

ஐரோப்பிய யூனியனில் சிக்கலில் இருக்கும் நாடுகளில் முக்கியமானது கிரீஸ். இங்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பொடாமி கட்சியைச் சேர்ந்த ஸ்டாவ்ரோஸ் தியோடோராகிஸ்-க்கு (Stavros Theodorakis) கணிசமாக செல்வாக்கு இருந்தது. நான் வெற்றி பெற்றால் ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரீஸ் வெளியேறும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இவர் தோல்வி அடைந்து இடது சாரி கூட்டணியை சேர்ந்த அலெக்சிஸ் சிபிராஸ் (Alexis Tsipras) பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இதுவரை நடந்த சிக்கன நடவடிக்கைகளைத் திரும்ப பெறுவோம் என்பதை சொல்லி வெற்றி அடைந்தார்.
வெற்றி அடைந்த உடன் முதல் வேலையாக எங்களுடைய திட்டம் தொடரும் என்றும், எங்களை நம்பி வாக்களித்த மக்களை அதிருப்திக்கு உள்ளாக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
முதல் வேலையாக இதுவரை நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் தொடர்வது, குறைந்தபட்ச சம்பளம் 751 யூரோ என சில ஊக்க நடவடிக்கைகளை அளித்தார். அதன் பிறகு இவரது அமைச்சரவையை சேர்ந்த மற்றவர்களும் சலுகைகளை வழங்க ஆர்ம்பித்தார்கள்.
சிக்கன நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் ஐரோப்பிய யூனியன், சர்வதேச செலாவணி மையம் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து 720 கோடி யூரோ நிதி உதவி கொடுப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான கூட்டம் வரும் பிப்ரவரி 28-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்துக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது கிரீஸின் புதிய அரசு.
இந்த நிலையில் ஏற்கெனவே 350 கோடி யூரோ அளவுக்கு கடன் பத்திரங்களை கிரீஸ் வெளியிட்டிருக்கிறது. இதற்கான தொகையை வரும் ஜூலை 20-ம் தேதி கிரீஸ் செலுத்த வேண்டும். இதனால் கிரீஸ் எதிர்காலம் கேள்விக்குறியில் இருக்கிறது.
தவிர, கிரீஸ் அரசு மிகப்பெரிய தவறை செய்ய இருப்பதாக ஜெர்மனி தெரிவித்திருக்கிறது. கிரீஸுக்கு உதவிகள் செய்ய இருக்கிறோம். ஆனால் ஏற்கெனவே செய்ய ஒப்புக்கொண்ட சிக்கன நடவடிக்கையை செய்ய வேண்டும் என்று ஜெர்மனி தெரிவித்திருக்கிறது.
ஜெர்மனியில் நடந்த ஒரு சர்வேயில் யூரோவில் இருந்து ஜெர்மனி வெளியேறு வது ஐரோப்பிய யூனியனுக்கு நல்லது என்று 61 சதவீத ஜெர்மனியர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கிரீஸ் ஐரோப்பிய யூனியனில்தான் தொடர்கிறது என்று ஐரோப்பிய யூனியனில் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கமிஷனர் பியரி மோஸ்கோவிசி (Pierre Moscovici) தெரிவித்தார். யூரோவுக்கு கிரீஸ் தேவை, அதேபோல யூரோவில் இருப்பதான் கிரீஸுக்கும் நல்லது என்பது போல கூறினார். ஐரோப்பிய யூனியனில் தொடர்வதற்கான அத்தனை வேலைகளையும் நாங்கள் செய்யத்தயார். ஆனால், கிரீஸ் ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.
இப்போதைக்கு இந்த பிரச்சினை முடியாது போலிருக்கிறது...
$ கிரீஸ் ஜிடிபியில் கடன் 175%
$ நெருக்கடிக்கு பிறகு பொருளாதாரம் 25% சுருங்கிவிட்டது.
$ வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 25%