

கோடைக்காலம் தொடங்கி விட்டால் மின்னணு சாதனங்கள் விற்பனை யாளர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏசி, ஏர்கூலர், பிரிட்ஜ், இன்வெர்ட்டர் விற்பனையை அதிகரிக்க என்ன என்ன சலுகைகளைக் கொடுக்கலாம் என யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
புதிய புதிய சலுகைகள் அறிவித்தாலும் என்றுமே மாறாத சலுகையாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே சலுகை திட்டம். வட்டி இல்லாமல் தவணையில் பொருட்களை வாங்கலாம் என்பதுதான். அதாவது 0% வட்டி.
பொதுவாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு நடுத்தர மக்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கான வாய்ப்பை வழங்குபவை தவணைத் திட்டங்கள்தான். இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அவர்களை மேலும் கடனாளி ஆக்குகிறது என்றும் குறிப்பிடலாம். ஆனால் இந்த தவணைத் திட்டங்களை நோக்கி மக்களை இழுப்பதற்கான கவர்ச்சி வலைதான் 0% வட்டி என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.
இது மக்களிடம் நுகர்வு மோகத்தை அதிகப்படுத்தும் திட்டம் என்று சொல்லும் அதே நேரத்தில் நடுத்தர மக்களின் தேவைகளையும் இதுதான் பூர்த்தி செய்கிறது. தவணையில் பொருட்களை வாங்கிவிட்டு முறையாகக் கட்டிவிட்டால் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. முறையாக கட்ட முடியாத பட்சத்தில் திரும்பவும் எழ முடியாத பொருளாதார சிக்கல்களுக்கு கொண்டு சென்று விடும் என்கின்றனர் இவர்கள்.
இஎம்ஐ என்கிற இந்த தவணைத் திட்டத்தில் நுகர்வு பொருட்களை வாங்கி குவித்த பழக்கம்தான் அமெரிக்க பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்தது. இங்கும்கூட வீட்டுக்கடன் வாங்கி விட்டு கட்ட முடியாத நிலையில் வீட்டை ஜப்தி செய்யம் அளவுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கிறது. இது போன்ற நிலைமையில் இஎம்ஐ திட்டங்களில் பொருட்களை வாங்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி வரும்.
வட்டிக்கு கடன் வாங்கக் கூடாது என்று தயங்குபவர்கள்கூட இஎம்ஐ திட்டங் களில் தயங்காமல் கடன் வாங்கு கின்றனர். இதற்கு காரணம் 0% வட்டி என்கிற இந்த கவர்ச்சிதான். மாதா மாதம் கையிலிருந்து சின்ன தொகை கொடுத்தால் போதும் என்பதுதான் இவர்கள் சொல்லும் வாதம்.
ஆனால் இந்த 0% வட்டி என்கிற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என்பது முக்கியமானது. இதற்கு பிறகும் வேறு வேறு பெயர்களில் இந்த திட்டம் தொடர்கிறது.
வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமல்ல, வாகனக் கடன்கள்கூட இப்படியான அறிவிப்புகளில் சக்கைபோடு போட்டன. இதனால் தவணைத் திட்டங்களில் விற்பனை 20 சதவீதம் வரை அதிகரித்து கல்லா கட்டின நிறுவனங்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் தடை காரணமாக கடந்த ஆண்டில் மின்னணு பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்ததாக குறிப்பிடுகின்றனர் மின்னணு பொருள் கள் விற்பனையாளர்கள்.
இப்போது இந்த 0% இஎம்ஐ திட்டங்களின் நிலை என்ன என சென்னையிலுள்ள விற்பனையகங்களில் விசாரித்தோம்.
“வட்டியில்லாத தவணைத் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விற்பனையை அதிகரிக்கச் செய்வது மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனாலும் நாங்கள் வாடிக்கை யாளர்களைக் கவர வேண்டுமானால் அந்த அஸ்திரத்தை பயன்படுத்தத்தான் வேண்டியிருக்கிறது என்கின்றனர் இவர்கள். தவணையில் பொருட்கள் வாங்குவது தவிர்க்க முடியாத பண்பாடாக மாறியுள்ளது.
மக்கள் மொத்தமாக பணத்தை கட்டி பொருட்களை வாங்குவது குறைந்துவிட்டது. அதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது. வீட்டுக் கடன், வெளிநாட்டு சுற்றுலா, கல்விக்கடன், மருத்துவச் செலவுகள் என எல்லாமே இஎம்ஐ மயமாக இருக்கிறது. இதுதான் மக்களுக்கு சுலபமாக இருக்கிறது என்கின்றனர் விற்பனையாளர்கள்.
ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு முன்னணி கடனுதவி நிறுவனங்கள் மின்னணு சாதனங்களுக்கான கடனுதவியை நிறுத்திவிட்டன. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இப்போது கடனுதவி செய்து வருகின்றன. அதே சமயத்தில் சில விற்பனை நிறுவனங்கள் தங்களிடம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களே கடனுதவி செய்து வருகின்றன.
அதாவது அவர்களிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு இஎம்ஐ மூலம் பணத்தைக் கட்டலாம். இப்போது இந்த வழியில்தான் 0% வட்டி என்பது மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் இந்த 0% என்பதற்கு பின்னணியில் பல விவரங்களும் உள்ளன. வட்டியில்லாமல் கடன் கொடுக்க அந்த நிறுவனங்களுக்கான நோக்கம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கலாம்.
ஆனால் லாபம் இல்லாமல் விற்க முடியுமா? அல்லது கடனுதவிதான் செய்வார்களா? இங்குதான் இதன் பின்னாலுள்ள சூட்சுமங்களை விளக்குகின்றனர் விவரமறிந்தவர்கள்.
தவணையில் வாங்கும் பொருளுக்கு ஏற்ப 4 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி கணக்கிடத்தான் செய்கிறார்கள். இதை வெளிப்படையாக இத்தனை சதவீதம் என்று அறிவித்தால் வாடிக் கையாளர் தயங்குவார். அதனால்தான் வட்டியில்லாத கடனுதவி என்கிற அறிவிப்பு.
வட்டியில்லா கடனில் பொருட்களை வாங்குபவர்களுக்கு பேரம் பேசும் வாய்ப்பு கிடையாது. பேரம் பேசும்போது விலை குறைக்க வாய்ப்பு உள்ளது. விலையை குறைக்க வாய்ப்பில்லாத நிலை அல்லது அதிகமாக கூறுவார்கள். தவிர பிராசசிங் கட்டணம், டாக்குமெண்ட் கட்டணம், செல்லர்ஸ் அக்ரிமெண்ட் என பல மறைமுக கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கும்.
இதை எல்லாவற்றையும் கணக்கிட்டால் கிட்டத்தட்ட அந்த நிறுவனம் கணக்கிடும் வட்டி வீதத்துக்கு இணையாக இருக்கும் என்கின்றனர். தவிர ஒரு தவணை தவறினாலும் அபராதம், வட்டி என அதற்கும் தனியாக தொகைகள் கறந்து விடுவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட சில நிறுவனங்கள் முதலில் கட்டும் மார்ஜின் தொகைக்கும் சேர்த்து வட்டி கணக்கிடுகின்றன. அதாவது பொருட் களை வாங்குகிறோம் என்றால் 3:1 என்கிற வீதத்தில் முன்பணம் கட்ட வேண்டும். அந்த ஒரு பங்கு முன்பணத்துக்கும் வட்டி கணக்கிடுகின்றனர். எனவே 0% வட்டி என்பதெல்லாம் வாடிக்கையாளர்களை இழுக்கும் உத்திதான். அதே நேரத்தில் இஎம்ஐ திட்டங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
வீட்டு உபயோகப் பொருட்களை தவணையில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் இது சரியான பழக்கம் அல்ல. பொருட்களை உடனடியாக வாங்கி பயன்படுத்தும் வேகம் இருக்கிறது. ஆனால் அதற்கான வட்டி குறித்து யோசிப்பதில்லை. குறைந்த வருமான பிரிவினருக்கு வாய்ப்பு என்பதையெல்லாம் தாண்டி திட்டமிட்டபடி வாழ்க்கை அமைத்துக் கொண்டால் தவணைத் திட்டங்களில் ஏமாற வேண்டிய தேவை இருக்காது.
அதே சமயத்தில் நமது தேவை களையும் நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்பதுதான் உண்மை.