

வேலை பார்ப்பதற்கு உலகிலேயே சிறந்த நிறுவனமாக பணியாளர்கள் எந்த நிறுவனத்தைக் கருதுகிறார்கள் தெரியுமா? சும்மா கூகுள் செய்து பாருங்கள். கூகுள் என்றே விடை கிடைக்கும்! உலகளவில் மட்டுமல்ல இந்தியாவிலும் அதற்குத்தான் முதலிடம்!
கொடுத்தால் மட்டும் போதுமா? பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு, மேலாளர்களுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கில் சம்பளமாகவும் வேறு படிகளாகவும் கொடுக்கின்றன. சிலர் பொதுத்துறை நிறுவனங்களில் மாநில மத்திய அரசுகளில் 30,40 ஆண்டுகள் கூட வேலை செய்து, சமூக அந்தஸ்து பதவி உயர்வு போன்றவற்றையும் பெறுகின்றனர்.
சிலர் தனியார் துறையில் அடிக்கடி வேலை மாறினாலும் அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவுபவை அந்நிறுவனங்களே! ஆனாலும் அந்நிறுவனங்களால் பணியாளர்களின் நல்லெண்ணத்தை அதிகமாகப் பெறமுடிவதில்லை! பணியாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்ய அதிக சம்பளம் கொடுத்தால் மட்டும் போதாதே!
அரசன் குடிமக்களுக்கு இனிமையான சொற்களோடு தேவையானதைக் கொடுத்தால் அவன் விருப்பம் போல் அரசாட்சி அமையும் என்கிறது குறள்.
கொடுத்தும் கெடுப்பவர்கள்:
நிறுவனத்திற்கு உயரிய கொள்கைகள் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய மேலாளர்கள், அதிகாரிகள் சரியாக நடந்து கொள்ளாவிட்டால் ஆபத்துதான்! பணியில் இருக்கும் தொழிலாளி இறந்து விட்டால் அவர் மனைவிக்கோ மகனுக்கோ வேலை கொடுப்பது என்பது பல நிறுவனங்களின் கோட்பாடு. ஆனால் அந்தப் பணி நியமன ஆணையைக் கொடுக்க வேண்டியவர் பாதிக்கப்பட்டவர்களை அலைய விடாமல், சிறுமைப்படுத்தாமல் கொடுத்தால் தானே பெருமை.
இவ்வளவு ஏன், எனது நண்பர் ஒருவர் வெளிநாடு செல்ல விடுமுறை கேட்டு விண்ணப்பித்து ஒருமாதம் ஆகியும் அனுமதி கிடைக்கவில்லை. விமானப் பயணச்சீட்டு வீணாகுமோ, தங்கும் விடுதி முன்பதிவை ரத்து செய்துவிடுவோமா என்றெல்லாம் கடைசி நாள் வரை தவிக்கவிட்டுவிட்டு கடைசியில் ஒப்புதல் கொடுத்தார் மேலதிகாரி. பண்டிகைக்குக் கடன் வேண்டுமென்றால் உயரதிகாரியைப் பார்த்து பல் இளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் பலர்.
எனது நிறுவனம் எனும் எண்ணம்:
பணியாளர்கள் தங்களை நிறுவனத் தோடு ஐக்கியப்படுத்திப் பார்ப்பதில்தான் நிறுவனத்தில் வெற்றி அடங்கி உள்ளது. அதற்கு தேவையில்லாத மனக்கசப்புகளை நீக்குவதுடன் பணியாளரிடையே ஒரு சகோதரத்துவ மனப்பான்மையையும் வளர வேண்டுவன செய்ய வேண்டுமில்லையா?
முன்னணி நிறுவனங்களின் பணியாளர்களிடம் ஆய்வு நடத்திய பொழுது அவர்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியவை கவனிக்கத்தக்கவை. அவர்கள் அங்கு தனிமனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள். நல்ல வேலை செய்தால் அடிக்கடி பாராட்டப்படுகிறார்கள். மற்றவர் முன்னிலையில் கௌரவிக்கப்படுகிறார்கள். பல நிறுவனங்களில் 10 மணிக்கு வந்து 5.30 மணிக்குத்தான் போக வேண்டுமென்பதில்லை.
தங்கள் சௌகரியப்படி வந்து குறிப்பிட்ட நேரம் வேலை செய்துவிட்டுப் போகலாம். சில நிறுவனங்கள் சில நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கின்றன. சற்றே யோசித்துப் பாருங்கள் இவற்றில் எதுவுமே செலவு வைக்காதவை! நாமும் கொஞ்சமாவது மாறலாமே! மனித நேயம் புகட்டும் குறள் இதோ.
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு
somaiah.veerappan@gmail.com