

பணவீக்கத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ரிசர்வ் வங்கி செயல்படும் என்று மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பிப்ரவரி 20, 2015 அன்று ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன. இதன்படி 2017 மார்ச் மாதத்துக்குள் நுகர்வோர் விலை குறியீடு 4% என்ற அளவில் கட்டுப் படுத்தவேண்டும். இதற்கான எல்லா முயற்சிகளையும் ரிசர்வ் வங்கி எடுக்கும் என்று இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
நுகர்வோர் விலை குறியீட்டு ஏற்றம் 4% என்ற அளவிலும், அதிகபட்சம் 6% ஆகவும், குறைந்தபட்சம் 2% ஆகவும் இருக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் இந்த குறிக்கோளை மார்ச் 2017-க்குள் அடைய அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயித்து, வேறு செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். 2015-16ல் தொடர்ந்து மூன்று காலாண்டுகளில் விலைக் குறியீடு 6% கடந்தால் ரிசர்வ் வங்கி தனது குறிக்கோளை அடைய தவறிவிட்டது என்று பொருள். 2016-17யில் தொடர்ந்து மூன்று காலாண்டுகளில் விலைக் குறியீடு 2% விட கீழே இறங்கினால் ரிசர்வ் வங்கி தனது குறிக்கோளை அடைய தவறிவிட்டது என்று பொருள்.
மேல குறிப்பிட்டவாறு விலை குறியீடு 2% கீழேயும் 6% அதிகமாகவும் இருந்தால், ரிசர்வ் வங்கி அதற்கான காரணத்தை விளக்கி, எவ்வளவு காலத்தில் இது சரிசெய்யப்படும், அதற்கான திட்டங்கள் என்ன என்பதை அறிக்கை மூலமாக மத்திய அரசுக்கு தெரிவிக்கவேண்டும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை ரிசர்வ் வங்கி செய்ய வேண்டுமா?
குறைந்த நிலையான பணவீக்கம் மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சொல்கிறார். பணவீக்கம் குறைவாக இருக்கும்போது, அந்நிய செலாவணி மாற்று விகிதமும் நிலையாக இருக்கும். மாற்று விகிதம் நிலையாக இருந்தால் மட்டுமே பன்னாட்டு வியாபாரம், அந்நிய முதலீடு எல்லாம் சீராக இருக்கும். மூன்றாவதாக குறைந்த சீரான பணவீக்கம், வங்கிகளின் செயல்பாட்டிற்கு முக்கியம். வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, அதனால் தொழிலுக்கான கடன் கொடுப்பது சிறப்பாக இருக்கும், நாட்டில் பொருள் உற்பத்தியும் பெருகும் என்று சில வாதங்கள் உள்ளன. எனவே எப்பாடுபட்டாவது பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது அவசியம் என்பது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றாலும் அதனை செய்யத் தயாராக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் கூறுகிறார்.
பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது சாத்தியமா?
ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிப்பது மூலமாக வங்கிகளில் கடன் தேவை, அளிப்புக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த முயல்கிறது. ரிசர்வ் வங்கி மற்ற வியாபார வங்கி களுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான விகிதம் ரெபோ விகிதமாகும். இந்த ரெபோ விகிதத்தை மாற்றுவதன் மூலம் வங்கிகளுக்கு கடன் எவ்வளவு கொடுக்கலாம் என்ற சமிக்கை அளிக்கிறது. ரெபோ விகிதம் குறைந்தால், வங்கிகளும் தங்கள் வட்டி விகிதத்தை குறைத்து அதிக கடன் கொடுக்கலாம், இதனால் பணபுழக்கம் அதிகமாகும்.
ரெபொ விகிதம் அதிகமானால், வங்கிகள் வட்டியை உயர்த்தி கடன் வழங்குவதை குறைத்து, பணப்புழக்கத்தை குறைக்கும். இதனை monetary transmission என்பர். இந்த monetary transmission முழுமையாக இந்தியாவில் செயல்படுவதில்லை என்பது ஒரு பார்வை. எனவே பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெபோ விகிதத்தை உயர்த்தினாலும், அது வங்கிகள் கடன் அளிப்பதை எவ்விதத்திலும் பாதிக்காது, எனவே ரிசர்வ் வங்கியால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது ஒரு வாதம்.
பணவீக்கம் அதிகரிப்பது என்பது பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு ஆகிய இரண்டையும் பொறுத்தது. இந்தியாவில் பொருட்களின் உற்பத்தி குறைவாக இருப்பதினால் அவற்றின் விலைகளில் ஏற்றம் ஏற்படும். இந்த சூழலில், பொருட்களின் உற்பத்தியை உயர்த்தினால் மட்டுமே பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். மாறாக, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தினால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என்பது மற்றொரு வாதம்.
மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருந்து அதனால் தேவை அதிகரித்து விலை ஏற்றம் ஏற்பட்டால் மட்டுமே மத்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சிலர் கூறுகின்றனர். உற்பத்தி குறைவினால் பணவீக்கம் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை மாற்றுவதன் மூலமாக அதனை கட்டுப்படுத்த முடியாது என்பதும் உண்மை.
அரசு செய்ய வேண்டியது என்ன?
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கியின் வேலை என்று ஒப்பந்தம் செய்தபின், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசு தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இப்போதுதான் அரசு பொருள் உற்பத்தியை ஊக்குவிக்க எல்லா நடவடிக் கைகளையும் எடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. சந்தையில் பொருட்களின் உற்பத்தி குறைவினால் உருவாகும் பணவீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி எப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியும்? அதேபோல குறைந்த வட்டி விகிதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் என்று சொல்ல முடியாது. பல துறைகளில் அரசின் செயல்பாடுகளும் கொள்கைகளும் இதற்கு உதவவேண்டும்.
பல உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் இதுபோன்ற பணவீக்கக் குறிக்கோளை கொண்டு செயல்பட் டுள்ளன. ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் அவற்றினால் அக்குறிக் கோளை அடையமுடியாமல் போனது. இதற்கு மேல சொன்ன பல காரணங்கள் பொருந்தும்.
- இராம.சீனுவாசன்
seenu242@gmail.com