

திருச்சி வாசகர் கேள்விக்கு தலைப்பே பதிலாக இருக்கும் என்று புரிந்திருக்கும். இருந்தாலும் பிரான்சைஸி எடுத்து நடத்துவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சொந்தமாகத் தொழில் தொடங்குவது அதை நடத்துவது விற்பனை வாய்ப்புகள், விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுமே நீங்கள் எடுக்கும் முடிவாக இருக்கும்.
உங்கள் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருளை எங்கிருந்து வாங்க வேண்டும், எவ்வளவு தேவை என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். விலை குறைவாகக் கிடைக்கும்பட்சத்தில் பக்கத்து மாநிலத்திலிருந்து கூட கொள்முதல் செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது வியாபாரத்தை ஒரு தெருவுக்குள்ளும் நடத்தலாம், நகரம் முழுவதும் தேவைப்பட்டால் மாநிலம் முழுவதும் ஏன் சாத்தியமாகும்போது அதை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தலாம். உங்களது தயாரிப்புக்கு சந்தை வாய்ப்பு வெளிநாடுகளில் இருக்கும்பட்சத்தில் ஏற்றுமதிகூட செய்யலாம்.
உங்கள் தயாரிப்பு குறித்து விளம்பரம் செய்வது நீங்களே முடிவு செய்யலாம். எந்த ஊடகத்தில் விளம்பரம் செய்யலாம் என்பது உங்கள் பட்ஜெட்டை பொருத்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
சொந்தத் தொழில் தொடங்குவதைவிட பிரான்சைஸி எடுத்து நடத்துவது சிறந்ததா என்ற கேள்விக்கு பாதி விடை மேலேயே அளிக்கப்பட்டு விட்டது.
இருந்தாலும் பிரான்சைஸி பற்றியும் பார்க்கலாம். உங்களிடம் தொழில் தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் உள்ளது. தொழில் நடத்துவதற்கான இடம் உள்ளது. பணமும் உள்ளது என்றால் எந்தத் தொழில் தொடங்குவது என்பது குறித்து குழப்பம் நிலவும்போது பிரான்சைஸி எடுத்து நடத்தலாம். நீங்கள் தொழில் தொடங்குவதற்கு ஆரம்பகட்ட வாய்ப்பாக இது அமையக்கூடும்.
இருந்தாலும் பிரான்சைஸி எடுத்து நடத்தும் தொழில் உங்கள் பகுதியில் வெற்றிகரமாக அமையுமா என்று ஆராய வேண்டும். பிரான்சைஸி எடுப்பதால் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் அங்கத்தினராக நீங்கள் மாறுகிறீர்கள்.
குறிப்பிட்ட தொழிலைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வெறு மனே செயல்படுத்தினால் போதுமானது. இதனால் ஒரு தொழிலைப் பற்றி முற்றிலும் தெரிந்து கொள்வதற்கான காலம் குறையும். மேலும் குறிப்பிட்ட தொழிலுக்கான சந்தைப்படுத்துவதில் அனைத்து உதவி களையும் அந்நிறுவனமே அளிக்கும்.
விளம்பரத்தைப் பொறுத்தமட்டில் இந்தியா முழுமைக்குமான அல்லது மாநில அளவிலான விளம்பரங்களை அந்நிறு வனமே செய்துவிடும். சிறிய தொழிலாகத் தொடங்குபவர்களால் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்த முடியாது.
பிரான்சைஸி எடுப்பதால், நான் தனியாக இல்லை, ஒரு குழுவுடன் இணைந்திருக்கிறேன் என்ற நினைப்பு மேலோங்கும். தொழிலைத் தொடங்குவது மற்றும் பிரான்சைஸி அளிப்பது இரண்டுக்குமே சிறந்த உதாரணம் தமிழகம் ழுழுவதும் பிரபலமாக உள்ள நேச்சுரல்ஸ் அழகுக் கலை மையம்.
வீனா, குமரவேல் ஆகியோரால் தொடங் கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஏறக் குறைய 5 ஆண்டுகள் தங்களது தவறு களைத் திருத்தி, திருத்தி முன்னேற்றியதில் இன்று நேச்சுரல்ஸ் மையத்துக்கு செல்வோர் மட்டுமல்ல அந்நிறுவனமும் ஜொலிக்கிறது. தமிழகத்தில் அழகுக்கலை மையம் தொடங்க வேண்டும் என்ற சிந்தனை பலருக்கு ஏற்பட்ட போதிலும் அதை துணிந்து செயல்படுத்தியதில்தான் வெற்றி அமைந்தது.
இப்போது அவர்கள் பிரான்சைஸியும் அளிக்கின்றனர். இந்நிறுவனத்துக்கு இன்று பிரபல நட்சத்திரங்கள் விளம்பர தூதராக உள்ளனர். அந்த அளவுக்குப் பிரபலமாகிவிட்டது. எனவே சொந்தத் தொழிலாக இருந்தாலும், பிரான்சைஸி தொழிலாக இருந்தாலும் அதன் வெற்றி அதற்குரிய சந்தை வாய்ப்புகள் மற்றும் மக்களின் ஆதரவைப் பொறுத்தே அமையும். அதேசமயம் பிரான்சைஸியில் சில அசௌகர்யங்களும் உள்ளன.
தங்கள் தயாரிப்புக்கு உங்கள் பகுதியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பதை கள ஆய்வு மூலம் அறிந்த பிறகே அவர்கள் பிரான்சைஸி அளிக்க முன்வருகின்றனர். நிறுவனத்தை அமைக்க இடத்தின் நீள, அகலம் உள்ளிட்டவற்றை நிறுவனம்தான் தீர்மானிக்கும்.
நீங்கள் தொழில் தொடங்குவதென்றால் உங்கள் வீட்டின் ஒரு பகுதியிலிருந்தே தொடங்கிக் கொள்ள முடியும். தங்கள் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருளை அந்நிறுவனம் அளித்தால், உப பொருள்களை எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதையும் அந்த குறிப்பிட்ட நிறுவனமே வரையறுக்கும். தொழில் தொடங்குவதற்குப் பதிலாக ஒரு நிறுவனத்தின் ஏஜென்சியை எடுத்திருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.
பிரான்சைஸி தொழிலை நீங்கள் விரிவாக்கம் செய்ய முடியாது.
aspireswaminathan@gmail.com