

தலைப்பைப் பார்த்தவுடன், நமக்கு எது தேவையோ அதைத்தானே தேர்ந்தெடுத்து வாங்குகிறோம் என்று நினைக்கத் தூண்டும். ஆனால் தொழில் முனைவோரின் தேர்வு வேறு மாதிரியானது.
கடந்த வாரம் நாமக்கல் தொழில் முனைவோர் அலமேலு குறித்த செய்தியைப் படித்த பல வாசகர்கள் இணையதளத்தில் தொடர்பு கொண்டு அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்டனர். தொழில் முனைவோர் பலருக்கும் அவர் முன்னுதாரணம் என்பதற்குத்தான் அவரைப் பற்றிக் கூறினேன்.
கடந்த சில வாரங்களாக பொருள் விற்பனை மற்றும் அதை சந்தைப் படுத்துவதைப் பற்றி பார்த்து வந்தோம். ஆனாலும் இன்னமும் பலரது கேள்வி எந்தத் தொழிலைத் தொடங்குவது என்பதாகத்தானிருக்கிறது.
முதலில் உங்கள் பகுதியில் எந்த தொழிலுக்கான தேவை இருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள். மக்களின் தேவை எது என்பதைக் கண்டுபிடித்து அதை உங்கள் தொழிலாகத் தேர்ந்தெடுங்கள். இதற்கு எனது ஆரம்ப கால உதாரணமே உங்களுக்கு பாடமாக இருக்கும்.
2001-ம் ஆண்டு இன்டர்நெட் பரவலாக புழக்கத்துக்கு வந்த போது சென்னையில் காய், கனி, பூ இவற்றை இணையதளம் மூலம் விற்க முடிவு செய்து நான் தொடங்கிய இணையதளம் www.pookaaikani.com
சென்னையில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், பிரெஷ்ஷாக காய்கறிகளை வாங்கி சமைப்பது அவர்களுக்கு சாத்தியமில்லாததாக இருந்தது. இணையதளத்தில் முன்தினம் மாலை 5 மணிக்கு தேவையான காய், கறி மற்றும் பூக்கள் குறித்து ஆர்டர் அளித்துவிட்டால் மறுநாள் காலை பேப்பர் போடும் முன்பாக அவர்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் பிரஷ்ஷாக சப்ளை செய்யப்படும்.
ஆரம்பித்த 6 மாதத்தில் எனது வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 3,500-ஐ தொட்டது. நாளிதழ்கள், வார இதழ்கள் என அனைத்துமே இந்த இணையதளம் பற்றித்தான் சிலாகித்து செய்தி, கட்டுரைகள் வெளியிட்டன.
ஆனால் அடுத்த 11 மாதங்களில் இதற்கு மூடுவிழா காண நேரிட்டது. வாடிக்கையாளர் வட்டம் அதிகரித்தபோதும் இதை மூடியதை பலரும் எதிர்பார்க்கவில்லை. இதற்குக் காரணம்தான் என்ன?
முதலில் எனக்கு காய்கறி, பூ, பழம் சந்தை பற்றி சரியாகத் தெரியாது. அடுத்தது இவற்றை வாங்கி வருவதற்கு மற்றவர்களை பெரிதும் சார்ந்திருந்தது. அனைத்துக்கும் மேலாக காய்கறிகளை வாங்கி அவற்றை சுத்தப்படுத்தி, அழகாக பேக் செய்து அளிக்கும்போது சந்தை விலையை விட சற்றுக் கூடுதலாக விற்க வேண்டியிருந்தது.
இருந்தாலும் சந்தை விலைக்குக் கொடுக்க ஆரம்பித்தபோது நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் பிரச்சினை வேறு வடிவத்தில் வந்தது.
மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகளை அதிகாலையில் வாங்கி, அவற்றை சுத்தப்படுத்தி, உரியவர்களுக்கு சென்று சேர்க்க வேண்டும். இதில் மார்க்கெட்டுக்கு செல்லவேண்டிய நபர் வரவில்லையெனில் நானே செல்ல வேண்டும். அடுத்தது காய்களை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை பேக் செய்து கொடுக்க வேண்டும்.
இந்த பணிகளை செய்தபோது காலையில் டெலிவரி செய்ய வேண்டிய நான், மாலை 4 மணிக்கு காய்கறியை சப்ளை செய்தபோது, தக்காளியை முகத்தில் வீசாத குறையாக வாடிக்கையாளர்கள் கடிந்துகொண்டனர்.
11 மாதத்தில் ரூ. 11 லட்சம் நஷ்டம். இதற்கு மேலும் தொடர்ந்தால் நஷ்டம் அதிகரிக்கும் என்பதால் மூடு விழா நடத்தி விட்டேன்.
இதில் நான் செய்த தவறுகளை பட்டியலிட்டேன். முதலில் காய்கறி சந்தை பற்றி சரிவர தெரிந்து கொள்ளாதது. பொருள்களை மதிப்பு கூட்டி (சுத்தப்படுத்தி, பேக் செய்து) கொடுத்தாலும் கூடுதல் விலை தரத் தயாராக இல்லாத வாடிக்கையாளர்களைப் பற்றி உணராதது, மற்றவர்களை மட்டுமே சார்ந்து தொழிலில் இறங்கியது.
எனவே தொழில் தொடங்குவோர் புதிதாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்காமல் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் தொழிலைத் தேர்ந்தெடுங்கள். அதில் உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராயுங்கள். உங்களுக்கு என்ன முழுமையாக தெரியும் என்பதை உணருங்கள். தேவை அறிந்து தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம் என்ற உத்தி சரி என்று படும்.
aspireswaminathan@gmail.com