

இந்த வருடம் பொதுத் துறை வங்கிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ‘அறிவு சங்கமம்’ (Gyan Sangam) என்ற இரண்டு நாள் (ஜனவரி 2 மற்றும் 3) கருத்தரங்கம் மத்திய அரசால் நடத்தப்பட்டது. இதன் முடிவில் பொதுத் துறை வங்கிகளுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கவேண்டும் என்ற முக்கிய பரிந்துரையுடன் வேறு பல நடவடிக்கைகளையும் இந்தக் கூட்டம் பிரதமரிடம் தெரிவித்தது.
பொதுத் துறை வங்கித் தலைவர்கள், வங்கி துறை நிபுணர்கள், மத்திய அரசின் நிதித் துறை அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் அதிகாரிகள், நிதி அமைச்சர், இணை அமைச்சர் என்று பலரும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பங்குகொண்டு பொதுத் துறை வங்கிகள் பற்றிய அனைத்து அம்சங்களையும் விவாதித்து இறுதியில் கலந்துகொண்ட பிரதமரிடம் பல பரிந்துரைகளை அளித்தனர்.
நிதி இடர் மேலாண்மை (financial risk management), தொழில்நுட்பம், எல்லாருக்கும் நிதிச் சேவை, திறமையான ஆளுமைக்காக வங்கிகளை சீரமைப்பது, என்று பலப் பிரிவுகளில் விவாதங்கள் நடைபெற்றன. இதில் பொதுத்துறை வங்கிகளை சீரமைப்பது மிக முக்கிய இடத்தை பிடித்தது.
பொதுத் துறை வங்கிகளின் பிரச்சனைகள்
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அதனின் மொத்த கடனளிப்பில் 2013-ல் 3.8% ஆகவும் 2014யில் 4.7%ஆக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் தனியார் வங்கிகளில் இது 1.9%லிருந்து 1.7%ஆகக் குறைந்துள்ளது. பொதுவாக பொருளாதாரம் சுணக்கமாக இருப்பது வாராக்கடன் அதிகரிப்புக்கான காரணம் என்றாலும், பொதுத் துறை வங்கிகளில் இதன் விழுக்காடு அதிகமாகவும் தொடர்ந்து அதிகரிப்பதும் கூர்ந்து ஆராயப்படவேண்டியவை.
வங்கிகள் கடன் கொடுப்பதிலும், கடனை தள்ளுபடி செய்வதிலும் அதிக அளவில் அரசியல் குறுக்கீடு இருப்பது ஒரு முக்கிய காரணம். இரண்டாவதாக மிக சிறந்த வங்கி நிர்வாகிகளை பொதுத் துறை வங்கிகள் ஈர்ப்பதில்லை. பல வங்கிகளில் தலைவர் இல்லாமலே பல மாதங்கள் இருக்கின்றன. அவ்வங்கிகளில் தலைவர்களை நியமிப்பதிலும் அரசின் தலையீடு அதிகமாக உள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்ட தலைவர்களும் சிறிய காலமே பணியில் இருப்பதால் வங்கியின் மேலாண்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
பொதுவாக பொதுத் துறை வங்கி களின் தலைவர்களின் வருட சம்பளம் அதைவிட சிறியதாக உள்ள தனியார் துறை வங்கிகளின் தலைவர்களின் வருமானத்தில் 10%கூட இல்லை. மூன்றா வதாக வங்கிகளின் செயல்பாடுகளில் நிதி அமைச்சகத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. வங்கித் துறையுடன் தொடர்பில்லாதவர்களை வங்கி மேலாண்மை குழுவில் நியமிப்பதும் தொடர்கிறது. அவ்வப்போது வங்கியின் செயல்களைக் கட்டுபடுத்தும் வண்ணம் நிதி அமைச்சகம் சுற்றறிக்கைகளை அனுப்புகிறது. இவ்வாறு பொதுத் துறை வங்கிகள் திறமையாக செயல்படுவதற்கான சூழல் இல்லாமல் இருக்கிறது.
வரும் காலங்களில் வங்கிகள் தங்களின் முதலீட்டு அளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஒவ்வொரு வங்கி யிலும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் வைப்புதொகையைத்தான் கடனாக வங்கிகள் கொடுக்கின்றன. வாராக்கடன் எவ்விதத்திலும் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை பாதிக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் மட்டுமே வங்கிகள் தங்களின் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த முடியும். இதற்காக வங்கிகள் கடனுக்கேற்ற முதலாக்கத்தை பெருக்க வேண்டும். BASEL III என்ற வங்கி கட்டுப்பாடு விதிகளின்படி இந்தியாவின் வங்கிகளில் 2019-க்குள் 200 பில்லியன் டாலர் முதலீடு செய்யவேண்டும். இந்த கூடுதல் முதலீட்டை எவ்வாறு பெறுவது?
தீர்வு என்ன?
பொதுத் துறை வங்கிகளில் அரசின் தலையீட்டை குறைக்கவும், மேலாண் மையில் மாற்றங்களை செய்யவும், கூடுதல் முதலீட்டை ஈர்க்கவும் பொதுத் துறை வங்கிகளின் அரசு பங்கை விற்றுவிடவேண்டும் என்று இந்த ‘அறிவு சங்கமத்தில்’ பரிந்துரைக்கப்பட்டது. பொது துறை வங்கிகளில் அரசின் பங்கு 50% விடக்குறைவாக இருந்தால் நேரடியாக அரசு இந்த வங்கிகளைக் கட்டுப்படுத்த முடியாது.
அதே நேரத்தில் வங்கிகளின் தலைவர் முதல் மேலாண்மைக் குழு நிர்ணயிப்பதுவரை எல்லாவற்றையும் இந்த வங்கி முதலீட்டாளர்கள் (அரசையும் சேர்த்து) தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியும். இதனால் வங்கியில் திறன் மேம்படமுடியும். அதேபோல், வங்கிகள் கடன்கொடுப்பது முதல் கடன் தள்ளுபடி செய்வதுவரை வரை தன்னிச்சையாக தீர்மானிக்கலாம். வங்கியின் கொள்கை முடிவில் அரசு தலையிட முடியாது.
பொதுத் துறை வங்கிகளின் பங்குகளை விற்பதினால் அரசுக்கு உடனடி வருவாய் வரும் என்பது அரசுக்கு சாதகமான ஒன்று. ஆனால், அரசு தன்னுடைய அதிகாரத்தை விட்டுக்கொடுக்ககூடிய அளவிற்கு பங்குகளை விற்குமா என்பதை பார்க்கவேண்டும். பொதுத்துறை வங்கிகள் வியாபார நோக்கோடு செயல்பட போதுமான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமரும் நிதி அமைச்சரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், மக்களின் நலனுக்காக அரசின் தலையீடு இருக்கவேண்டும் என்பதையும் பிரதமர் கூறினார்.
இப்போதுகூட தாங்கள் அரசு வங்கிகள் என்பதை சொல்லித்தான் பொதுத் துறை வங்கிகள் வைப்பு தொகை கேட்கின்றன.பொதுத் துறை வங்கிகள் அரசு வங்கிகள் என்ற நிலையை இழக்கும் போது, அவற்றின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் குறையும். மற்ற அரசு துறை நிறுவனங்கள்கூட அதில் வைப்புத்தொகை வைக்கத் தயங்கும்.
மேலும் இந்த வங்கிகளின் முடிவுகள் அரசின் கண்காணிப்பிலும் ஊழல் தடுப்பு அமைப்பின் பார்வையிலிருந்தும் விலகுவதும் நல்லதல்ல என்று பலர் சுட்டுகின்றனர். இது தொடர்பாக வங்கிகள் தேசியமயமாக்கும் சட்டத்தையும் மாற்ற வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது பொதுத் துறை வங்கிகளில் தனியார் துறை போன்றதொரு மேலாண்மை குழுமம் மாற்றம் விரைவில் வராது.
பொதுத் துறை வங்கி களின் தலைவர்களின் வருட சம்பளம் அதைவிட சிறியதாக உள்ள தனியார் துறை வங்கிகளின் தலைவர்களின் வருமானத்தில் 10%கூட இல்லை. மூன்றா வதாக வங்கிகளின் செயல்பாடுகளில் நிதி அமைச்சகத்தின் தலையீடு அதிகமாக உள்ளது.
seenu242@gmail.com