Published : 16 Mar 2015 12:01 PM
Last Updated : 16 Mar 2015 12:01 PM

முதல் செலவு: பெரும் அச்சமும் வேண்டாம், பேராசையும் வேண்டாம்

இது விளம்பர யுகம். ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு எந்த வகையில் விளம்பரம் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், எப்பொழுது, என்பதையெல்லாம் மிகப் பெரும் புத்திசாலிகள் ரூம் போட்டு யோசித்து முடிவு செய்கிறார்கள்.

முதலீடுகள் குறித்து பல விளம்பரங்களை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த விளம்பரங்களுக்கான ஆதார கோட்பாட்டினை, அதாவது பொருட்களை எப்படி விற்க வேண்டும் என்பது பற்றிய கோட்பாட்டினை ரொம்ப காலம் முன்பே கண்டுபிடித்து விட்டார்கள். இன்று வரை இந்த கோட்பாட்டைக் கொண்டே விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

அது என்ன கோட்பாடு என்று கேட்கிறீர்களா? ரொம்ப சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய விஷயம்தான். பொதுமக்கள் பணத்தைப் பற்றி யோசிக்கையில், குறிப்பாக முதலீடுகள் பற்றி யோசிக்கையில் அவர்களை ஆட்கொள்வது இரண்டு உணர்ச்சிகள்தான். ஒன்று பயம், மற்றொன்று பேராசை. நமது செல்வம் பறி போய் விடுமோ என்பது பயம்; சீக்கிரம் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற பேராசை எண்ணம்.

இந்த இரண்டு உணர்ச்சிகளில் ஒன்றைத் தூண்டி மக்களை ஒரு முதலீட்டுப் பொருளை வாங்க வைப்பதே பல விளம்பரங்கள் கையாளும் பிரபலமான உத்தி. குறைந்த வட்டியில் வைப்பு நிதியை விளம்பரப்படுத்தும் ஒரு வங்கி, ‘உத்திரவாதம்’, ‘பாதுகாப்பு’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும். ரிஸ்க் குறித்த உள்ளார்ந்த பயத்தை நோக்கி வார்த்தைகள் கோர்ப்பார்கள் .

இன்னொரு பக்கம், ‘சென்னைக்கு மிக அருகில்’ என ஒரு மனையை விற்பனை செய்ய முயலும் விளம்பரம். முதலீடு எவ்வளவு சீக்கிரம் வளரும் என்று ஆசை காட்டும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் செல்வந்தர் ஆகலாம் என்று ஒரு ஆசையைத் தூண்டி விடும்.

ஆனால் நிதி சார்ந்த முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதை நமக்கு நாமே முடிவு செய்து கொள்ள வேண்டும். அதீத பயமும், அதிக ஆசையும் நம்மை செலுத்த அனுமதித்தால் நமக்குத்தான் கேடு விளையும். ஒரு புறம் நல்ல வாய்ப்புகளைத் தவற விடுவோம்; மறுபுறம் அநாவசிய ஆபத்துகளைச் சென்றடைவோம்.

விளம்பரங்கள் எந்த கோட்பாட்டினை வேண்டுமானாலும் கையாளட்டும். நாம் நமக்கென ஒரு கோட்பாட்டினை வகுத்துக் கொள்வோம். அதற்கேற்ப சந்தையில் ஒரு பொருள் இருந்தால் அதை நாம் தேர்வு செய்வோம். உணர்ச்சிகளின் கைப்பாவைகளாக இருக்கும் மக்களிடம் விளம்பரங்கள் பேசிக்கொள்ளட்டும். நமது தேர்வுகளை நாம் நம் விதிகளின்படி செயல்படுத்துவோம்.

நாம் உணர்ந்து தேற வேண்டிய கோட்பாடு என்ன? நமக்கு அதிக பயமும் வேண்டாம்; பெரும் ஆசையும் வேண்டாம். நமது குறிக்கோள் நமது பணம் காலத்தால் (பணவீக்கத்தால்) அடையும் தேய்மானத்தை விட நமது முதலீட்டு முறைகள் சற்றே அதிகம் லாபம் சம்பாதிக்க வேண்டும்.

அதாவது, இன்று நாம் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் பொருட்களை இன்னும் 5 வருடங்கள் கழித்து வாங்குவதற்கு ஆயிரத்து எண்ணூறு ரூபாய் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். நாம் இன்று ஆயிரம் ரூபாயை முதலீடு செய்கிறோம். அது ஐந்து வருடங்கள் கழித்து இரண்டாயிரம் ரூபாயாக வளர்ந்து பலன் கொடுத்திருக்கிறது என்றால் நமது பணமும் தேய்மானம் அடையாது, ஒரு சிறிய மீள்தொகையும் லாபமாக கையிலிருக்கும்.

நிதி நிர்வாகத்தில் இதுவே நமக்குப் போதுமான வெற்றி. இதற்கு அதிகமாக நமக்கு லாபம் கிடைத்தால் சந்தோஷம். ஆனால் இந்த அடிப்படை வெற்றிக்கு ஆபத்தில்லாமல் நமது முதலீட்டு முறைகளை வகுக்க வேண்டும் என்பதே நாம் கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு.

இந்தக் கோட்பாட்டினை செயல்படுத் துவதற்குத் தேவையான முதலீட்டு சாதனங்கள் மற்றும் முறைகள் இன்றைய பணச்சந்தையில் நிறைய இருக்கின்றன. அவற்றுள் நமக்கேற்றவற்றைத் தேர்வு செய்வது என்பது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்னால் நாம் செய்ய வேண்டியது, மேலே சொன்னது போல, நமது எதிர்பார்ப்பு, சிந்தனைப் போக்கு, பணம் பற்றிய நமது உணர்ச்சிகள் ஆகியவற்றை நமது கட்டுக்குள் கொண்டு வருவது தான்.

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரில் வசித்து வந்தேன். அப்பொழுது புகழ் பெற்ற ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் மேதை ஹரிபிரசாத் சௌராசியா அங்கு ஒரு கச்சேரி செய்ய வந்திருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு ஒரு சிறிய ரசிகர் குழுவிடம் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயத்தை நான் பின்னர் பல முறை நினைவு கூர்ந்திருக்கிறேன்.

அவர் சொன்னார் - “அங்கே மேடையில் பாருங்கள். சிதார் இருக்கிறது. சாரங்கி இருக்கிறது. தபேலா இருக்கிறது. அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதை சுருதி சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிதாரை கம்பி முறுக்குகிறார். சாரங்கியைத் திருகிக் கொண்டிருக்கிறார். தபேலாவை சுத்தியலால் தாக்கிக் கொண்டிருக்கிறார். என் கையில் இந்தப் புல்லாங்குழல் இருக்கிறது.

இதை நான் என்ன செய்வேன்? ஒன்றும் செய்ய முடியாது. இதை எப்படி சுருதி சேர்ப்பேன்? இதை நான் ஒழுங்காக வாசிக்க வேண்டும் என்றால் நான்தான் என்னை சுருதி சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னிடம் பல புல்லாங்குழல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் வெவ்வேறு முறையில் வாசிக்க நான் என்னைத் தான் மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் இந்த வாத்தியத்தின் தனித்தன்மை” என்றார்.

முதலீடுகளும் பல விதங்களில் அது போலத்தான். நமது சிந்தனையை, உணர்ச்சிகளை, எண்ணப் போக்கை, எதிர்பார்ப்புகளை சீர் செய்வதுதான் நமது முதல் மற்றும் முக்கியப் பணி.

பாரதி சொன்னான் - ‘பேயாயுழலுஞ் சிறு மனமே, பேணாய் என் சொல் இன்று முதல்; நீயாயெதையும் நாடாதே, நினது தலைவன் யானே காண்' என்று. அதிக அச்சமும் வேண்டாம், பேராசையும் வேண்டாம். அளவான லாபமே நமது குறிக்கோள் என்று சிந்தனையைப் பழக்கிக் கொள்வதே சிறந்த வழி.

ஸ்ரீகாந்த் மீனாட்சி srikanth@fundsindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x