Published : 16 Mar 2015 10:03 AM
Last Updated : 16 Mar 2015 10:03 AM

அங்கீகாரம்: ஆர்வத்துக்கு தடையில்லை...

சொந்த ஊர் புதுக்கோட்டை. படித்தது நாமக்கல். வசிப்பது சென்னை என பன்முக அடையாளங்களைக் கொண்டுள்ளார் பத்மா ஹரிஷ். எம்எஸ்சி புட் பிராஸசிங் படித்த இந்த பட்டதாரி. சென்னையின் புறநகரான காரணையில் பதப்படுத்தபட்ட உணவுகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வாரம் அங்கீகாரம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். பிடித்த வேலையை, குடும்பத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்வது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது என்று தனது தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பொறுப்பான குடும்பத் தலைவியாக வீட்டுப் பணிகளையும் பார்த்துக் கொண்டே, இயந்திரத்தில் ரெசிபிகளுக்கான கலவையைக் கண்காணிக்கிறார். உணவுத்துறை சார்ந்த எனது படிப்புதான் இந்த துறையில் தொழில் தொடங்குமளவுக்கு என்னை ஈடுபடுத்தியது என்று தனது தொழில் அனுபவத்துக்கு ஒரு முன்னுரை கொடுத்தார்.

படித்து முடித்ததும் பல நிறுவனங் களுக்கு வேலை தேடி அலைந் திருக்கிறேன். கடைசியில் ஒரு ஊறுகாய் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கிருந்து பிராக்டிக்கலாக உணவுபொருட்கள் தயாரிப்பு சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். கூடவே ஒரே வேலையை செய்து கொண்டிருக்காமல், வேறு ஏதாவது புதிய முயற்சிகளையும் இந்த துறையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது.

உணவு பொருள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதுதான் எனக்கு பிடித்தமான வேலையாக உணர்ந்த சமயத்தில் திருமணம் முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு இதே வேலையை தொடரமுடியுமா என்ப தெல்லாம் தெரியாது. ஆனாலும் எனது திறமையை பார்த்து எனது கணவர் மற்றும் கணவரது வீட்டில் இதற்கான ஒத்துழைப்பும் அதிகமாகவே இருந்தது. இன்னொன்று எனது மாமனார் சிறிய அளவில் ஹோம் மேட் உணவு தயாரிப்புகளையும் செய்து கொடுத்து கொண்டிருந்தார்.

இதனால் எனது உணவுதுறை சார்ந்த ஆராய்ச்சியும், கணவரது வீட்டினர் மேற்கொண்டிருந்த ஹோம் மேட் தொழிலுமாக சேர்ந்து புதிய வடிவம் எடுத்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது இந்த துறையில் ஈடுபட வீட்டினர் அளித்த ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. என்னால் முடியாது என்று நான் நினைக்கும் வேலைகளைக்கூட, உன்னால் செய்ய முடியும் செய் என குடும்பம் மொத்தமும் ஊக்கப்படுத்தும். அதுதான் என்னை ஒரு தொழில்முனைவோவராக மாற்றியது. சிறிய அளவில் வீட்டில் செய்துகொண்டிருந்த ரெசிபிகளை ஒரு தொழில் வடிவத்துக்கு மாற்றியது.

சென்னையில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய அரசின் மேம்பாட்டு மையத்தில் சேர்ந்து உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி பெற்று அவர்கள் வழிகாட்டுதல்படி தனியாக தொழிலை தொடங்கினேன்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கும் தொழில் கடன், மானியம் குறித்த வழிகாட்டுதல்கள் எல்லாம் அவர்களே ஏற்பாடு செய்து கொடுத் தனர்.

கணவர் மார்கெட்டிங் கவனித்துக் கொள்கிறார், எனது மாமனார் தயாரிப்புக்கு உதவுகிறார். அவசர உணவு வகைகள் தவிர சாம்பார், காரட் பாயாசம் உள்ளிட்டவைகூட தயாரிக்கிறேன். உணவு பொருளுக்கு ஏற்ப இவற்றை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். சுற்றுலா செல்பவர்கள், தொடர்ச்சியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறேன்.

பெரிய அளவில் உற்பத்தி, சந்தை யிடுதல் இல்லை என்றாலும் மாதம் ரூ.1 லட்சம் வரையிலுமான ஆர்டர்கள் கிடைக்கிறது. வழக்கமாக கொடுக்கும் தயாரிப்புகள் தவிர புதிய ரெசிபிகளை முயற்சித்துக் கொண்டே இருப்பது பிடித்திருக்கிறது.

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, விருப்பமான வேலையை, தொழில் முறையில் செய்து வருவதும் எல்லா பெண்களுக்கும் அமைந்துவிடாதுதானே என்கிறார். உண்மைதான் நீங்கள் இன்னும் வளருவதே எல்லோருக்கும் சொல்லும் பாடமாக இருக்கும்.

maheswaran.p@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x