Published : 26 Jan 2015 01:45 PM
Last Updated : 26 Jan 2015 01:45 PM
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். அமெரிக்க அதிபரின் வருகை இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவியேற்று இரண்டாவது முறையாக பதவியில் நீடிக்கும் ஒபாமா கடந்த 6 ஆண்டுகளில் 48 நாடுகளில் பயணம் செய்துள்ளார். இவை தவிர வாடிகன் நகரம் மற்றும் மேற்குக் கரை பகுதியிலும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். இவர் அதிகபட்சமாக 5 முறை மெக்சிகோ மற்றும் பிரான்ஸுக்குச் சென்றுள்ளார். ஆப்கனிஸ்தான், தென் கொரியா, இங்கிலாந்தில் நான்கு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
20-ம் நூற்றாண்டில்தான் அமெரிக்க அதிபர்கள் விமான பயணம் மேற்கொள்வது ஆரம்பமானது. அமெரிக்காவின் முதல் அதிபர் முதல் 6-வதாக பதவிவகித்த அதிபர் வரை கப்பலில்தான் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். முதல் உலகப் போருக்குப் பிறகு அப்போதைய அதிபர் 7 மாதம் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இரண்டாம் உலகப் போர் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க அடுத்துவந்த அதிபர்கள் விமானத்தில் பயணிக்கத் தொடங்கினர்.
டி ஐஸ்னோவர்தான் முதலில் ஜெட் விமானத்தில் பயணித்தார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபரான பிறகுதான் அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பயண எண்ணிக்கை அதிகரித்தது. அதிபர் பயணத்துக்கென உருவாக்கப்பட்ட ஏர்போர்ஸ் – 1 விமானம் பறக்கும் வெள்ளை மாளிகை எனலாம்.
கம்போடியா மற்றும் மியான்மரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையும் ஒபாமாவைச் சாரும்.
ஒபாமாவுடன் அமெரிக்க தொழிலதிபர்கள் குழு ஹனிவெல் இண்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் டேவ் கோடே தலைமையில் இந்தியா வருகிறது. இந்தியாவின் தொழிலதிபர்கள் டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி தலைமையில் அமெரிக்கக் குழுவினருடன் பேச்சு நடத்த உள்ளனர். இந்திய தரப்பில் 17 பேரடங்கிய குழு பங்கேற்பதால், அமெரிக்காவிலும் இதே அளவு எண்ணிக்கையிலான தொழிலதிபர்கள் இடம்பெறுகின்றனர்.
அமெரிக்க நிறுவனங்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் முதலீடு செய்த தொகை 1,320 கோடி டாலராகும். இரு நாடுகளிடையிலான வர்த்தகம் தற்போது 10,000 கோடி டாலராக உள்ளது. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்க ஒபாமாவின் பயணம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் பயணத்தில் 7 முக்கிய பிரச்சினைகள் இடம்பெறும். பரிவர்த்தனை விலை ஒப்பந்தம், வர்த்தக ஒப்பந்தம், விசா மற்றும் ஊழியர் சட்டங்கள் மற்றும் அறிவுசார் காப்புரிமை, தட்ப வெப்ப மாற்றம், அணு ஆயுத ஒப்பந்தம், ரஷியாவின் மீதான சர்வதேச தடையை நீக்க வலியுறுத்தவது, பாகிஸ்தான் மீது அமெரிக்காவின் கொள்கை குறித்தும் விவாதிக்கப்படும்.