

மந்திரியின் வேலை என்ன? வரும்பொருள் உரைப்பதும், வருமுன் காப்பதும்தானே! மன்னர் கேட்காவிட்டாலும், நாட்டில் நடந்தவற்றில் முக்கியமானவற்றை, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வது அல்லவா? மாதம் மும்மாரி பொழிகின்றதா இல்லையா என்று சொல்வதிலிருந்து தொடங்குகிறது இக்கடமை.
இக்காலச் சூழலில் பணியாளரின் நிலையும் இதுதான். மேலாளர் கேட்கும்பொழுது சொல்லிக் கொள்ளலாம் என்று இருக்க முடியாது; கூடாது. எனவே, அரசர் கேட்காவிட்டாலும்; அவசியமானதைச் சொல்லிவிடு எனச் சொல்லும் குறள் நமக்கும் பொருந்தும்.
ஒரு பெரிய நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு நீங்கள்; மேலாளர் எனக் கொள்வோம். உங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து உயரதிகாரி ஒருவர் உங்கள் கிளைக்கு வருகை தருகின்றார்; அப்பொழுது கிளையின் வலிமைகள் பலவீனங்கள், நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் முதலியவற்றை அவர் கேட்காவிட்டாலும் நீங்களாகவே சொல்ல வேண்டுமில்லையா?
எந்த ஒரு பணியாளரும் மேலதிகாரிக்கு அவ்வப்பொழுது என்ன நடந்தது, ஏன் நடந்தது, அடுத்தது எது நடக்கக் கூடும், அதை எப்படி எதிர் கொள்வது என்று சொல்வதுதானே முறை. ஏதேனும் தவறு நடந்திருந்தாலும், யார் மேலேனும் சந்தேகம் இருந்தாலும் சொல்லிவிடுங்கள் கடமையிலிருந்து வழுவாதீர்கள்.
பலரும் நல்ல செய்திகளைச் சொல்வதற்கு முந்துவார்கள். கெட்ட செய்திகளை வேறு யாரேனும் சொல்லித் தொலையட்டுமே என்று தவிர்த்து விடுவார்கள். உதாரணமாக தங்கள் கீழ் வேலை செய்பவர் நிதிமோசடி செய்து விட்டால், நம்மேலும் பழிவருமே என்று அஞ்சி மேலிடத்தில் சொல்வதைத் தள்ளிப் போடுவார்கள்.
ஆனால் பின்னால் அது விபரம் வெளிவரும் பொழுது மோசடி நடக்க வழிவிட்டது ஒரு குற்றம், உடனே தெரிவிக்காதது மற்றொரு குற்றம் என உருவெடுக்கும். மேலும் இவற்றை பிரச்சினைகளாக மட்டும் முன் வைக்காமல் அதை உங்கள் நோக்கில் எப்படி சமாளிக்கலாம் என்றும் சொன்னால் தலைமையகத்திற்கு உதவியாக இருக்குமே.
அடடே உங்கள் கடமையும் அது தானோ?
அடுத்து, அரசரே விரும்பிக் கேட்டாலும் அமைச்சர் பயனற்றவற்றைப் பேசக் கூடாது என்கிறார் வள்ளுவர். உதாரணமாக உங்கள் மேலதிகாரி மாற்றலாகிச் சென்ற பிறகு புதிய அதிகாரி பொறுப்பேற்று இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களிடம் பழைய அதிகா ரியைப் பற்றி விசாரிக்கக் கூடும். நீங்கலாக ஏதேனும் கேட்கக் கூடும். முன்னவரைக் குறை கூறினால் புதியவருக்குப் பிடிக்குமே என்று எண்ணி வலையில் விழாதீர்கள்.
அலுவலக விழாக்களில் கூட சக ஊழியரிடம் பேசுவது வேறு; மேலதிகாரியிடம் பேசுவது வேறு. மேலதிகாரியிடம் கேலி, கிண்டல் அறவே கூடாது. மற்ற அலுவலர்களுக்கு தயிர்சாதம், நாரதர் என்றும் அல்டாப் சுந்தரி, லக்கி ராணி என்றும் பேர் வைத்துப்பேசுவது அற்ப மகிழ்ச்சியைத் தரலாம். அதனால் உங்கள் மேல் உள்ள மதிப்பு சற்று குறையவே செய்யும்!
மேலதிகாரியிடம் பயனற்றவற்றைப் பேசக் கூடாது என்பது ஆண்டாண்டு காலமாய் பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை! தெய்வப் புலவரின் குறள் இதோ
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com