சரிவில் யூரோ- வெளியேறத் துடிக்கும் கிரீஸ்

சரிவில் யூரோ- வெளியேறத் துடிக்கும் கிரீஸ்
Updated on
2 min read

ஐரோப்பாவில் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்பதெல்லாம் இப்போது பழைய செய்தியாகிவிட்டது. அதை தாண்டி பல மாற்றங்களை எதிர்க்கொள்ள தயாராகி வருகிறது ஐரோப்பிய யூனியன்.

மாற்றங்களுக்கு செல்வதற்கு முன் ஒரு சிறு பிளாஷ்பேக்

1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பாவில் இருக்கும் 19 நாடுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு பொது நாணயமாக யூரோ கொண்டுவரப்பட்டது. ஒரு யூரோ 1.1789 டாலர் என்ற மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த மதிப்பில் இருந்து சரிந்தாலும் பிறகு உயர ஆரம்பித்தது.

ஆனால் கடந்த புதன் கிழமை யூரோவின் மதிப்பு ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்து 1.175 டாலர் என்னும் அளவில் சரிந்தது. அதாவது யூரோ ஆரம்பித்த இடத்துக்கே வந்திருக்கிறது.

என்ன காரணம்?

யூரோ தொடர்ந்து சரிய என்ன காரணம் என்று கரன்ஸி அனலிஸ்ட்களுடன் பேசிய போது அவர்கள் பல தகவல்களை சொன்னார்கள். முதலாவது அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வர ஆரம்பித்திருக்கிறது. வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல புள்ளி விவரங்கள் சாதகமாக இருக்கின்றன. இதனால் இதுவரை கொடுத்து வந்த ஊக்க சலுகைகளை நிறுத்தி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வேலையை அமெரிக்கா தொடங்கி இருக்கிறது.

ஆனால், ஐரோப்பிய யூனியனில் அதற்கான அறிகுறிகள் இன்னும் தெரிவில்லை. இந்த நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கி ஊக்க நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறது. அதாவது கூடுதலாக பணத்தை அச்சடிக்கத் தயாராகி வருகிறது.

இப்படி ஊக்க நடவடிக்கைகள் அதிகரிக்கும் போது யூரோவின் மதிப்பு சரியும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்த தயாராவதால் மற்ற நாடுகளின் நாணய மதிப்புக்கு எதிராக டாலரின் மதிப்பு உயரும்.

இது தவிர ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கியின் அந்நிய செலாவணியில் இருக்கும் யூரோவை விற்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட வங்கிகள் எடுத்து வருகின்றன. தவிர ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பல நாடுகள் குறைந்த பணவீக்கம் என்ற நிலையில் இருந்து பணவாட்டம் நிலைக்கு வரும் என்று கணிக்கப்பட்டிக்கிறது.

ஒரு பக்கம் அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் டாலரின் ஏற்றம் மறு பக்கம் ஐரோப்பிய யூனியன் மந்தநிலை ஆகிய காரணங்களால் யூரோ சரிகிறது. இந்த நிலையில் கிரீஸின் பிரச்சினையும் பூதாகரமாகி வருகிறது.

வெளியேற துடிக்கும் கிரீஸ்

கிரீஸ் நாட்டில் கடன் அதிகமாகி விட்டது. வளர்ச்சி குறைந்து விட்டது என்பதெல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. இப்போது Stavros Theodorakis மூலம் பிரச்சினை வரலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் பத்திரிகையாளரான இவர் Potami என்னும் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். இந்த கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை (மார்ச் 2014 ஆரம்பிக்கப்பட்டது). இந்த நிலையில் வரும் ஜனவரி 25-ம் தேதி கிரீஸில் தேர்தல் நடக்க இருக்கிறது. கருத்துக்கணிப்புகள் Stavros Theodorakis வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றது. இவர் யூரோவில் இருந்து கிரீஸ் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு வேளை தேர்தல் முடிவு இவருக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் கிரீஸ் வெளியேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in