார்ட்டி காரில் பேப்பர் படிக்க தமிழ், ஆங்கில பேப்பர்களை வைப்பது, அவர்கள் மறதியாக விட்டுச் சென்ற பொருட்களை பத்திரமாக எடுத்து வைத்து அவர்களுக்கு தகவல் கொடுத்து அலுவலகத்தின் மூலமாக கொடுப்பது என பல்வேறு விஷயங்களை சர்வீஸா செய்ய ஆரம்பித்தோம்.
குறிப்பாக ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்ல முன்னுரிமை கொடுத்தோம். துரித சேவைக்கு பிறகு காருக்குள் வசதியான விஷயங்களை புகுத்த ஆரம்பித்தோம்.
இன்டிகா, செவர்லே மாதிரியான டாக்சிகளுக்கு கிமீக்கு ரூ.18 இருப்பதை கொஞ்சம் மலிவாக்க முடியுமா என்று யோசித்தோம். அதற்காக கோ டாக்ஸி (go taxi) டொயோட்டா, எடியாஸ் மாதிரி கார்களை வைத்து கிமீக்கு ரூ.14 என ஆரம்பித்தோம். அதுக்கு நல்ல வரவேற்பு. கார்கள்தான் வேறே தவிர சேவையில் ஒரே நிலையில் நிறுத்தினோம்.
ஆரம்ப முதலீட்டை வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு வங்கிக்கடனுக்கும் எங்கள் குடும்பத்தினர் உதவி செய்தனர். தற்போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பும் வாங்கிவிட்டோம்.
வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை பயன்படுத்தும் வேகம்தான் எங்களது வளர்ச்சிக்கு அடிப்படை. சேவையை தரமாகவும், மக்கள் விருப்பத்திற்கு உகந்த நேரத்தில் விரைவாகவும் கொடுத்தால் தொழிலில் நிற்கலாம் என்பது நாங்கள் கண்ட அனுபவம். இன்றைக்கு கோவையில் 4,000 டாக்ஸிகள் வரை இயங்குகிறது இருந்தாலும் தேவைகள் இருந்து கொண்டே இருக்கிறது. எங்களது அடுத்த இலக்கு அந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான். அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம் என்றார் ஆனந்த்.
maheswaran.p@thehindutamil.co.in