Published : 12 Jan 2015 10:38 AM
Last Updated : 12 Jan 2015 10:38 AM

வீட்டுக்கு வீடு சோலார்

மாற்று எரிசக்திகள் மற்றும் மரபுசாரா எரிசக்திகள் குறித்து உலகமே பேசிவருகிறது. குறிப்பாக மின் உற்பத்தியில் இந்த மரபுசார முறை வேகமாகப் பரவி வருகிறது. சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்வதுதான் சுற்று சூழலுக்கு பாதுகாப்பானது என்பதால் உலகம் முழுவதிலும் இப்புதிய தொழில்நுட்பம் பரவலாக பின்பற்றப்படுகிறது.

நமது தேவைக்கு ஏற்ப இயற்கையிடமிருந்தே எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அது. கொஞ்சம் கவனம் செலுத்தினால் நமது தேவையும் தீரும் தேவையில்லாத சர்ச்சைகளும் ஓயும். மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்கவில்லை என்று அலுத்துக் கொள் பவர்கள் இந்த மாற்று வழியை யோசித்து செயல் படுத்தலாம்.

வீடு கட்டும் செலவோடு இந்த செலவையும் சேர்த்து கணக்கிட்டால் எதிர்கால மின் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.

மின்சாரம் இல்லாத நேரங்களில் சமாளிக்கத்தான் இன்வெர்ட்டர் இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். அதற்கும் மின்சாரம் வேண்டும். மின்சாரம் எப்போது வரும் என்று காத்திருக்கவும் வேண்டும். ஆனால் சோலார் மின் உற்பத்தி என்பது எப்போதும் எந்த நேரமும் நமக்கு மின்சாரத்தைக் கொடுக்கக்கூடியது.

இப்போதைய மின்தேவைகளுக்காக மட்டுமல்ல, எதிர்காலத்தில் மின்தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புகளையும் கணக்கில் கொண்டால் இதை அமைத்துக் கொள்வது ரொம்பவும் புத்திசாலித்தனம் என்று சொல்லலாம். தவிர மின் கட்டணங்களும் அதிகரித்து கொண்டுதான் இருக்கும். இந்த சூழலில்தான் மாற்று மின் உற்பத்திக்கான தேவையும் எழுகிறது. இது முன்னோக்கி சிந்திக்கக்கூடிய முடிவாக இருக்கும்.

மரபு சார்ந்த மின் வாய்ப்புகளை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், நமக்குத் தேவையானதை நமது வீட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முயற்சிக்கலாம்.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் சூரிய மின் உற்பத்திக்கான ஊக்குவிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசும் சோலார் மின்சார உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

குஜராத் மாநில மக்கள் தங்களது மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வீட்டுக்கு வீடு சோலார் தகடுகளை அமைத்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள்.

வீட்டுத் தேவைகளுக்கு மட்டுமல்ல. விவசாயம் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கும் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சோலார் மின்சாரம் எடுப்பதற்கான தகடுகள் மற்றும் கருவிகளை அமைப்பதற்கான முதல்கட்ட செலவுகள் என்னவோ கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ஒரு முறை செலவு செய்துவிட்டால் அடுத்த இருபது வருடங்களுக்கு அதற்கு செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். தவிர தற்போது சந்தையில் தேவை குறைவாக உள்ளதால் விலை அதிகமாக உள்ளது. பரவலாக பயன்பாட்டுக்கு வரும்போது விலை குறைய வாய்ப்புகள் உள்ளன.

ஹைபிரிட்

சோலார் தகடுகள் மூலம் முன்சாரம் பெறுவது ஒரு வகை என்றால், காற்றாலை மின் உற்பத்தியும் மக்களுக்கு கை கொடுக்கிறது. காற்றாலை என்றதும் ராட்சத இறக்கை கொண்ட காற்றாடிகளை கற்பனை செய்ய வேண்டாம். வீட்டின் மொட்டை மாடியிலேயே சிறிய அளவில் அமைத்துக் கொள்ள முடியும். இந்த சிறிய காற்று மின் இயற்றியுடன் சோலார் தகடுகள் மூலமாகவும் மின் உற்பத்தி செய்வதுதான் ஹைபிரிட் முறை.

பகலில் சூரிய ஒளி மூலமும், இரவு மற்றும் மாலை வேளைகளில் இந்த காற்று மின் இயற்றி மூலமும் மின்சாரம் பெறலாம். காற்று வாகு உள்ள பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் இந்த முறையை செயல்படுத்தலாம். இந்த முறையின் மூலம் 30 முதல் 40 சதவீதம் வரை சோலார் தகடுகளிலிருந்தும் 70 அல்லது 60 சதவீதம் காற்று மின் இயற்றி மூலமும் மின்சாரம் பெறலாம்.

தேவை எவ்வளவு?

தினசரி வீட்டில் எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்பதை பொறுத்து ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளில் மூன்று முதல் ஐந்து யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடு என்றால் 1 கிலோவாட் யூனிட் போதும். இதைவிட அதிகமாக பயன்படுத்தும் வீடு என்றால் 2 கிலோவாட் அல்லது அதற்கும் அதிகமாக அமைத்துக் கொள்ளலாம்.

மின் மோட்டார்கள், ஏசி, மிக்ஸி, கிரைண்டர் என அனைத்து மின் சாதனங்களையும் இயக்க 5 கிலோவாட் வரை உற்பத்தி செய்யும் யூனிட் அமைத்துக் கொள்ளலாம். விவசாய மோட்டார் தேவைகளுக்கு 5 கிலோவாட் அமைத்துக் கொள்ளலாம். தற்போது சோலார் மின்சாரத்தில் இயங்கும் நீர் இறைக்கும் மின் மோட்டார்கள் வந்துள்ளன.

மின்சார சேமிப்பு

சோலார் மின் உற்பத்தி தகடுகள் மற்றும் காற்று மின் இயற்றி மூலம் நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது ஒரு வகை என்றால் மின்சாரத்தை பேட்டரிகள் மூலம் சேமித்தும் பயன்படுத்த முடியும். பகல் நேரங்களில் நேரடியாக பயன்படுத்திக் கொண்டு, இரவு நேரங்களில் பேட்டரிகளில் சேமித்த மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.

செலவு மற்றும் பராமரிப்பு

சோலார் மின் உற்பத்தி தகடுகள் மற்றும் ஹைபிரிட் அமைத்துக் கொடுப்பதற்கு தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் விலை நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விலையாகவோ, அல்லது மின்சாரத்தை சேமிக்கும் வசதிக்கும் சேர்த்தும் விலை குறிப்பிடப்படலாம்.

ஆனால் 1 கிலோவாட் மின் உற்பத்தி தகடுகள் அமைக்க தோராயமாக ரூ. 3 லட்சம் வரை ஆகும். ஆனால் 5 கிலோவாட் வரை அமைத்துக் கொள்ள தோரயமாக ரூ.10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை செலவாகும். மின்சார சேமிப்பு பேட்டரிகளை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பேனல்களை அவ்வப்போது துடைத்து சுத்தப்படுத்துவது மற்றும் பேட்டரிகளுக்கான டிஸ்டில்ட் வாட்டர் அவ்வப்போது மாற்றும் செலவுகள் உண்டு.

அரசு மானியங்கள்

மத்திய/மாநில அரசின் மரபு சாரா எரிசக்தி துறை சார்ந்த மானியங்கள் கிடைக்கும். சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட அளவின்படி மொத்த செலவில் 15 சதவீதம் மானியம் உண்டு. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, முதியோர் ஓய்வு இல்லங்கள், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், சமூல நல கூடங்கள், பொது பயன்பட்டு இடங்கள், பொது பயன்பாட்டுக்கு அளிக்கும் இடங்களில் அமைக்கும்போது மானியம் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இதற்கு அடுத்து வீடுகள், தனிநபர்களுக்கான மானியமும், தனியார் நிறுவனங்கள், மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலகங்களுக்கான மானியமும் அனுமதிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் ஆதார் கணக்கின் அடிப்படையில் நேரடியாக அளிக்கும் வகையில் மானிய திட்டம் செயல்படுகிறது. அதிகபட்சமாக 500 கிலோ வாட் உற்பத்தி வரை அனுமதிக்கப்படுகிறது.

இந்த மாற்று முறை மின் உற்பத்தியை அமைத்துக் கொள்வது அதிக செலவாக இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். வீடு கட்டும் செலவோடு இந்த செலவையும் சேர்த்து கணக்கிட்டால் எதிர்கால மின் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம். இதை செலவாக பார்க்காமல் மின் தட்டுப்பாடுக்கான தீர்வாக பார்த்தால் இந்த விலை கொடுப்பதற்கு உங்கள் மனமும், பணமும் தயாராகவே இருக்கும்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x