

இது ஸ்மார்ட் போன்களின் காலம். எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது இந்த நவீன தொடர்பு கருவி. குரல் வழி தொடர்பு என்கிற நிலையிலிருந்து மாறி அதில் பல விதமான பயன்பாடுகளும் வந்த பிறகு செல்போன்களுக்கான சந்தை ஏகத்துக்கும் எகிறிவிட்டது. கிராமம் நகரம் என்றில்லை.
போன் வாங்க வேண்டும் என்றால் அது ஸ்மார்ட்போனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் உருவாகிவிட்டது. அதற்கு ஏற்ப ரூ.2,000 விலையில் கூட ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குகின்றன செல்போன் நிறுவனங்கள். இதில் பயன்படுத்த லட்சக்கணக்கான செயலிகள் கொட்டிக்கிடக்கின்றன இணைய சந்தையில்.
இப்படி கொட்டிக்கிடக்கும் செயலி களில் பொழுதுபோக்கு செயலிகளும், சமூக வலைதள செயலிகள் மட்டும் தவறாமல் நமது ஸ்மார்ட்போன்களில் இடம் பெற்றுவிடுகின்றன. மேலும் நமது பயன்பாட்டுக்கு ஏற்ப சினிமா, சுற்றுலா, வரைபடம், ஹோட்டல் என துறை சார்ந்த அல்லது நிறுவனங்களின் செயலிகளைப் பயன்படுத்தி வருவோம். ஆனால் நமது நிதி திட்டமிடலை, வேலை திட்டமிடலை எளிதாக்கும் செயலிகளை பயன்படுத்துவோர் மிக மிகக் குறைவு.
தனி நபர் வேலைகள், குழு வேலைகள், வீட்டு பட்ஜெட், வரவு செலவு கணக்குகள் என ஸ்மார்ட்போன் மூலம் நமது பண நடவடிக்கைகளை கண்காணிக்க, கட்டுப்படுத்த பல நூறு செயலிகளும் இணைய சந்தையில் உள்ளன.
இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நமது வேலைகளை சுலபமாக்கலாம் என்பது மட்டுமல்ல, நமது செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்பதும் கவனிக் கத்தக்கது. தனிநபர்கள் மட்டுமல்ல சிறு நிறுவன தொழில் முனைவர்கள், தொழில் ரீதியான வரவு செலவு, குடும்ப வரவு செலவு போன்ற சகலத்தையும் திட்டமிடலாம்.
திட்டமிட்டுதான் செலவு செய்கிறோம் அதனால் தேவையில்லை என்று நினைக்கலாம், வீட்டு பட்ஜெட்டை பேப்பரில் குறித்துக் கொள்கிறோமே பிறகு எதற்கு என்று நினைக்கலாம். ஆனால் இந்த செயலிகள் நமது அனைத்து நடவடிக்கைகளையும் எளிதாக்குகிறது.
நமது வரவு செலவு விவரங்களை வேறு யாரும் பார்ப்பதற்கும் வாய்ப்புகள் கிடையாது என்பதால் இன்னும் கவனம் பெறுகிறது. அப்படியான சில செயலிகளின் தொகுப்பு இது. உங்கள் நிதி திட்டமிடலுக்கு உதவுக்கூடும்.
செலவு நிர்வாகி (Expense Manager)
நமது அனைத்து பண நடவடிக் கைகளையும் திட்டமிட இந்த செயலி உதவுகிறது. வருமானம், வங்கி இருப்பு, செலவுகள் எல்லாவற்றையும் இதில் பதிய வேண்டும். கையிருப்பு எவ்வளவு என்பதைக் காட்டிவிடும். மேலும் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம், வருமானத்தில் எத்தனை சதவீதம் என்றும் காட்டும். மாத வாரியாக செலவுப் பட்டியலும் கிடைக்கும். கிராபிக்ஸ் மூலமும் பார்த்துக் கொள்ளலாம்.
செலவுகளுக்கான பில்களை படமாக இணைத்துக் கொள் ளலாம், அல்லது வாய்ஸ் மூலம் சேமிக்கலாம். ஒரே நேரத்தில் பல பட்ஜெட் திட்டமிடலாம். கிரெடிட் கார்டுகளுக்கான தேதிகள், இஎம்ஐ தேதிகள் என எல்லாவற்றையும் இண்டிகேட் செய்யும். நாம் ஒரு நாள் எதுவுமே பதிவு செய்ய வில்லை என்றாலோ, செலவுகள் அதிகரிக்கும்போதோ எச்சரிக்கையும் செய்கிறது. இந்த செயலி தவிர மணிபை, மணி வியூ, மணி லவ்வர், ஈஸி பட்ஜெட் போன்ற செயலிகளும் நிதித் திட்டமிடல் வேலைகளுக்கு உதவும்.
டிரெல்லோ
நாம் குழுவாகவோ அல்லது தனிநபராகவோ ஒரு வேலையை முடிக்க திட்டமிடுவோம். அதுவும் குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிடுவோம். அவர்களுக்கு உதவுகிறது இந்த செயலி. செய்ய நினைக்கும் வேலைகளை இதில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில் சம்பந்தப்பட்டவர்களையும் இதில் சேர்த்துவிடவேண்டும். குறிப் பிட்ட நேரத்தில் உங்களுக்கும், வேலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நினைவூட்டலை அனுப்புகிறது.
செய்ய வேண்டிய வேலையை பட்டியல் அல்லது புகைப்படமாகவும் அனுப்பலாம். வேலை முடிந்ததும் அவர்கள் செய்யும் அப்டேட் தகவல்களையும் உங்களுக்கு சேர்க்கும். அலுவலக வேலை என்றில்லை கட்டுமான வேலை நடக்கிறது என்றாலும் அதில் சம்பந்தப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.
டைம் ஷீட்
இந்த செயலி நமது வேலை நேரத்தைத் திட்டமிட்டு கொடுக்கிறது. மேலும் வேலை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்துவிட்டால் போதும், அந்த வேலையை செய்து கொண்டிருக்கும்போதே அதை செய்து முடிக்க இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்கிற தகவல்களைக் கொடுக்கிறது. சில வேலைகளை குறிப்பிட்ட நாட்கள் அல்லது நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என இலக்கு வைத்திருப்போம். அப்படியான திட்டமிடலுக்கு இது உதவுகிறது. இதை எக்ஸெல் மற்றும் பிடிஎப் வடிவமாகவும் கொடுக்கிறது.
கூகுள் அனலிடிக்ஸ், அச்சிவ் புரொடக்டிவிட்டி டைமர் , கூகுள் கீப், போன்ற செயலிகள் நேர திட்டமிடுதலுடன் நமது வேகம் சரியானதுதானா, இந்த வேகத்தில் செய்தால் அந்த வேலை முடிய எவ்வளவு நேரமாகும் எனவும் சொல்கின்றன. இதனால் நமது நேர விரயம் தவிர்க்கப்பட்டு வேலை விரைவாக நடக்கும்.
குயிக் புக்ஸ்
சிறிய நிறுவனங்கள் அதன் தலைவர்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்ற செயலி. தினசரி வரவு செலவு கணக்குகள், பேலன்ஷ் ஷீட், விற்பனை, வாடிக்கையாளர் விவரங்கள், அனுப்ப வேண்டிய பில் போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். குயிக் புக் மென்பொருளின் மொபைல் வெர்ஷன் இது. தொழிலின் கணக்கு வழக்குகளை கைகளில் வைத்துக் கொள்ளலாம். குயிக்புக்ஸ் வேறு பல செயலிகளையும் கொடுத்துள்ளது. அவற்றையும் முயற்சி செய்யலாம்.
இன் 5
சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழிப்பவர்களை ஒழுங்கு படுத்துகிறது. வேலை நேரத்துக்கு இடையில் சமூக வலைதளங்கள் பார்ப்பவர்கள் சில நேரங்களில் நேரம்போவதே தெரியாமல் அதிலேயே மூழ்கிவிடுவார்கள். இதனால் பல வேலைகள் பாதிக்கப்படும். இதை தடுக்கிற வேலையைச் செய்கிறது. இதை இன்ஸ்டால் செய்து கொண்டால் எந்த சமூக வலைதளத்தையும் ஐந்து நிமிடத்துக்கு மேல் காட்டாது. பேக் டூ வொர்க் என மெசேஜ் அனுப்பும்.
பேருந்தில், சாலையில், சந்தைகளில், எங்கு பார்த்தாலும் குனிந்த தலை நிமிராமல் ஸ்மார்ட்போன்களில் நேரத்தை செலவிடுபவர்களே... இந்த செயலிகளுக்கும் ஸ்மார்ட்போனில் இடம்கொடுங்கள். உங்கள் வாழ்க்கை தரம் மாறும் வாய்ப்புள்ளது.