Last Updated : 02 Feb, 2015 12:14 PM

 

Published : 02 Feb 2015 12:14 PM
Last Updated : 02 Feb 2015 12:14 PM

முதலீட்டாளர்களுக்கான பிராக்சி ஆலோசனை நிறுவனங்கள்

முதலீட்டார்களின் பெரிய வாய்ப்பாகக் கருதப்பட்டது பரஸ்பர நிதிகள்(மியூச்சுவல் பண்ட்). இத்தகைய அமைப்புகள் இரண்டு விதங்களில் சிறு முதலீட்டார்களைக் கவர்கிறது. ஒன்று, சிறிய முதலீடுகளைத் திரட்டி பெரிய முதலீடுகளை பங்கு சந்தையில் பரஸ்பர நிதிகளால் செய்யமுடியும்.

இரண்டாவது, பங்கு சந்தையின் நுட்பங்களை சிறிய முதலீட்டார்களால் ஆராய முடியாத பட்சத்தில், பரஸ்பர நிதி அமைப்புகள் அவற்றை செய்து சிறப்பான பங்கு முதலீடுகளை செய்யமுடியும்.

சிறிய சிறப்பான முதலீடு முடிவுகளின் ஒரு முக்கிய பகுதி என கருதப்படுவது யாதெனில் முதலீட்டாளர்கள் தாங்கள் பங்கு வைத்துள்ள கம்பெனிகளின் ஆண்டு பொதுக் குழு (Annual General Body) கூட்டத்தில் பங்குகொண்டு கம்பெனியின் முடிவுகளில் வாக்களிக்க வேண்டும். அதை செய்யத்தவறும் போது கம்பெனியின் மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டு முதலீட்டாளர்களின் நன்மை பாதிக்கப்படும்.

இதனால் பரஸ்பர நிதி அமைப்புகள் தாங்கள் முதலீடு செய்த கம்பெனிகளின் பொதுக் குழுவில் பங்கு கொண்டு முடிவுகள் மேல் வாக்களிக்கவேண்டும், அவ்வாறு வாக்களித்த விவரங்களை (வாக்களிக்கவில்லை என்றாலும் அதனையும் சேர்த்து) தங்களின் இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று செபி கட்டளை பிறப்பித்துள்ளது. இந்த கட்டளை ஒரு புதிய வியாபாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது அது பிராக்சி ஆலோசனை நிறுவனங்கள்.

பிராக்சி ஆலோசனை நிறுவனம்

பிராக்சி ஆலோசனை நிறுவனம் தாங்களாகவே ஒவ்வொரு கம்பெனியின் ஆண்டு அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட கணக்குகளை ஆராய்ந்து அடுத்த பொதுக் குழு கூட்டத்தில் முதலீட்டார்களின் நன்மையை பாதிக்கும் முடிவுகள் எவை, ஏன் அவற்றிற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்பதையும் கூறுகின்றன; அதேபோல் ஆதரிக்கவேண்டிய முடிவுகளையும் கூறுகின்றன.

InGovern Research Services (InGovern), Institutional Investor Advisory Services IiAS), மற்றும் Stakeholder Empowerment Services (SES) என்ற மூன்று பிராக்சி ஆலோசனை நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

இவ்வகை நிறுவனங்கள் வெளியிடும் செய்தி குறிப்புகளில் சில பொதுவான ஆலோசனைகள் உள்ளன. அவற்றை சிறு முதலீட்டாளர்கள் பயன்படுத்தி இன்டர்நெட் மூலம் தங்கள் வாக்குகளை ஆண்டு பொது குழு கூட்டத்தில் பதிவு செய்யலாம். இது கம்பெனியின் ஆளுமையில் சிறு முதலீட்டார்களின் பங்கை உயர்த்த உதவும். அண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்த AGM வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதனை எதிர்க்க சொல்லி ISS என்ற அமெரிக்க ஆலோசனை நிறுவனம் அறிவுறுத்தியது; ஆனால் இந்தியாவில் உள்ள IiAS என்ற நிறுவனம் ஆதரிக்கவேண்டும் அன்று ஆலோசனை கூறியது. முடிவில் 75% பங்குதாரர்கள் சம்பள உயர்வை ஆதரித்து வாக்களித்தனர்.

பரஸ்பர நிதி மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடம் இந்த வகை ஆராய்ச்சிக்கான தகுதி வாய்ந்த நிபுணர்கள் இருந்தாலும் பலநேரங்களில் அதனை செய்வதில்லை. இந்த நிலையில் பிராக்சி ஆலோசனை நிறுவனத்தின் சேவை தேவைப்படுகிறது. சில அமைப்புகள் தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை நடுநிலையோடு ஆராயும் பிராக்சி ஆலோசனை நிறுவன முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் முயற்சிக்கலாம்.

2010-11 காலக்கட்டத்தில் ஆரம்பிக் கப்பட்ட இந்த வகை பிராக்சி ஆலோசனை நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இல்லை. இப்போது சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முதலீட்டார்களும் பிராக்சி நிறுவன ஆலோசனையை நாடதுவங்கியுள்ளனர்.

பரஸ்பர நிதி அமைப்புகளின் பங்கேற்பு

செபி அறிவுறுத்தலுக்கும் பின்பும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் பொது குழு கூட்டங்களில் வாக்களிப்பதை முறையாக செய்வதில்லை. ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரூ 9௦,௦௦௦ கோடி முதலீட்டு சொத்துகளை வைத்திருந்தாலும் 2012-13 நிதி ஆண்டில் 91% வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை; அதே போல் டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதே காலத்தில் ஒரு முறைகூட வாக் களிக்கவில்லை என்று மின்ட் (MINT) என்ற பத்திரிகை தெரிவிக்கிறது.

InGovern என்ற பிராக்சி ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 2011-12-ம் நிதி ஆண்டில் கம்பெனிகளின் ஆண்டு பொது குழு கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களிப்பதை தவிர்த்தோ அல்லது முழுமையாக ஈடுபடாமல் பல பரஸ்பர நிதி அமைப்புகள் இருந்துள்ளன. இந்த ஆண்டில் கொண்டு வரப்பட்ட கம்பெனிகளின் 48% முடிவுகளின் வாக்கெடுப்பின் பரஸ்பர நிதி அமைப்புகள் கலந்துகொள்ளவில்லை.

இந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட 23,482 முடிவுகளுக்கான வாக்கெடுப்பில் ஒரு சதவீதம் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளன. இவ்வாறு பரஸ்பர நிதி அமைப்புகள் நிறுவனங்களின் ஆண்டு பொதுக் குழு கூட்டங்களில் பங்குகொள்ளாமல் இருப்பது, வாக்கெடுப் பில் சரியாக வாக்களிக்காமல் இருப்பதும் சிறு முதலீட்டார்களை பெரிதும் பாதிக்கும், இந்த போக்கு நீங்க வேண்டும், அதில் பிராக்சி ஆலோசனை நிறுவனங்களின் பங்கு அதிகம்.

பிராக்சி ஆலோசனை நிறுவனங்கள் செய்யவேண்டியது என்ன?

பல நாடுகளில் இதுபோன்ற பிராக்சி ஆலோசனை நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மீது சில பொதுவான குற்றசாட்டுக்கள் உண்டு. எல்லா கம்பெனிகளின் முடிவுகளையும் ஒரே மாதிரியான அளவுகோளால் அளப்பது. முடிந்த வரை ஒவ்வொரு கம்பெனியின் சாதக பாதகங்களை நன்கு ஆராய வேண்டும். இதுவரை பிராக்சி ஆலோசனை நிறுவனங்களின் முடிவுகள் கம்பெனிகளின் வளர்ச்சிக்கு உதவின என்பதை உறுதி செய்யமுடியவில்லை.

அதே நேரத்தில் சில ஆலோசனை நிறுவனங்கள் பாரபட்சமாகவும், போதிய நிபுணத்துவம் இல்லாமலும் இருந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. எனவே ஆலோசனை நிறுவனங்கள் தங்கள் திறமைகளை தொடர்ந்து வளர்த்துகொள்வதும், நடுநிலையாக இருப்பதும் அவசியம்.

அதே நேரத்தில் இந்நிறுவனங்களை சிறு முதலீட்டாளர்களும் பரஸ்பர நிதி நிறுவனங்களும் அதிகம் பயன்படுத்தும் போதுதான் அவை மேலும் வளர முடியும்.

பரஸ்பர நிதி மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடம் ஆராய்ச்சிக்கான தகுதி வாய்ந்த நிபுணர்கள் இருந்தாலும் பலநேரங்களில் அதனை செய்வதில்லை. இந்த நிலையில் பிராக்சி ஆலோசனை நிறுவனத்தின் சேவை தேவைப்படுகிறது. சில அமைப்புகள் தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை நடுநிலையோடு ஆராயவும் பிராக்சி ஆலோசனை நிறுவன முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும் முயற்சிக்கலாம்.

இராம.சீனுவாசன்

seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x