

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்கம் ( TANSTIA) ஜெர்மனியில் உள்ள பிரடெரிக் நாமன் பவுண்டேஷன் (FNF) இரண்டும் இணைந்து சிறு மற்றும் குறுந்தொழில்களின் மேம்பாடு மற்றும் தொழில் முனைவர்களுக்கான சேவைகளை அளிக்க தொடங்கப் பட்டதுதான் டான்ஸ்டியா-எஃப்.என்.எஃப் சேவை மையம்.
புதிய பொருளாதார வர்த்தகத்தில் தொழில்முனைவர்கள் பல நாடுகளில் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப இந்த நிறுவனம் தகவல்களை அளித்து வருகிறது.
1992-ல் இந்த நிறுவனம் தொடங்கப் பட்டது. உலக அளவில் பல நாடுகளில் இந்த சேவை மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் சென்னையில் மட்டுமே இருக்கிறது.
தொழில் தொடங்குவது தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் இந்த அமைப்பு தீர்த்து வைக்கிறது.
மேலும் புதிய தொழில் முனை வர்களை உருவாக்குவதிலும் பங்களிப்பு செலுத்துகிறது.
ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் உள்ளவர்களுக்கு ஆலோசனை முதல் பயிற்சி, நிதி உதவிக்கான வழிகாட்டுதல், தொழில் நிறுவனத்தை அமைப்பதற்கான அனுமதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளை ஒருங்கிணைத்து கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது.
தொழில் முனைவர் நேரில்தான் வரவேண்டும் என்கிற அவசியமில்லை. கடிதம் மூலமாகக்கூட தங்களது சந்தேகங்களைக் கேட்கலாம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான மூலப்பொருள் எங்கு கிடைக்கும், சந்தைப்படுத்துவது எப்படி, இயந்திரங்கள், அவற்றின் விலை, தொழில் நுட்பம், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை இந்த அமைப்பு கொடுக்கிறது.
தொழில் முனைவர்களுக்கு முதற்கட்டமான ஆலோசனை வழங்க துறை சார்ந்த தொழில் ஆலோசகர்கள் சுமார் 280 பேர் இந்த அமைப்பில் உள்ளனர். இவர்கள் மூலம் தொழில் ஆலோசனை வழங்கி வருகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் தகவல் உதவிகள் கொடுக் கப்படுகின்றன. வருமான வரி, விற்பனை வரி, ஐ.எஸ்.ஓ சான்றிதழ், டிரேட் மார்க் பதிவு போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உதவி செய்கிறது.
புதிய தொழில் முனைவர்களுக்கு தொழில் தொடர்பான திட்ட அறிக்கை, அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பது, தொழில்நுட்ப உதவிகள், நிதி ஏற்பாடு களுக்கு உதவியும், மானியம் தொடர்பான வழிகாட்டுதல், நிர்வாகம், சந்தையிடல் போன்ற விவரங்களில் உதவிகள் செய்து வருகிறது.
காப்புரிமை, சுற்றுச்சூழல் அனுமதிகள், வர்த்தக புள்ளிவிவரம் என அனைத்து சேவைகளும் இந்த அமைப்பு செய்து தருகிறது.
ஆலோசனை மற்றும் பயிற்சி களுக்கு குறைவான கட்டணமே வசூலிக் கப்படுகிறது. மேலும் திட்ட அறிக்கையும் குறைவான கட்டணத்திலேயே தயாரித்து வழங்குகின்றனர்.
சுமார் 400க்கு மேற்பட்ட தொழில் களுக்கு திட்ட அறிக்கை இந்த அமைப்பிடம் உள்ளது. இந்த அமைப்பின் மூலம் கீழ்க்கண்ட தொழில்களுக்கான ஆலோசனை மற்றும் உதவிகள் கிடைக்கும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தவிர தனிநபர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஏற்ப செல்போன் சர்வீஸ், லேப்டாப் சர்வீஸ், டெரகோட்டா பொம்மைகள் தயாரிப்பு, செயற்கை மலர்கள், சோலார் பொருட்கள் தயாரிப்பு, ஷூ பாலிஷ், மசாலா பொடி, தையல் கடை, பதப்படுத்தப்பட்ட உணவு,
மெழுகுவத்திகள், திரவ சோப்பு, சொட்டு நீலம், சிறு அச்சகம், மொஸைக் டைல்ஸ், நோட் புக், அலங்கார மீன், உலர் பழங்கள், ஊறுகாய் வகைகள், பிளாஸ்டிக் பொம்மை, டிடர்ஜென்ட் சோப் பால் பண்ணை, எமர்ஜென்ஸி விளக்குகள், உரக் கலவை, சத்து மாவு, கவரிங் நகைகள், சணல் பைகள், ஹவாய் செருப்புகள், மூலிகை தைலம், பின்னலாடை என பல தொழில்களுக்கான திட்ட அறிக்கையும் கிடைக்கும்.
தொடர்பு முகவரி
TANSTIA-FNF Service Centre, B-22, Industrial Estate, Guindy,
Chennai - 600 032, Tamil Nadu, India
Tel : 0091-44-22501451, E-mail: tfsc@tanstiafnf.com