

‘15 வருடங்களாக இங்கே உழைத்துக் கொட்டி ஓடாய்ப் போனதுதான் மிச்சம். சென்ற வருடம் வேலைக்குச் சேர்ந்தவனைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்; அவர் ஏதோ கம்ப்யூட்டர் நிபுணராம்!’ என்று அங்கலாய்ப்பவர்களைப் பார்த்து இருப்பீர்கள்.
பல வருடங்களாகப் பணியில் இருப்பவர்களுக்குப் புதியவர்கள் சில வருடங்களிலேயே, ஏன் சில மாதங்களிலேயே கூட அவ்வேலையைச் செய்துவிடுவது எரிச்சலானதுதான். பொதுவாக முதுநிலை (Senior) பணியாளர்களுக்கு இளநிலை (Junior) பணியாளர்களைக் குறித்த ஒரு போட்டி இருக்கத்தான் செய்கின்றது.
மூத்த பணியாளர்கள் வேலைப்பங்கீடு, இடமாற்றம், பதவி உயர்வு முதலியவற்றில் சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்கின்றார்கள். தம்மை நிர்வாகமும் மற்ற ஊழியர்களும் தாம் முதுநிலை பணியாளர் என்கின்ற காரணத்திற்காகவே மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து ஒரே நிலையில் வேலை செய்வது கடினமாகி விடுகின்றது. வேறு வேலைக்கோ, பதவி உயர்விலோ சென்று விட்டால் நன்று.
இதற்கு மாற்றாகச் சில அலுவலகங்களில் மூத்த பணியாளர்களுக்கு மற்ற பணியாளர்களிடம் வேலை வாங்கும் வேலை கொடுக்கப்பட்டு அவர்களது முக்கியத்துவம் அதிகரிக்கப்படுகின்றது. தலைமை எழுத்தர், தலைமைக் காவலர், கட்டட மேஸ்திரி போல முதன்மைப் பொது மேலாளர் கூட உண்டு! உணவு விடுதிகளில் சர்வர்களுடன் சபாரி அணிந்த மேற்பார்வையாளர்களைக் காண்கிறோமே!
கலை, விஞ்ஞானம், விளையாட்டுத்துறைகளில் மூத்தவர்களை மதிக்கின்றார்கள், பாராட்டுகின்றார்கள். அதைப் போலவே அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் மதிக்கலாம். ஆனால் எந்தச் சரக்கு விலை போகும்? ஆற்றல் தானே?
இங்கே உற்பத்தியை உயர்த்த, போட்டியைச் சமாளிக்க, செலவைக் குறைக்க, வருமானத்தைக் கூட்டிட வேண்டுமே. எனவே தரம் தானே தாரக மந்திரம்! ஆகவே மூத்த பணியாளர்களும் இன்றுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு, புதிய யுத்திகளை கல்வியினாலோ, பயிற்சியினாலோ பெற வேண்டுமில்லையா?
பழைய சக ஊழியர் மேலாளராக அமைந்து விட்டால் வருவது மற்றுமொரு சிக்கல்! மேலாளர் நம்முடைய மேலதிகாரி என்கின்ற நினைப்பை விட நம்முடைய பழைய நண்பர் என்கின்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். அதனால் மற்ற ஊழியர்களும் தம்மை சிறப்பாக நடத்த வேண்டுமென எதிர்பார்க்கும்.
நிதர்சனமான உண்மை என்ன? இன்று அவர் நண்பர் அல்ல மேலதிகாரி. கேள்வி கேட்கக் கூடிய நிலையில் உள்ளார். எனவே பழைய நட்பை நினைத்துக் கொண்டு நடந்து கொள்ளக் கூடாது அல்லவா?
அலுவலகமோ, அரசியலோ, அரசாங்கமோ நெடுநாள் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கலாம். அனுபவத்திற்கு மதிப்பு கொடுக்கலாம். ஆனால் அத்தகைய மூத்தவர்கள் வரம்பு மீறி நடக்கலாமா? முக்கியத்துவம் தகுதியினால் வரட்டும்! திறனால் வரட்டும்!
என்னை அனுபவத்திற்காக மதியுங்கள் என்று சொல்லும் நிலையை விட எனது திறமைக்காக, எனது சாதனைகளுக்காக மதியுங்கள் எனும் நிலையே நிலையானது; உண்மையானது; உயர்வானது!
யதார்த்த காப்பியமாம் திருக்குறள் சொல்வதைக் கேட்போம்.
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com