

ஒரு ஐரோப்பிய ராணுவப் பழமொழி ஒன்று உண்டு - “வரைபடத்தில் உள்ளது போல் நிலம் இல்லையென்றால், நிலத்தை நம்புங்கள்” (If the map and the terrain disagree, trust the terrain). இந்த வாசகம் சொல்லும் செய்தி என்னவென்றால், நாம் போடும் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வரவில்லையென்றால், நடைமுறைக்கு ஏற்றபடிதான் நமது திட்டங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இந்த கட்டுரைத் தொடரை தொடங்கிய போது எனக்கிருந்த திட்டம் பரஸ்பர நிதிகளைப் பற்றி விரிவாகவும், அவற்றின் வகைகள், அவை மூலமாக நிதி நிர்வாகம் செய்வது எப்படி என்பதைப் பற்றியும் எழுத வேண்டும் என்பதுதான். ஆனால், அறிமுக ரீதியாக நான் எழுதிய ஆரம்பக் கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் என் திட்டத்தை மறு பரிசீலனைக்கு உள்ளாக்கியது.
அடிப்படை அளவில் திட்டமிடுதல், ரிஸ்க் பற்றிப் புரிந்து கொள்ளுதல், அதன் அவசியத்தை உணர்தல் போன்றவற்றை முதலில் சொல்லி விட்டு பின்னர்தான் அக்கோட்பாடுகள் சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள் பற்றி எழுத வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன். அதன் விளைவே சென்ற சில வாரங்களாக இப்பகுதியில் வெளிவந்த கட்டுரைகள்.
அக்கருத்துகளைப் பற்றி மேலும் எழுதுவேன்; ஏனெனில் அவை அடிப்படையானவை, இன்றியமை யாதவை, தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டியவை. இருப்பினும், இந்த சமயத்தில் குறிப்பிட்ட முதலீட்டு முறைகள் மற்றும் சாதனங்கள் குறித்துப் பேச வேண்டிய தருணம் வந்து விட்டதென்று நினைக்கிறேன்.
அந்த வகையில் இந்த கட்டுரை இத்தொடரில் ஒரு அரைப்புள்ளி. வாராந்திர பத்திரிகைகளில் தொடர் கதைகள் பிரசுரிக்கும் போது அவ்வப்போது ‘முன்கதைச் சுருக்கம்’ என்று அதுவரை நடந்த கதையைச் சாராம்சமாகச் சொல்வார்கள். இந்தப் பகுதியில் நான் எழுதி வரும் கட்டுரைகள் அக்கதைகள் போல வரிசைக் கிரமமான ஒரு தொடராக இல்லை. இருப்பினும் இவற்றில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் சில முக்கியக் கருத்துகளை ஒரு சிறு பட்டியலில் தொகுத்துச் சொல்வது இந்த சமயத்தில் உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
திரும்பத் திரும்ப நான் வலியுறுத்த விரும்பும் கருத்துகளும், வாசகர்கள் மனதில் திடமாகக் கொள்ள வேண்டியவை என்று நான் கருதும் எண்ணங்களும் இவைதாம்:
1.நீண்ட கால முதலீடுகள் அவசியம். எப்பொழுதுமே அடுத்த ஒரு வருடம், இரு வருடங்கள் என்று எண்ணி முதலீடு செய்தல் நல்ல பலன்கள் தராது. நமது வருமானம், சேமிப்பு ஆகியவற்றிலிருந்து ஒரு சிறு பகுதியேனும் நீண்ட கால முதலீடுகள் (பத்து வருடங்களுக்குக் குறையாமல்) என்று இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்குப் பல வகையான முதலீட்டுச் சாதனங் களிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும்.
2. ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வது அவசியம். மொத்தமாக ரிஸ்க்கே வேண் டாம் என்று புறந்தள்ள முயற்சிப்பது நமது முதலீட்டு வளர்ச்சியைக் கடுமை யாக பாதிக்கும். நாம் சேமிக்கும் பணத்தின் மீதான நமது பிடிமானத்தைச் சற்று தளர்த்தினால் அதன் வளர்ச்சி சாத்தியங்கள் அதிகரிக்கும்; நமது நிதி வளமும் மேம்படும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதனால் ரிஸ்கினை ஓரளவிற்குக் குறைக்க முடியும். மாதாந்திர சேமிப்பு/முதலீடு என்பதன் மூலமும் ரிஸ்க்கினைக் குறைக்க முடியும்.
3. ரிஸ்க் எடுப்பது முக்கியமென்றாலும் அளவிற்கு அதிகமாக ரிஸ்க் எடுப்பது ஆபத்து என்பதை உணர வேண்டும். நேரடி பங்குச்சந்தை முதலீடுகள் செய்வதற்கு திறமையும் உழைப்பும் நேரமும் வேண்டும். இதைப் பல வருடங்கள் தொடர்ந்து செய்வதென்பது மிகப் பலருக்கு சரிப்பட்டு வராத ஒன்று. நமக்கு இது சரி வருமா என்ற சிந்தனை வந்தாலே, புத்திசாலித்தனமாக ஒதுங்கி இருப்பதே உசிதம்.
4.ஆயினும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் மட்டுமே தகுந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து நமது நிதி வளத்தை ஆரோக்கியமான முறையில் வளர்க்க முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. நேரடி பங்கு வர்த்தகம் என்பது ஒரு முறை மட்டுமே. பரஸ்பர நிதிகள் மூலமாக செய்யப்படும் முதலீடுகளில் ஓரளவிற்குக் குறைவான ரிஸ்க் எடுத்து, வேண்டிய அளவிற்கு லாபம் ஈட்டலாம்.
5.இவையெல்லாம் செய்வதற்கு முதலீடுகள் குறித்த நமது சிந்தனை மற்றும் கண்ணோட்டத்தினை முறைப் படுத்திக் கொள்ள வேண்டும். முதலீட்டுத் திட்டம் என்பது ஒரு மாரத்தான் போல என்று உணர வேண்டும். தொடர்ந்து, விடாமல், சீரான ஓட்டம் போல நமது முதலீட்டுத் திட்டம் அமைந்தால், வெற்றிக் கோட்டினை நிச்சயம் எட்டலாம். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம், இப்பொழுது ஒரு மாதிரி, நாளை வேறு மாதிரி என்று நிலையில்லாமல் முதலீடுகள் செய்வது மிகவும் தவறான அணுகுமுறை.
இதுவரை நான் எழுதிய கட்டுரைகளின் சாராம்சமாக இந்த 5 கருத்துகளைக் கொள்ளலாம். இவற் றைத் தாண்டி ஒரு ஆறாவது கருத் தையும் இப்பொழுது இணைக்கிறேன்.
ஒற்றைச் சொல்லில் சொல்ல வேண்டுமென்றால், இப்படிச் சொல் லலாம் - ஆரம்பியுங்கள். ஒரு முதலீட்டுத் திட்டத்தைத் துவங்குவதற்கு மீனமேஷம் பார்க்கத் தேவையில்லை. நீண்ட காலத் திட்டம் என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொண்டால் போதும். சந்தைக் குறியீடு பற்றிக் கவலை தேவையில்லை. இது சரியா தவறா, இது நல்ல நேரமா இல்லையா என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு எளிமையான பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டம் ஒன்றினைத் துவக்குங்கள்.
ஏனெனில், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன பழமொழி கட்டுரையாளர்களுக்கு மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். திட்டங்களெல்லாம் ஓரளவிற்கே பயன் தரும். அவற்றைச் செயல்படுத்தும் போதுதான் அவற்றின் நிறை குறைகள் தெரியும்.
அவற்றிற்கேற்ப நமது திட்டத் தினை சரி செய்து கொள்வதற்கு வாய்ப்பு களும் உண்டு, வழிகளும் உண்டு. ஆகையால், தயங்கத் தேவையில்லை. ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்குவதை தாமதிப் பதில் என்ன பயன்?
srikanth@fundsindia.com