குறள் இனிது: ராஜா வீட்டு கன்றுக்குட்டி

குறள் இனிது: ராஜா வீட்டு கன்றுக்குட்டி
Updated on
2 min read

‘அந்த அலுவலகத்தில் அந்தப் பணியாளர்தான் எல்லாம். அவர் காட்டிய இடத்தில் மேலதிகாரி கையெழுத்துப் போடுவார்’ என்பது போன்ற பேச்சுக்களைக் கேட்டு இருப்பீர்கள். எந்த ஒரு அலுவல கத்திலும் சிறப்பாகப் பணிபுரியும் சிலர் இருப்பார்கள். அப்பணியாளர்கள் விரைவில் மேலதிகாரியின் நல்லெண்ணத்தைப் பெற்று, பிறகு சிறுகச் சிறுக மேலதிகாரியின் நம்பிக்கையையும் பெற்று விடுவார்கள்.

மேலதிகாரியின் அணுகுமுறை அவர்களுக்குத் தெரிந்து இருப்பதால், அவர் ஒரு சிக்கலான காரியத்தில் என்ன முடிவு எடுப்பார் என்பது கூட அவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இதனால் மேலதிகாரிக்குத் தான் நெருக்கமானவர் என்கின்ற எண்ணத்துடன் தன் அதிகார வரம்பை மீறி நடந்து கொள்ளத் தூண்டும்! ஆனால் அம்மாதிரியான செயல்களை மேலதிகாரிகள் விரும்புவதும் இல்லை; அங்கீகரிப்பதும் இல்லை!

அமைச்சர் தன்னை அரசருக்கு விருப்பமானவர் என்று நினைத்து அரசர் விரும்பாத செயல்களைச் செய்யக் கூடாது என்று சொல்கின்றது குறள். சிலர் தாம் மேலதிகாரிக்கு வேண்டியவர் என்பதால் பணிக்குத் தாமதமாக வருவது, கொடுக்கப்பட்ட பணியினை முடிக்காமல் விடுவது, தனக்குள்ள வரம்பை மீறி செலவழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்

ஒருவர் அலுவலகத்தில் இரண்டாம் நிலை அதிகாரி எனக் கொள்வோம். அந்த அலுவலகத்தின் மேலதிகாரி வெளிநாடு பயணம் சென்றுள்ளார். அது சமயம் புதிதாக வேலைக்கு சேர்த்துள்ள 10 பணியாளர்களுக்கு வெவ்வேறு ஊர்களுக்கு பணி அமர்த்தும் ஆணைகள் இட வேண்டும். மேலதிகாரி கூறியபடி 9 பேருக்கு ஆணைகளும், தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு மட்டும் ஒரு ஆணையை மாற்றியும் இட்டால், தனக்கு விருப்பமான அதிகாரி செய்தது என்பதால் மேலதிகாரி கோபிக்க மாட்டாரா?

மேலதிகாரி பணியாளர் உறவில் பணியாளர் பெறுகின்ற முக்கியத்துவம், செல்வாக்கு ஏன் அதிகாரம் கூட மேலதிகாரி கொடுப்பதினால் அல்லது தடுக்காதிருப்பதினால் வருவது தானே! சில அலுவலகங்களில் இந்த அதிகார விளையாட்டு வெளிப்படையாகக் கூடத் தெரியும்.

சில உயரதிகாரிகள் வேண்டுமென்றே தனக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரியைப் புறக்கணித்துவிட்டு மூன்றாம் அல்லது நான்காம் நிலையிலுள்ள பணியாளருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்து இருக்கிறோம். உடனே அவரது ஆட்டம் ஆரம்பிக்கும். உயரதிகாரியுடன் தமக்கிருக்கும் நெருக்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்.

மேலதிகாரி பணியாளருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பணியாளரின் நற்குணங்களால், நல்ல நோக்கத்துடன் வந்திருந்தாலும் சரி, மேலதிகாரியின் கெட்ட குணங் களால் கெட்ட நோக்கத்துடன் வந்திருந்தாலும் சரி, பணியாளர் தன்னுள் ஒரு தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு விடுவார். தான் நினைத்ததைச் செய்யலாம், மேலதிகாரி ஒன்றும் சொல்ல மாட்டார் என்கின்ற நினைப்பு வந்து விடும்.

ஆனால் ஒருவர் மேலதிகாரிக்கு விருப்பமானவர் என்பது அவர் மேலதிகாரிக்குப் பிடித்த செயல்களைச் செய்யும் வரை மட்டுமே. பிடிக்காததைச் செய்தால் போச்சு; எல்லாம் போச்சு! யாரும் தங்கள் அதிகாரத்தை மற்றவர்கள் எடுத்துக் கொள்வதை விரும்புவதில்லை. கருத்தில் கொள்ள வேண்டிய நல்ல குறள் இதோ...

கொளப்பட்டோம்என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

சோம.வீரப்பன்

somaiah.veerappan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in