

நிறுவனத்தின் உச்ச கட்டத் தலைவர் வாடிக்கையாளரே! அவரால்தான் யாரை வேண்டுமானாலும் அந்த நிறுவனத்தின் முதன்மை அதிகாரியைக்கூட வீட்டிற்கு அனுப்ப முடியும்- என்பார் வால்மார்ட் நிறுவனர் சாம்வால்டன்.
எனவே வாடிக்கையாளர்களின் தேவை கள் குறித்த விழிப்புணர்வு இல்லா விட்டால் யாராக இருந்தாலும் ஒரு நாள் வீட்டிற்கு மூட்டைகட்ட வேண்டியது தான்! வள்ளுவர் அரசருக்கு தூங்காமை, கல்வி, துணிவுடைமை ஆகியவை நீங்காது இருக்க வேண்டுமென்கின்றார். இக்கால அரசர்களான நிறுவனத் தலைவர்களுக்கும் இது பொருந்தும்!
நிறுவனத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் கொஞ்சமும் அசர முடியாதே. தலைவராக ஆவது கடினம் என்றால் அதைத் தக்க வைத்துக் கொள்வது அதனினும் கடினமாயிற்றே. அசந்தால் போச்சு! விழிப்புணர்வையும் அறிவையும், துணிவையும் நிறுவனத்தினுள்ளும், அதைச்சுற்றி நடப்பவை என்று வகைப்படுத்தலாம்.
மேலதிகாரிக்கு நிறுவனத்துக்குள் என்ன நடக்கிறது என்பது தெரிவதற்கு முறைப்படி தகவல்களாக (MIS) வர ஏற்பாடு இருக்கும். ஆனால் வெறும் எண்களால் சொல்ல முடியாதவையும் பல உண்டு. அவை மறைமுகமாகவே வெளிப்படும்.
பணியாளர்களின் மனநிலை எப்படி? மகிழ்ச்சியா இல்லையென்றால் ஒத்துழையாமையா, வேலை நிறுத்தம் வரப் போகின்றதா என்பது குறித்த விழிப்புணர்வு வேண்டுமே!
வாடிக்கையாளர்கள் பொருட்களையோ, சேவைகளையோ வாங்குவதில்லை. அவர்கள் அவை கொடுக்கும் திருப்தியைத்தான் வாங்குகின்றார்கள் என்பார் நிர்வாகவியல் குரு பிலிப் கோட்லர். இந்தியன் ஏர்லைன்ஸ்க்கு பயணிகள் வெகுவாகக் குறைந்ததேன்?
அம்பாஸிடர் கார், பஜாஜ் ஸ்கூட்டர், பிளாக்பெரி மொபைல் எத்தனை இருக்கின்றன இப்பொழுது? நுகர்வோரின் தேவைகளும், ரசனைகளும் மாறும் பொழுது வாடிக்கையாளரைத் தக்க வைத்துக் கொள்ள அவர்களது தேவை அறிந்து புதுப்புதுப் பொருட்களை, சேவைகளை உருவாக்கினால்தான் உண்டு!
இதற்கு அவசியமானது வாடிக்கையார் தேவை குறித்த அறிவு -அதாவது தனது நிறுவனத்தின், பொருளின், சேவையின், பணியாளர்களின், தொழில்நுட்பத்தின், போட்டியாளர்களின் மற்றும் சந்தைப்படுத்தலின் ஞானம் குறித்தது. உங்களுக்கு என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்று தெரியாவிட்டால் எது நடக்கப்போகிறது எப்படி நடக்கப்போகிறது என்பது புரியுமா என்ன?
பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு போர் விமானம் ஓட்டத் தெரிய வேண்டாம். ஆனால் அதன் உத்தேச விலை என்ன, எங்கே தரம் உயர்வு, விலை குறைவு, எந்தெந்த நாட்டில் விற்கின்றார்கள் என்கின்ற பொது அறிவு வேண்டாமா?
அடுத்த முக்கியத் தேவை துணிவு. இது தெரிந்த எதிரியுடன் சண்டை போடும் அஞ்சாமை அல்ல! ஆழம் தெரியாத தண்ணீரில் குதிப்பது, வழி தெரியாத காட்டில், இருட்டில் நடப்பது போன்றது! புதிய இடத்தில் கிளை திறக்கவும், புதிய அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைக்கவும், புதிய பொருட்களை உற்பத்தி செய்யவும் துணிவு வேண்டுமே!
பழகியவற்றையே பின்பற்றுவது ஒருவித சௌகரியத்தைக் கொடுக்கலாம். ஆனால் அதை மீறி வருபவர்களே தொடர்ந்து கோலோச்சுவர்!
குறள் சொல்லும் மந்திரம் இதோ
தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
somaiah.veerappan@gmail.com