

பாஸ் (Boss) பணியாளர் உறவு என்பது அரசர், அமைச்சர் உறவுடன் ஒப்பிடக்கூடியது. எனவே, அரசரிடம் அமைச்சர் எப்பொழுது, எதைக்குறித்து, எவ்வாறு பேசலாம், பேசக்கூடாது என்று வள்ளுவர் கூறும் யதார்த்தமான அறிவுரைகள் நமக்கும் உதவும்.
மனநிலை அறிந்து பேசுக
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஓர் உயர் அதிகாரியையும் அவரது பணியாளரையும் எடுத்துக்கொள்வோம். அந்த உயர் அதிகாரி மாவட்ட ஆட்சியாளரிடம் ஏகமாகத் திட்டு வாங்கி, நொந்துபோய் உட்கார்ந்து இருக்கும் பொழுது அவரிடம் சென்று அப்பணியாளர் விடுமுறை வேண்டுமென்றோ, மறுநாள் தாமதமாய் வருவதற்கு அனுமதி வேண்டுமென்றோ கேட்டால் என்னவாகும்?
திங்கள்கிழமை காலையில் பல வேலைகள் காரணமாகக் குழப்பதிலோ, மதியவேளைப் பசியிலோ, அல்லது தலைமை அலுவலக ஆய்வுக் கூட்டத்திற்குச் செல்லும் மன அழுத்தத்திலோ, விமான நிலையம் செல்லும் அவசரத்திலோ இருக்கும் ஒருவரிடம் உங்கள் கோரிக்கையை வைக்கலாமா?
பொதுவாக ஒருவரின் மனநிலை அவரது முகத்தில் தெரிந்துவிடும். ஆனால் தங்களுக்கு உள்ள அவசரத்தில், ஒப்புதல் கிடைக்க வேண்டுமே என்கின்ற பதற்றத்தில் பலரும் இதை மறந்து விடுகின்றார்கள். சிக்கல் என்னவென்றால், பாஸ் ஒருமுறை மறுத்து விட்டால், அவரிடம் மீண்டும் சென்று அதைச் சரி செய்வது கடினம். அவர் கடிந்து கொண்டபின் இருதரப்பிலும் இறுக்கமே இருக்கும் இல்லையா?
விரும்புவதையே பேசுக
ஆமாம், ஆமாம், அரசருக்குப் பிடித்தவற்றை மட்டுமே அமைச்சர் பேசவேண்டும் என்கின்றார் வள்ளுவர். இது எப்படி சரியாகும் - மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் ஆயிற்றே எனக் கேள்வி எழுகின்றதா? உங்கள் வேலைக்குத் தொடர்பில்லாத மற்றைய பொதுப்படையான பேச்சுக்களின் பொழுது மன்னருக்குப் பிடிக்காதவற்றைப் பேச வேண்டாம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
பணி தொடர்பான அவசியமான ஆலோசனைகளை அமைச்சர் சொல்லியே ஆக வேண்டும் என்று வள்ளுவர் சொல்வதை பின்னொரு குறளில் பார்க்கலாம்.
பாஸுக்கும் மற்ற மனிதர்களைப் போல விருப்பு வெறுப்புக்கள் இருக்குமே! அவர் ஆராதிக்கும் நூல், பிடித்த பாடகர், விரும்பும் நடிகர், கொண்டாடும் விளையாட்டு என்று இருக்காதா? அலுவலக வேலை நிமித்தமாக அவருடன் பயணிக்கவோ, உணவருந்தவோ நேரிடலாம்; அல்லது திருமண வரவேற்பு போன்ற பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டியதிருக்கலாம். இச்சந்தர்ப்பங்களில் உங்கள் ரசனை அவருடையதிலிருந்து மாறுபட்டாலும் அவருக்குப் பிடித்தவற்றைக் குறை கூறாதீர்கள்.
நீங்கள் ஒன்றும் பாஸை பட்டிமன்றத்தில் எதிர் கொள்ளவில்லையே. உங்களுக்கு அவருடன் வாக்குவாதத்தில் வெற்றி பெறுவதை விட அவரின் நல்லெண்ணத்தைப் பெறுவதுதானே உதவும்.
வான்புகழ் வள்ளுவரின் குறள் இதோ.
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com