

பாலியல் குற்றம், பணம் கையாடல், வேலையில் தொடர்ந்து சரியாக செயல்படாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் பணிநீக்கம் செய்வதை தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் லாப வரம்பை அதிகரிப்பதற்காக, அதிக சம்பளம் வாங்குபவர்களை குறி வைத்து நீக்குவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்த வேலையை, டிசிஎஸ்(Tata consultancy services) செய்வதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புலம்புகிறார்கள். டிசிஎஸ்-ல் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 10 சதவீதம் பேரை வேலையை விட்டு நீக்குவதற்கு அதாவது சுமார் 30,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் டிசிஎஸ் நிர்வாகம் விடுத்த அறிக்கையில், பணியாளர்களின் செயல் பாடுகளில் செயல்படும் நிறுவனம் இது, அதனால் சரியாக செயல்படாத பணியாளர்களை கால அவகாசம் கொடுத்து நீக்குவது வழக்கமாக நடக்கும் நடைமுறைதான். இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை, இவ்வாறு நீக்கப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரைதானிருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
நம்மிடம் பேசிய டிசிஎஸ் பணியாளர்கள் இதனை முற்றிலும் மறுக்கிறார்கள். கடந்த சில நாட்களாக கணிசமாக நபர்களை வெளியே அனுப்பிக்கொண்டு வருகிறார்கள். இங்கு பணிபுரியும் உயரதிகாரிகளுக்கே இது தெரியவில்லை.
இந்த வேலை நீக்கம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நேரடியாக தலைமை அலுவலகத்தில் இருந்து குரூப் லீட்-க்கு வருகிறது. அவர் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து தகவல் சொல்லி ஒரு மாதத்துக்குள் அவரிடம் இருந்து நிறுவனத்துக்கு தேவையான தகவல்களை வாங்கி விடுகிறார்கள்.
அதிலும் உங்களை வேலையை விட்டு நீக்குகிறோம் என்று தெரிவிக்காமல் your skillset is no longer required for us என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது உங்களது தேவை நிறுவனத்துக்கு தேவை இல்லை என்றும் உங்கள் அறிவினை எங்கள் நிறுவனத்தில் பயன்படுத்த முடியவில்லை, அதனால் நீங்கள் தேவை இல்லை என்றும் கடிதம் கொடுக்கிறார்கள் என்று கூறினார்.
இலக்கு யார்?
ஒரு சில ஆண்டுகளில் வேறு நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள், அதிக சம்பளத்துக்கு வந்திருப்பார்கள். அதேபோல டிசிஎஸ்-ல் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பணிபுரிபவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
பணியாளர்களின் செயல்பாடுகளை பொறுத்து அவர்களை ஏ,பி,சி,டி, மற்றும் இ என்று வகைப்படுத்துகிறார்கள். இதில் தொடர்ந்து இ பிரிவில் இருப்பவர்கள் நீக்கப்பட்டு வந்தார்கள். இது வழக்கமான நடைமுறை. ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்களாக சி (சி,சி,சி) பிரிவில் இருப்பவர்களையும் வேலையை விட்டு அனுப்புகிறது.
டிசிஎஸ். நிறுவனத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவர்கள்தான் சி பிரிவில் இருப்பார்கள். இவர்கள் மிகச்சிறப்பான பணியாளர்களும் கிடையாது அதேசமயத்தில் மோசமான பணியாளர்களும் கிடையாது. உள்நாட்டில் இவர்களை குறி வைத்திருக்கிறார்கள்.
வகைப்படுத்தும் மோசடி
பணியாளர்கள் செயல்பாட்டை பொறுத்து ஏ.பி, என எத்தனை வகைப்படுத்தினாலும் இதிலும் ஒரு மோசடி இருக்கிறது. ஒரு குழுவில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால் அனைவருக்கும் ஏ - பிரிவினை அந்த மேனேஜர் கொடுக்க முடியாது. ஒவ்வொரு பிரிவிலும் இத்தனை சதவீதத்தை அவர் ’நிரப்பியாக’ வேண்டும் என்பது அவருக்கு கொடுக்கபட்டிருக்கும் விதி.
அந்த குழுவில் யாருக்கும் ஏ பிரிவு வழங்காமல் அதனை பி, மற்றும் சி பிரிவுகளில் பயன்படுத்துவதுதான், ஒரு மேனேஜர் அதிகபட்சமாக செய்யக்கூடிய கருணை. பி மற்றும் சி பிரிவில் அதிகமாக ஒதுக்கீடு செய்யும் போது இ பிரிவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையும். அவ்வளவே.
அலுவலக நிலைமை என்ன?
டிசிஎஸ் அலுவலகங்களில் ரெஸ்ட் ரூம், சாப்பிடும் இடம் என அனைத்து இடங்களில் இதைப் பற்றியே பேச்சு இருப்பதாக அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து அவர்களுடைய உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவரும் விசாரிப்பதால் அங்கு பணிபுரிபவர்கள் இதை தாண்டி வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை. இதனால் அலுவலகம் முழுவதும் அமைதியற்ற சூழலே இருக்கிறது.
என்ன காரணம்?
2008/09-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி வந்தபோது டிசிஎஸ் நிறுவனத்தில் 1.3 லட்சம் அளவுக்கு இருந்தார்கள். அப்போது சுமார் 3,000 பணியாளர்கள் மட்டுமே நீக்கினார்கள். அந்த சூழ்நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவு. அப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவராக எஸ்.ராமதுரை இருந்தார். 2009-ம் ஆண்டு என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
முதலீட்டாளர்கள் மற்றும் அனலிஸ்ட்களுக்கு லாப வரம்பை அதிகரிக்க, தீவிரம் காட்டுகிறார் என்று நிறுவன பணியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.டிசிஎஸ் நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்தில் பணியாளர்களுக்கு மட்டும் 37 சதவீதம் தொகை செலவாகிறது. இதைக் குறைப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர்களை நீக்குகிறார்.
தவிர அனலிஸ்ட்களுக்கு இன்னொரு முக்கியமான விஷயம் ஒரு பணியாளர் மூலம் கிடைக்கும் வருமானம். இதில் accenture மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
அதிக சம்பளம் வாங்கும் பணி யாளர்களை நீக்கிவிட்டு, குறைவான சம்பளத்தில் ஆட்களை எடுக்கும் போது பணியாளர்களுக்கு செலவாகும் தொகையும் குறையும், அதேசமயத்தில் ஒரு பணியாளர் மூலம் கிடைக்கும் வருமானமும் உயரும் என்பதால் அதற்கு தேவையான நடவடிக்கையை டிசிஎஸ் எடுக்கிறது என்றும் நம்மிடம் பேசிய அந்த பணியாளர் தெரிவித்தார்.
விளைவு என்ன?
இந்த நடவடிக்கை பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டிசிஎஸ்-ல் வேலைக்கு சேர்ந்து, இதுவே போதும் வேறு வேலை எதுவும் வேண்டாம் என்று மனநிலையில் இருந்தவர்கள் பலர்.
ஆனால் இப்போது வேறு வேலை தேடினால் என்ன என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் இப்போது வெளியேறினால், டிசிஎஸ் வெளியேற்றிவிட்டது என்றாகிவிடும் என்பதால் இந்த பிரச்சினை முடிந்ததும் வெளியேற காத்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களுக்கு பிறகு டிசிஎஸ்-ல் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்கிறார்கள்.
தவிர, இனி புதிதாக டிசிஎஸ் நிறுவனத்துக்கு நல்ல பணியாளர்கள் வருவதற்கும் யோசிப்பார்கள் என்றார்கள்.
டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பிரச்சினை வந்த போது 30,000 பேரை நீக்க வேண்டிய சூழ்நிலை. 1992-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற இரானி, இந்த பிரச்சினையை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துக்கும் இரு தரப்புக்கும் சாதகமாக முடித்தார். ஆனால், இப்போது அதே டாடா குழுமம் வேறு மாதிரி யோசிக்கிறது.
இன்போசிஸ் கதை
2009-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐரேஸ் (Infosys Role and Career Enhancement) என்னும் திட்டத்தை இன்போசிஸ் அறிவித்தது. இதனை அப்போதைய ஹெச்.ஆர்.பிரிவு தலைவர் டிவி மோகன் தாஸ் பாய் கொண்டுவந்தார். இந்த திட்டத்தால் பணியாளர்கள் பலரும் வெளியேறினர்.
சமீபத்தில் இன்போசிஸ் மனிதவள பிரிவு தலைவர் ஸ்ரீகந்தன் மூர்த்தி கூறும் போது ’ஐரேஸ்’ திட்டத்தின் பாதிப்பில் இருந்து இன்போசிஸ் இன்னும் மீளவில்லை என்று கூறினார். சமீபத்தில் கூட இன்போசிஸ் தலைவர் விஷால் சிக்கா, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பணியாளர்கள் மீண்டும் வாருங்கள் என்று அழைத்தார்.
ஒரு வேளை 2020-ம் ஆண்டு புதிதாக பதவி ஏற்கும் டிசிஎஸ் சி.இ.ஓ. இப்போது விஷால் சிக்கா உதிர்த்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்.
அதிக சம்பளம் வாங்கும் பணியாளர்களை நீக்கிவிட்டு, குறைவான சம்பளத்தில் ஆட்களை எடுக்கும் போது பணியாளர்களுக்கு செலவாகும் தொகையும் குறையும், அதேசமயத்தில் ஒரு பணியாளர் மூலம் கிடைக்கும் வருமானமும் உயரும்.