Last Updated : 09 Mar, 2015 12:45 PM

 

Published : 09 Mar 2015 12:45 PM
Last Updated : 09 Mar 2015 12:45 PM

இணைவோம்... பிரிவோம்..!

தாராளமயமாக்கல் இந்தியாவில் ஆரம்பமான 1990களுக்குப் பிறகு தொழில்துறையில் பெருமளவில் மாற்றங்கள் உருவாயின. வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்குவது அதிகரித்தது. தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வது அல்லது முதலீடு செய்வது என்ற வகையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் கைகோர்த்தன.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்தன. இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு சாலைகளில் சீறிப் பாய்ந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இவ்விதம் உருவான கூட்டணிகள் தொடரவில்லை என்பதுதான் துரதிருஷ்டமாகும்.

முதலில் ஹீரோ குழுமத்துடன் கைகோர்த்தது ஜப்பானின் ஹோண்டா. மிக அதிக காலம் நீடித்த கூட்டணியும் இதுதான். சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு (1984-2010) இரு நிறுவனங்களுமே பிரிந்துவிட்டன.

இதேபோல பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த கவாசகி, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்த சுஸூகி, எல்எம்எல் நிறுவனத்துடன் இணைந்த பியாஜியோ (இத்தாலி) நிறுவனக் கூட்டணியும் முறிந்துபோனது. ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்புக்கென கைனெடிக் நிறுவனத்துடன் இணைந்தது. கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டரெட்டுகள் சாலைகளில் சீறிப் பாய்ந்தாலும் அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இதேபோல போர்டு மஹிந்திரா, டொயோடா கிர்லோஸ்கர், யமஹா எஸ்கார்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடையிலான உறவும் பாதியிலேயே முறிந்துபோனது.

ஆட்டோமொபைல் துறை மட்டுமல்ல, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் ஜான் டீர் நிறுவனத்துடனான உறவு, கல்யாணி ஷார்ப் கூட்டணி, கோத்ரெஜ் ஹெர்ஷே உறவு, ரான் பாக்ஸி எல்லி லில்லி என முறிந்து போன கூட்டணிகளின் கதைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில் இந்தப் பட்டியலில் பார்தி - வால்மார்ட் கூட்டணியும் சேர்ந்துள்ளது.

இதேபோல காப்பீட்டுத் துறையில் டாடா ஏஐஜி, சன்மார் ஏஎம்பி ஆகிய கூட்டணியும் இணைவோம், பிரிவோம் என்ற பட்டியலில் இணைந்துள்ளன. இதில் சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ராயல் சுந்தரம் கூட்டணியும் சேர்ந்துள்ளது.

பொதுவாக கூட்டு சேர்ந்து தொடங்கப்படும் தொழில்களில் குறைந்தபட்சம் 40 சதவீத கூட்டணிகள் முறிந்து போகின்றன. அதிகபட்சம் 70 சதவீதம் வரையிலான தொழில் நிறுவனங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளன.

நிறுவனங்கள் கூட்டாக தொடங்கும்போது பரஸ்பரம் அனைத்து ஒப்பந்தங்களையும் ஏற்றுக் கொண்டுதான் தொடங்குகின்றன. ஆனால் நாட்கள் நகர நகர இரு தரப்பினரிடையேயும் மனக் கசப்பு அதிகரித்து அது முறிவுக்குக் காரணமாகிறது.

பிரிவு ஏன்?

கூட்டணி முறிவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

பொதுவாக பங்குதாரர் நினைப்பதற் குள்ளாகவே முதலீட்டை கரைத்துவிடுவது. நிதியைத் திரட்டுவதற்கு போதிய வழிவகை காணாதது. கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதைத் திரட்டிக் கொள்ளலாம் என ஒப்பந்தத்தின்போதே விதிமுறைகள் வகுக்காதது. பொதுவாக தனி நிறுவனமாக நடத்தியே பழக்கப்பட்டவர்கள் கூட்டு சேர்ந்து தொழில் புரியும்போது கூட்டாளியை சரிவர புரிந்து கொள்ளாமல் முடிவு செய்வது.

வியாபாரம் பெருகியதும் அதைக் கையகப்படுத்துவதில் பேராசைப்படுவது. இரண்டு கூட்டாளிகளில் இது யாராவது ஒருவருக்கு ஏற்பட்டாலே போதும்.வெளிநாட்டு நிறுவனங்களின் செயல் பாட்டோடு ஒத்து போக முடியாத நிலை. இரு நாடுகளின் கலாசாரமும் ஒருங்கிணைந்து செயல்படும் என்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் நாளடைவில் காற்றில் கரைந்துவிடுவது.

சாத்தியமில்லாத லாபத்தை எதிர் நோக்குவது. இதுவும் ஒரு வகையில் பேராசையே. கூட்டு நிறுவனமும் இதே தொழிலில் ஈடுபடுவது. இதனால், தனியாக தொடங்கினால் என்ன என்ற எண்ணம் உருவாகும்.

தொழில் நடைபெற்று கொண்டிருக்கும் போதே வெளியேறுவதற்கான உத்திகளை வகுப்பது உள்ளிட்டவை உறவு முறிந்து போகக் காரணமாகின்றன.

இவை தவிர வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டு அரசியல், பங்குச் சந்தை சூழலுக்கு ஏற்பட எடுக்கும் முடிவுகளும் பிரிவுகளுக்குக் காரணமாகிறது.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக தொழில் தொடங்குவதை விட இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து தொழில் தொடங்குவது எளிதானது. கூட்டாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கென்று தனி விதிகள் ஏதும் கிடையாது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீத பங்கோடு இங்கு தொழில் தொடங்க முடியும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இங்கு கிளைகளைத் தொடங்க முடியும். வெளிநாட்டு கிளைகளுக்கு அதிக அளவிலான வரிச் சலுகை கிடைக்கும். கூட்டாக தொடங்கப்படும் தொழில்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகையை விட இது அதிகம். இதனால் நிறுவனங்கள் பிரிந்து தனியே தொழில் தொடங்கவும் காரணமாகிறது.

மேலும் கூட்டாக நிறுவனங்கள் தொடங்குவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும். அதற்குப் பதிலாக வெளிநாட்டு கூட்டுடன் தொடங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அல்லது அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) அனுமதி பெற்றாலே போதும்.

இதனாலேயே ஆரம்பத்தில் இந்திய சந்தையை ஆராய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த கூட்டணி உத்தியை கையாண்டன.

அடுத்து அரசும் பல்வேறு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததும், பிரிவுக்குக் காரணமாக அமைந்தது.

டிவிஎஸ் நிறுவனத்திடமிருந்து பிரிந்த சுஸுகி நிறுவனம் தனியாக ஆலை அமைத்து இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. இதேபோலத்தான் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தனி கடை போட்டுவிட்டன. ஹோண்டா, சுஸுகி, பியாஜியோ என தனியே ஆலைகளை அமைத்த நிறுவனங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்தியாவில் நடுத்தர மக்களும் கார்களை பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் 1980-களின் தொடக்கத்தில் ஜப்பானின் சுஸுகி நிறுவனத்தின் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டது மாருதி சுஸுகி நிறுவனம். இப்போது இந்நிறுவனம் முழுக்க முழுக்க சுஸுகி நிர்வாகம் வசம் சென்றுவிட்டது.

இந்தியாவில் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலில் சேர்கின்றன. பிறகு பாதியில் வெளியேறி தனியே தொடங்குகின்றன. இல்லையெனில் இந்திய நிறுவனப் பங்குகளை வாங்கி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள் கின்றன.

சமீபத்தில் பார்தி நிறுவனத் திடமிருந்து பிரிந்த வால்மார்ட் நிறுவனம் இப்போது தனியாக பல நகரங்களில் மொத்த விற்பனையகத்தை செயல்படுத்தி வருவதே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

மாறிவரும் சூழலில் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு அந்நிய நிறுவனங்களுடனான கூட்டணி அவசியம்தான். அது நீண்ட காலம் தொடர என்ன வழி, எத்தகைய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். அல்லது தொழில்நுட்ப கூட்டு என்ற அளவில், முதலீடுகளை இந்திய நிறுவனங்களே செய்வது சிறப்பாக இருக்கும்.

`மேக் இன் இந்தியா’ என்ற கொள்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கேயே தொழில் தொடங்குவது முறியும் உறவு களைத் தடுக்க உதவுமா என்று பார்க்க வேண்டும்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x