

நரசிம்மன் என்று ஒரு நல்ல மனிதர். பல வருட நல்ல சேவைக்குப் பின் ஒரு பெரிய வங்கியின் தமிழ்நாட்டின் கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். நூற்றுக்கணக்கான கிளைகள், ஆயிரக்கணக்கான பணியாளர்கள், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், கோடிக்கணக்கான வர்த்தகம். அப்பொழுது அவர் மனநிலை எப்படி இருக்கும்? புதிய இடம், புதிய பணியாளர்கள், புதிய பொறுப்புடன் புதிய வாய்ப்பு. நான் இங்கு சாதித்துக் காட்ட வேண்டும். எனது திறமைகளை எல்லாம் வெளிக்கொணர்வதற்கு நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி திட்டமிட்டுச் செயல்படத் தொடங்குவார் இல்லையா? ஆனால் இவ்வளவு பெரிய அமைப்பில் எதைப் பார்ப்பது எதைச் செய்வது என்கின்ற பதற்றம் வருமே.
ஐயா, நரசிம்மா, கவலை வேண்டாம்! ஐயன் வள்ளுவர் இறைமாட்சி எனும் அதிகாரத்தில் அரசன் எதை எதைச் செய்தால் நல்ல மன்னன் ஆவான் என்று சொல்லியிருப்பதைப் பின்பற்றினால் உங்களுக்கு வெற்றிதான். வங்கியோ, வர்த்தக நிறுவனமோ, மென்பொருள் நிறுவனமோ, ஆடை அங்காடியோ நீங்கள் அதன் பொறுப்பாளர் என்றாலும் அல்லது அவற்றின் ஒரு கோட்டத்திற்கோ, கிளைக்கோ மேலாளர் என்றாலும் நீங்கள் அரசருக்கு ஒப்பானவரே. எங்கு நீங்கள் முதல் ஆளோ அங்கு நீங்கள் மன்னரே! அங்கு உங்கள் அரசாட்சியே!!
சற்றே எண்ணிப் பார்ப்போம். ஒரு பெரிய நிறுவனத்தை, அலுவலகத்தை நடத்துவது, நாட்டை நடத்துவது போலத்தானே! நாட்டுக்குப் பாதுகாப்பும் வளர்ச்சியும் வேண்டும். அதற்கு நல்ல மன்னரும், மந்திரிகளும், வரி வருமானமும் அவசியம். நிறுவனத்திற்கோ சந்தைப் போட்டியிலிருந்து பாதுகாப்பும் விற்பனை, வருவாய்களில் வளர்ச்சியும் வேண்டும். அதற்கு நல்லதலைவரும் திறமையான பணியாளர்களும் வேண்டுமே. படை முதலிய ஆறு அங்கங்களைச் சிறப்பாகப் பெற்றவர் அரசருள் சிங்கம் என்கின்றது குறள்.
பணியாளர்கள் எனும் படை
உங்கள் எண்ணங்களைச் செயலாக்கக் கூடியவர்கள் பணியாளர்களே. அவர்களிடம் உங்கள் நிறுவனத்தின், அலுவலகத்தின் அல்லது துறையின் வரலாற்றை, பெருமையை, முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள். அது சென்றடைய வேண்டிய இலக்கை, அதற்கான பாதையை அதில் அவர்களின் பங்கை விளக்கிச் சொல்லுங்கள். படைக்கு நல்ல உணவுடன் பயிற்சியும் ஆயுதங்களும் வேண்டும். அத்துடன் நம்நாட்டைக் காக்க வேண்டுமென்ற வீரமும், வீரியமும் வேண்டும். பணியாளர்களுக்கோ நல்ல ஊதியத்துடன் பயிற்சியும் தேவையான உபகரணங்களும் கொடுங்கள் - முக்கியமாக அதிகாரம் அளியுங்கள். வியாபாரம் ஒரு போட்டி மட்டும் அல்ல ஒரு போரும் தான்!
படை வலியதாயிருந்தால் வெல்வது நிச்சயம். பணியாளர் திறனாளிகளாக இருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். பணியாளர்களிடம் அடிக்கடி யோசனை கேளுங்கள். முடியுமென்றால் அவற்றை உடனே நடைமுறைப்படுத்துங்கள். அவர்களது குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யுங்கள். நாம் நல்ல தலைவனுக்குக் கீழ் பணியாற்றுகிறோம் என்கின்ற எண்ணம் வரட்டும்; வளரட்டும்! பணியாளர்கள்தான் நம் படை, பலம்!
குறளின் ஆணை இதோ
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.